பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தில் இணக்கப்பாடு ஏற்படுமாயிருந்தால் அடுத்த வருடம் முதல் அதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை காலி நகரசபை மைதானத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இந்த நிகழ்வில் உரையாற்றும் போது மேலும் தெரிவித்துள்ளதாவது, “சேஷா என்ற சிறுமியின் கொலை உள்ளடங்கலாக கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். எனினும் மரண தண்டனை தொடர்பாக மனித உரிமைகள் தொடர்பாக பேசும் சர்வதேச அமைப்புகள் இதில் குறுக்கிடுகின்றன. ஆனால் உலகில் பிரபல நாடுகளில் குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மரண தண்டனை இன்றும் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் இதனை நான் நிராகரிக்கப்போவதில்லை. நாட்டின் ஒழுக்கம் மற்றும் ஜனநாயகத்தை மதிப்பவர் என்ற வகையில் இது தொடர்பாக நான் அவதானம் செலுத்தியுள்ளேன். இதன்படி, இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் சகல உறுப்பினர்களினதும் நிலைப்பாடு என்ன என்பதனை அறிய எண்ணுகின்றேன். யோசனை கொண்டு வரப்பட வேண்டும் என்று அவசியமில்லை. ஆனாலும் பாராளுமன்றத்தின் விருப்பத்தை அறிய எதிர்பார்க்கின்றேன். இதற்கு பாராளுமன்றத்தில் இணக்கப்பாடு எட்டப்படுமாயிருந்தால் அடுத்த வருடம் முதல் மரண தண்டனையை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.