9/02/2015

| |

தாய்நாட்டின் மீது இருள் சூழ்ந்தது!

Résultat de recherche d'images pour "2015"லங்கையின் 15வது நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தத் தேர்தலின் மூலம் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான 113 உறுப்பினர்கள் தொகை (மொத்த தொகை – 225) எந்தவொரு பிரதான கட்சிக்கும் கிடைக்கவில்லை. இருப்பினும் ஆகக் கூடுதலான தொகையான 106 உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தலைமையிலான பல கட்சி முன்னணி பெற்றுள்ளது. அதற்கடுத்ததாக, 95 ஆசனங்களை ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) பெற்றுள்ளது.
இறுதி நிலவரங்களின்படி, ஐ.தே.க ஆட்சியமைப்பதற்கு ஐ.ம.சு.கூ வின் சிறுபான்மையினர் முன்வந்துள்ளனர். இவற்றோடு 6 உறுப்பினர்கள் கொண்ட இனவாத, அரசியல் சந்தர்ப்பவாதக் கட்சியான ஜே.வி.பி, ஐ.தே.கவுடன் சேர்ந்து போட்டியிட்டாலும், தனியாகவும் போட்டியிட்டு 1 உறுப்பினரைப் பெற்றுக்கொண்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 16 உறுப்பினர்கள் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளின் ஆதரவும் ஐ.தே.க விற்கு இருக்கும். ஐ.தே.க. அரசுக்கான தமது ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தேர்தலுக்கு முன்னரே பகிரங்கமாக கூறியுள்ளார்.
இலங்கையில் 1978இல், தற்போதைய பிரதமரும், ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் மாமனார் ஜே,ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியல் அமைப்பில் உள்ளடங்கியுள்ள விகிதார தேர்தல் முறைமையின்படிதான் இந்தத் தேர்தலில் ஐ.ம.சு.கூ. விட, ஐ.தே.க 11 உறுப்பினர்களை அதிகமாகப் பெற முடிந்தது. இந்தத் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் பெற்றுக்கொண்ட வாக்குகளின் வித்தியாசம் ஏறத்தாழ மூன்று இலட்சமாகும். ஆனால் ஐனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும், தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் நான்கரை இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஐ.ம.சு.கூக்கு உள்ள மக்கள் செல்வாக்கு குறைவடையவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. குறிப்பாக, சிங்கள மக்களின் ஆதரவு ஐ.ம.சு.கூ இற்குத்தான் என்பது தெளிவாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் பிரதானமானது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவரது சகபாடியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் சுயநல அரசியல் தேவைகளுக்காக, தமது சொந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வி அடைவதற்காக மேற்கொண்ட குழிபறிப்பு வேலைகளும், சீர்குலைவு நடவடிக்கைகளும் ஆகும். இந்த உண்மையை ஒருபோதும் இல்லாத வகையில், ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலநறுவையில் இம்முறை ஐ.தே.க. அதிக வாக்குகள் பெற்றதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
அடுத்ததாக, ஐ.தே.க. வெற்றி பெற்ற மாவட்டங்களில் அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது தமிழ் – முஸ்லிம் வாக்காளர்கள்தான் என்பதைப் புள்ளி விபரங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஐ.ம.சு.கூ இற்கும், சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் இடையிலான விரிசல் சீர்செய்யப்படாத வரை பிற்போக்கு சக்திகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது தொடரவே செய்யும்.
அத்துடன், கடந்த 8 மாதங்களாக சட்ட விரோதமாக ஆட்சியில் இருந்த ஐ.தே.க. அரசாங்கம், ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன், ஊடகங்கள் உட்பட சகல அரச வளங்களையும் இந்தத் தேர்தலில் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மக்களைத் தவறாகத் திசைதிருப்பி விட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, மேற்கத்தைய ஊடகங்களும், இந்திய ஊடகங்களும், தனிப்பட்ட முறையில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும், ஐ.தே.கவுக்கு ஆதரவாகவும் பெரும் எடுப்பிலும் தொடர்ச்சியாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளன.
இவையெல்லாவற்றையும் பயன்படுத்தி, ஐ.தே.க. எப்படியோ ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதன் மூலம் இலங்கையின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக மாறியுள்ளது. இனி என்ன நடக்கும் என்பதை இப்பொழுதே சொல்லி விடலாம்.
உள்நாட்டில் தமது அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டுவதற்காக வகை தொகை இல்லாமல் கைது நடவடிக்கைகளும், வழக்குத் தொடருதலும் (ஏற்கெனவே அது தொடங்கிவிட்டது) நடைபெறும்.
தேசிய பொருளாதாரமும், கலாச்சாரமும் சிதைக்கப்பட்டு, நவ காலனித்துவப் பிடியில் நாடு அமிழ்த்தப்படும்.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட அத்தியாவசிய மக்கள் சேவைகள் அனைத்தும் முற்றுமுழுதாக தனியார் மயப்படுத்தப்படும்.
பொலிஸ் காட்டாட்சி அமுலுக்கு வரும்.
சிறுபான்மை இனத் தலைமைத்துவங்களுடன் (சம்பந்தன், ஹக்கீம் போன்றவர்களுடன்) வர்க்க ரீதியிலான கூடிக்குலாவலைச் செய்யும் அதேநேரத்தில், சாதாரண அந்த இன மக்கள் மீது தேசிய ஒடுக்குமுறை தீவிரமாக்கப்படும்.
நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை உலக – பிராந்திய மேலாதிக்க சக்திகளுக்கு ஆதரவானதாக மாற்றி அமைக்கப்படும்.
அரசியல் சூழலைப் பொறுத்தவரை, 2009இல் புலிகளை அழிப்பதற்கு முன்னிருந்த நிலைக்கு நாடு இட்டுச் செல்லப்படும்.
இவை தவிர, இன்னும் என்னென்ன வழிகளில் மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை எடுக்கு முடியுமோ, அத்தனை நடவடிக்கைகளையும், ரணில் – மைத்திரி அரசு மேற்கொள்ளும். எனவே நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காகப் பல நடவடிக்கைகளை இப்பொழுதிருந்தே எடுக்க வேண்டிய தேவை, ஜனநாயக – முற்போக்கு – தேசபக்த சக்திகளுக்கு முன்னால் உள்ளது.
ஏகாதிபத்தியத்துக்கும், உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக இப்பொழுது உள்ள பிரதான அணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மேலும் விரிவாகவும், இறுக்கமாகவும், பலப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. குறிப்பாக, தொழிலாளர்கள், விவசாயிகள், அரச ஊழியர்கள், மீனவர்கள், கலாச்சாரப் பிரிவினர், மாணவர்கள், வாலிபர்கள், மாதர்கள், வர்த்தகர்கள் போன்ற பெரும் மக்கள் திரளினர் மத்தியில், அரசியல் கட்டமைப்புகளையும், அரசியல் பிரச்சாரத்தையும் வலிமையுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த நாடு ஏகாதிபத்தியவாதிகளின் வேட்டைக்காடாக மாறுவதற்கு உள்ளுர் பிற்போக்குவாதிகள் தரகு வேலை பார்ப்பதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. கடந்த காலங்களில் நாட்டை வழிநடாத்திய அரச தலைவர்களான எஸ்.டபிள்யு.பண்டாரநாயக்க, அவரது துணைவியார் சிறிமாவோ பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச போன்றோரும், இடதுசாரித் தலைவர்களும். சரியான வழியில் நாட்டை வழிநடாத்தி, உலகின் முன்னால் ஒரு புகழ்மிக்க நாடாக எமது நாட்டைக் கொண்டு வந்தனர். அந்தகைய ஒரு பணிக்கு மீண்டும் தோள் கொடுப்பதற்கு தேசத்தை நேசிக்கும் தலைவர்களும், மக்களும் முன்வர வேண்டும்.

 நன்றி *மணிக்குரல்