தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்தப் பிரிவினையோ அல்லது முரண்பாடோ கிடையாது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சிக்குள் கருத்து மோதல்கள் இடம்பெறுவது சாதாரண விடயமேன எனக் குறிப்பிட்டுள்ள அவர் அதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சா் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது:- எம்மிடையே எந்தப் பிரிவினையோ அல்லது பிளவுகளோ கிடையாது. அவ்வப்போது கருத்து முரண்பாடுகள் ஏற்படலாம். அதை சில சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. நாங்கள் ஒற்றுமையுடனேயே எங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஜனநாயகக் கட்சி. அதற்குள் கருத்து மோதல்கள் என்பது சர்வ சாதாரணமான விடயம். அதைப் பெரிதுபடுத்தக் கூடாது. உணர்ச்சி வசப்படுவதால் எதுவும் நடைபெறப் போவதில்லை. தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு விசுவாசமாக இதய சுத்தியுடன் செயற்படுவேன்.
நாம் தமிழ் மக்களின் துயர் துடைக்கும் பணிக்காகவே புறப்பட்டவர்கள். 1979 ஆம் ஆண்டிலிருந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசாவை எனக்குத் தெரியும். அன்று தொடக்கம் மாவை தமிழ் மக்களின் ஈடேற்றத்துக்காக சளைக்காது குரல் கொடுத்துச் செயற்பட்டு வருகிறார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதே போன்று அவருக்கும் என் மீது மரியாதை உள்ளது. எம்மிடையே பிரச்சினைகள் இல்லை. சில வேளைகளில் ஒரு சில வார்த்தைகள்-சொற்கள் தவறான கருத்தைக் கொடுக்கலாம். சற்று நிதானமாக சிந்தித்தால் அது புரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.