கடந்த ஆட்சிக் காலத்தில் கைதுசெய்யப்பட்டு விடுதலையான பாலேந்திரன் ஜெயக்குமாரி (50) இன்று காலை மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணாண்டோ தனது டுவீற்றர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற குற்றச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரி, தற்போது பதவியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற குற்றச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரி, தற்போது பதவியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இது குறித்து உறுதிப்படுத்துவதற்காகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தொடர்புகொண்டபோது, ஜெயக்குமாரி கைது தொடர்பில் தமக்கு ஒன்றும் தெரியாதெனத் தெரிவித்தார்.
பிந்திக் கிடைத்த தகவல்களின் படி அவரை ரூபா 25,000 காசுப் பிணையிலும் ரூபா 100,000 சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளிலும் கிளிநொச்சிப் பொலிசில் கையெழுத்திட்டுவரும் ஜெயகுமாரிக்கு இந்தப் புதிய விசாரணை குறித்து முன்னர் எதுவும் தெரிவிக்கப்படாதது இங்கு குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு உதவினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றப்புலனாய்வுத்துறையினரால் ஜெயக்குமாரியும் மகள் விபூசிகாவும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். பின்னர் சிறுமியான விபூசிகா கிளிநொச்சியில் உள்ள ஆச்சிரமம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார். போதிய ஆதாரங்கள் இல்லாமையினால் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி அண்மையில்தான் விடுதலையானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.