ஜனாதிபதி பரிந்துரைத்துள்ள ஏழு சிரேஷ்ட சுதந்திரக் கட்சி தலைவர்களும் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உபதலைவர்களில் ஒருவரான ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவே தகுதியானவர் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐ.ம.சு.மு. ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுதந்திரக் கட்சி மையகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐ.ம.சு.மு. வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கு நியமிக்க நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன, சமல் ராஜபக்ஷ, அதாவுத செனவிரத்ன, ஏ.எச்.எம். பெளசி, சுசில் பிரேம் ஜயந்த், அநுர பிரியதர்சன யாப்பா ஆகிய கட்சி சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரே தகுதியானவர் என ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிடிருந்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜோன் செனவிரத்ன,
ஆட்சிக்கு வரும் ஐ.ம.சு.வுடன் இணைந்து செயற்பட தயார் என்பதை ஜனாதிபதி தனது கடிதத்தில் கூறியுள்ளார். ஐ.ம.சு.மு. வெற்றியை அவர் அதில் உறுதி செய்துள்ளார். சுதந்திரக் கட்சி சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரை பிரதமராக்க ஒத்துழைக்குமாறு 7 பேரின் பேரை அதில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவே உகந்தவர். எமது பெயரை பிரதமர் பதவிக்கு உகந்தவர்களாக குறிப்பிட்டது குறித்து நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் நாம் 7 பேரும் பிரதமர் பதவி ஏற்க தயாரில்லை. மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு கோருகின்றனர் என்றார்.
இதேவேளை இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நிமல் சிறிபால டி சில்வா, ஏ.எச்.எம். பெளசி, சமல் ராஜபக்ஷ மற்றும் பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் பங்கேற்கவில்லை.
சுசில் பிரேம ஜயந்த்
சுசில் பிரேம் ஜயந்த கூறியதாவது, 113 ற்கும் அதிகமான ஆசனங்கள் எமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எமது வெற்றிக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்பு பிரதான காரணமாக அமைந்தது.
ஐ.ம.சு.மு. வெற்றிக்கு ஜனாதிபதியின் கடிதத்தினால் அணுவளவு பாதிப்பும் ஏற்படாது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கருத்துக்களினாலும் நாம் தளரவில்லை. சகல இனத்தவர்களுக்கும் நாட்டில் அமைதியை ஏற்படுத்திக் கொடுத்தது மஹிந்த அரசாங்கமே.
எமது தேர்தல் செயற்பாடுகளுக்கு நாம் பாதாள உலகத்தினரின் ஒத்துழைப்பை பெறவில்லை. ஒற்றுமையாக நாம் எமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியமைக்க ஐ.ம.சு.மு.வுக்கு வாக்களிக்குமாறு கோருகிறோம்.
தினேஷ் குணவர்தன
தினேஷ் குணவர்தன கூறியதாவது, தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் ஐ.தே.க. செயற்படுகிறது. ஐ.ம.சு.மு. வெற்றிக்கு மக்கள் அணிதிரண்டு வருகின்றனர். சந்தையில் அரசி 75 ரூபா முதல் 100 ரூபா வரை விற்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடமிருந்து 30 ரூபாவுக்கும் குறைவாகவே நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. இலங்கை வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட யோசனைகள் தொடர்பான சட்டமூலங்கள் எதனையும் நிறைவேற்ற வில்லை. கடந்த நல்லாட்சி அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
மக்கள் ஆணையை ஏற்று அதன்படி பிரதமரை நியமிப்பதை எவருக்கும் நிராகரிக்க முடியாது. சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்துக்கு தெரிவான போது மக்கள் ஆணையை ஏற்று அவரை பிரதமராக நியமிக்க டீ.பி. விஜேதுங்க நடவடிக்கை எடுத்தார். ரணிலை சந்திரிகா குமாரதுங்க பிரதமராக நியமித்தார். மைத்திரிக்கும் இது தவிர வேறு வழி கிடையாது.
வாசுதேவ நாணயக்கார
வாசுதேவநாணயக்கார கூறியதாவது,
ஐ.ம.சு.மு. இந்த தேர்தலில் வெல்வதற்கான பெரிய சாட்சியமாக மைத்திரிபால ஜனாதிபதியின் கடிதம் விளங்குகிறது. அடுத்த பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என ஏகமனதாக சகல ஐ.ம.சு.மு. கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில் வேறு பெயர்களை சிபார்சு செய்திருப்பது நகைப்புக்குரியதாகும்.
ஆளும் தரப்பு தேர்தல் பிரசாரத்திற்காக பெருமளவு பணம் செலவிடுகிறது. அடுத்த தேர்தலில் துரோகம் காட்டிக் கொடுப்புகளுக்கு மக்கள் உரிய பதில் வழங்குவார்கள்.
விமல் வீரவங்ச
விமல் வீரவங்ச கூறியதாவது,
தோல்வியில் இருந்து மீள அரசாங்கம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றது. ரணில் - மைத்திரி திருமணம் ஒகஸ்ட் 17ம் திகதி விவகாரத்தானது. ஆனால் ஒகஸ்ட் 17ம் திகதி தமது அரசாங்கமொன்று உருவாகும். அவருக்கு இலகுவாக அதன்போது பணி புரிய முடியுமாகும். வாக்கில் வெல்லாமல் ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்க முடியும் என்றால் மக்கள் ஆணையுடன் வரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏன் பிரதமர் பதவி வழங்க முடியாது? மஹிந்தவை பிரதமராக்குவதை தவிர அவருக்கு வேறு வழி கிடையாது. ஐ.ம.சு.மு. வெல்வது உறுதியானதாலே பிரதமர் பதவி குறித்து ஜனாதிபதி ஆராய்கிறார்.
த.தே.கூ. ஆட்டுவிக்கும் அரசாங்கமே ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தால் உருவாகும்.
ஊழியர் சேமலாபநிதி மற்றும் நம்பிக்கை நிதியம் என்பவற்றை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராக தனியார் துறை ஊழியர்கள் அனைவரும் தமது வாக்குகளை அளிக்க வேண்டும். தேர்தலில் வெல்வது ஐ.தே.க. அல்ல ஐ.ம.சு.மு என தேர்தலுக்கு முன் அறிவித்தது குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.