9/16/2015

| |

எம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த தினம்

அஷ்ரஃபைக் கண்டேன்!
1969களின் நடுப்பகுதி, அக்கரைப்பற்று பீச் ரோட்டில் எனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த நாட்கள். எனக்கு அண்மையில் மர்ஹூம் அ.ச. அப்துஸ்ஸமதும் வாழ்ந்து கொண்டிருந்தார். மாலைப்பொழுது, பெரும் மகிழ்ச்சியாகக் கழிந்த நாள்கள்.
அப்படியொரு நாளில்தான், அருமை நண்பர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களைச் சந்திக்கிறேன். எனது உறவு முறை ராத்தாவின் வீட்டில் சாப்பு அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, மருமகன் யஹ்யா (தற்பொழுது ஆசிரியராக இருக்கிறார்), "மாமா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்கிறார்கள்". வெளியில் வந்து பார்க்கிறேன். மூன்று இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒருவர் சிராஜ் மஷ்ஹூருடைய தகப்பனார் மசூத் மௌலவி அவர்கள். மற்றவர் சித்தீக் எனும் நண்பர். இன்னுமொருவர் அந்த நாட்களில் சின்னப்பள்ளிவாயல் முஅத்தினாராக இருந்தவரின் மகன். இவர்களுடன் அபூ தாஹிரும் வந்த ஞாபகம் எனக்குண்டு.
அஷ்ரஃப் ரொம்ப அழகான இளைஞனாகத் தோற்றம் தந்தார். என்னைக் கண்டதும், "காக்கா! நான்தான் எம்.எச்.எம். அஷ்ரஃப். அவ்வப்போது கவிதைகள் எழுதுவேன். உங்களிடம் இந்த நூல்களைக் கொடுத்து விடுமாறு எனது தமிழாசிரியர் சண்முகம் சிவலிங்கம் தந்தார்".
அவர் கதைத்து முடிவதற்கு முதல், "போன வாரம் வீரகேசரியில் மூதூர் இக்பால் சனசமூக நிலையம் நடத்திய கவிதைப் போட்டியில் உங்களுக்குத் தங்கப் பதக்கம் கிடைத்த கவிதையைப் படித்தேன். நல்ல கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்" என்று அவரை உற்சாகப்படுத்துகிறேன்.
மீண்டும் நான், இப்பொழுது என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறேன். "ஏ.எல். பரீட்சை எழுதிவிட்டேன். முடிவைப் பொறுத்து சட்டக் கல்லூரிக்குச் செல்லும் எண்ணமுண்டு" என்கிறார்.
அத்தோடு எங்கள் பேச்சு முடிவுக்கு வருகிறது. அனைவரும் அக்கரைப்பற்று பசாருக்குச் சென்று பிளேன்டீ குடித்து விட்டு, அஷ்ரஃப் அவர்களை கல்முனை பஸ்ஸில் ஏற்றி விட்டு நான் தங்கும் அறைக்கு வருகிறேன்.
அன்று, அவருடைய மாணவப் பருவத்தில் தொடங்கிய நட்பு, இந்த நாட்டு முஸ்லிம்களின் உன்னத தலைவனான அந்தஸ்தை எட்டும் வரையிலும் தொடர்ந்து வந்தது. அவரைப் பற்றி எழுதவும் பேசவும் விமர்சிக்கவும் நிறைய விஷயங்கள் உண்டு.
இன்று அவருடைய ஞாபகார்த்த தினம். அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய, நமது பிரார்த்தனைகளில் அவரையும் இணைத்துக் கொள்வோம் நண்பர்களே!
நன்றி -முகனூல் *எஸ்.எல்.எம்.ஹனிபா