மல்லியப்பு சந்தி திலகர்
தற்கால இலக்கிய செயற்பாடுகளில் உயிர்த்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இலக்கிய செயலாக ‘இலக்கிய சந்திப்பு’ இயக்கத்தை கொள்ள முடியும். தலைவர், செயலாளர் என பதவிகள் இல்லை. ஆனால், இதுவரை 45ஆவது சந்திப்புகளை நடத்தி உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது ‘இலக்கியசந்திப்பு’ குறித்து வாசித்திருந்தாலும் முதன்முதலாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42ஆவது இலக்கிய சந்திப்பில் பங்குபற்றி கட்டுரை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சந்திப்பு இலக்கிய நட்புகளின் புதிய வெளிகளை அறிமுகப்படுத்தியது. அதற்கு பின்னர் இடம்பெற்ற ஜேர்மன், நோர்வே சந்திப்புகளில் கலந்துகொள்ள முயற்சித்தபோதும் வாய்ப்பு அமையவில்லை. எனினும் மீண்டும் இலங்கையில் (கிழக்கிலங்கையில்) இலக்கிய சந்திப்பு என்றதும் அதில் மலையகத்திற்கென தனியமர்வு என்றதும் உற்சாகத்துடன் இணைந்துகொள்ள முடிந்தது.
இரண்டாம் நாளின் முதல் அமர்வாக ‘மலையகம் : வரலாறும் வாழ்வியலும்’ என்ற அரங்கத்தின் இணைப்பாளர் பொறுப்பை எனக்கு வழங்கியிருந்தது ஏற்பாட்டுக் குழு. அமர்வு பற்றி பின்னர் பார்க்கலாம்.
மிகுந்த வேலைப்பளுவும் மன அழுத்தமும் நிறைந்த ஜூலை ஆகஸ்ட் மாத களப்பணிகளில் இருந்து 18ஆம் திகதி விடுதலை கிடைத்தது. 22, 23ஆம் திகதிகளில் ‘இலக்கிய சந்திப்பு’. இந்த நாட்களின் வருகையை ஆவலுடன் எதிர்கொண்டிருந்தது மனது. கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் அவ்வப்போது அதனை (Refresh)பண்ணிவிடுவோம். அதுபோல ஒவ்வொருவரும் தன்னைப்புதுப்பித்துக் கொள்ள (Refresh) இலக்கியம் சிறந்த சாதனம்.
அந்த வகையில் இந்த திகதிகளில் எனக்கு இலக்கியசந்திப்பு மிகவும் அவசியமானதொன்றாகவே அமைந்தது.
21ஆம் திகதி இரவு என்னுடைய ஏற்பாட்டில் மலையக அரங்கிற்கான ஆளுமைகளான தெளிவத்தை ஜோசப், மு.சிவலிங்கம், மு.நித்தியானந்தன் (லன்டனில் இருந்து வருகை தந்திருக்கும் மலையக ஆய்வாளர்), இரா.ரமேஸ் ஆகியோரோடு எனது குடும்பத்தவர்களுடன் மட்டக்களப்பு நோக்கி விரைந்தோம். லெனின் மதிவானம் ஹட்டனில் இருந்து நேரடியாக மட்டக்களப்பு வருவதாக உறுதியளித்தபோதும் அவ்வாறு நிகழவில்லை. ஆனாலும் மு.நித்தியானந்தன் எனும் ஆளுமையினால் ‘மலையக ஆய்வு மற்றும் திறனாய்வு இலக்கியம்” எனும் தலைப்பு கலந்துரையாடப்பட்டது. அவருடன் அரங்கத்தில் அமர்ந்து உரையாற்றுவதே ஒரு இனிய அனுபவமாக மாறியது.
இலக்கிய சந்திப்பு ஏற்பாடுகளில் பங்கெடுத்துக்கொண்ட அசுரா, விஜி, ஸ்டாலின், இர்பான் தொலைபேசி வழி தொடர்பில் இருந்தார்கள். இர்பான் தனதில்லத்தில் தந்த வண்டப்பம், பாலப்பம், இடியப்பம் என அப்பத்தின் வகையறாக்கள் அவரது ஆழமான அன்பின் வெளிப்பாடுகள். இவர்களின் அன்புமழையில் நனைந்தவாறே முதலாம் அமர்வு அரங்கத்தினுள் நுழைய முடிந்தது. அங்கே வரவேற்க மலர்ச்செல்வன், கவியுவன், ஓ.கே.குணநாதன் மற்றும் இளைய நண்பர்கள் பலர். கட்டியணைத்து வரவேற்றனர், மக்கத்து சால்வை ஹனிபா ‘எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருந்தார் வந்து உனக்காக பிரசாரம் பண்ணி கலக்கியிருப்பேனடா மகனே’ எனும் பேச்சில் வரும் ‘அடேய்’ ‘மகனே’ அவரது கொஞ்சுதமிழ் என்றும் கேட்க இனிது. அவரது இயல்பான பேச்சின் உரிமையும் சுவையும் என்றும் இனிப்பு, இரசிப்பு. ஈழத்து இலக்கியம் கண்ட அற்புதமான கதை சொல்லி எஸ்.எல்.எம். ஹனிபா. இவரை நமது தொலைக்காட்சிகளை சரியாக பயன்படுத்தினால் அற்புதமான ஒரு கதை சொல்லும் முறையை அடுத்த தலைமுறைக்கு கடத்தலாம்.
‘பின்னைய மொழிச்சூழலில் புனைவிலக்கியம்’ எனும் அரங்கில் இரண்டாமவராக நண்பர் ‘திசேரா’ உரையாற்றிக்கொண்டிருந்தார். பின்னைய மொழி என்றால் என்ன என புரிந்துகொள்வதற்கு திசேரா பேசுகின்ற மொழிநடையே போதுமானது. மலையகப் பகுதிகளில் (அக்கரப்பத்தன) ஆசிரியராக பணியாற்றியவர் திசேரா. மட்டக்களப்பு பூர்வீகம். இப்போது அங்கு வசிக்கிறார். இவரை அறிந்திருந்தாலும் வாசித்திருந்தாலும் அன்று தான் அறிமுகம். அற்புதமான, அபரிமிதமான மொழிநடை அவருடையது. முழுமையாக அவரது கட்டுரையை கேட்க முடியாதது வருத்தம். ஆனாலும் அவர் சொல்ல வருகின்ற செய்தியை புரிந்துகொள்ள முடிந்தது. அரங்கின் தலைமை பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான் என குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவருக்கு பதிலாக ஆத்மா ஜாபிர் அரங்கை வழிநடத்திக்கொண்டிருந்தார். வரவேற்பு நவாஸ் சௌபி என குறிப்பிட்டிருந்தாலும், இந்த இலக்கிய சந்திப்புக்கான ஆரம்ப கட்ட ஏற்பாட்டாளராக நண்பர் நவாஸ் சௌபி இயங்கினாலும் அவர் வரவேற்கவுமில்லை. வந்திருக்கவுமில்லை. ‘இதெல்லாம் இலக்கிய சந்திப்பில் சகஜமப்பா’ என்பதுதான் ‘இலக்கியத்தின் அரசியல்’. நோர்வேயில் இருந்து கொழும்புக்கு வந்திருந்த நண்பர் சரவணன் யாழ்ப்பாண இலக்கிய சந்திப்பை தவிர்த்திருந்தார். அதேநேரம் அடுத்த வருடம் நோர்வேயில் அவரே இலக்கிய சந்திப்பின் ஏற்பாட்டாளராக இருந்து வழி நடத்தியிருந்தார். இத்தகைய நிகழ்வுகள்தான் ‘இலக்கிய சந்திப்பு’ எனும் செயற்பாட்டின் சிறப்பம்சங்கள்.
தேர்தல் அரசியல் களத்தின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கும் இலக்கிய சூழலில் இலக்கியத்தின் பெயரில் இடம்பெறும் அரசியல் குறித்த நுண்பார்வை இருக்குமெனில் அதனை சுவையாக அனுபவிக்கலாம். இரண்டிலும் இயங்குபவனாக எனக்கு அந்த அனுபவத்தை அதிகம் உணரக்ககூடியதாக உள்ளது. இங்கேயும் பிரபாக்களும்;, ஞானசாராக்களும், எரிக் சொல்கேம்களும் இருக்கிறார்கள்.
ஏற்கனவே சி.ரமேஷ் தனது கட்டுரையை வாசித்து முடித்திருந்தார். நடைமுறை நாட்களில் பிரதேச இலக்கிய எல்லைகளுக்கு அப்பால் எழுத்துக்களை வாசிக்கும் அற்புத ஆளுமையாக சி.ரமேஷ் விளங்குகிறார். தகவல் களஞ்சியம் போன்ற பெட்டகமாக வலம் வரும் சி.ரமேஷ், அந்த நிலைமைக்கு அப்பால் சென்று தனது வாசிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்துமிடத்து இன்
னும் பேசப்படுவார்.
எழுத்துமரபுசார் வாய்மொழிப் பாரம்
பரியம் குறித்து கலாநிதி சந்திர சேகரன் கட்டுரை சமர்ப்பித்தார். கருத்
துக்களுக்கு பதில் வழங்கும் போதே
அவரது ஆளுமை அதிகம் வெளிப்
பட்டது. அவரது கட்டுரை ஊடகங்க
ளில் பதிவு செய்யப்பட வேண்டியது. முதல்நாள் அமர்வில் அதிர்வை எற்படுத்திய இரண்டு பெண் ஆளுமை
கள், கவிதாயினி ருத்ரா (சாகித்ய பரிசு பெற்ற ஆண்கோணி கவிதைத் தொகுப்பின் சொந்தக்காரர்) மற்றும்
தமிழ்க்கவி அம்மா. (ஊழிக்காலம்)
இவர்களுடன் இன்னும் பல செய் திகளையும் அடுத்த வாரம் மீட்போம்…
(தொடரும்)