8/14/2015

| |

கல்குடா அரசியல் களநிலவரம் - 2015-*எஸ்.எல்.எம் ஹனிபா

கல்குடா அரசியல் களநிலவரம் - 2015 இரண்டாம் கட்டம்
மாற்றம் வேண்டிப் பயணிக்கும் மாற்று அணியினரும், கடந்த 15 வருடங்களாக கல்குடாவின் அரசியல் தலைமைத்துவத்தை அலங்கரித்து தானே முடிசூடா மன்னனென்று பிரகடனப்படுத்தும் பழம் பெரும் அரசியல்வாதி அமீர் அலி அவர்களும் இந்த அரசியல் சமரில் தங்களது பலத்தை நிரூபிப்பதற்காக பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதை மக்களாகிய நாம் அறிவோம்.
இவ்விரு பகுதியினரையும் சாராது கடந்த 50 வருட கால கல்குடாவின் அரசியல் வரலாற்றை அறிந்தவன், அனுபவித்தவன் என்ற வகையில், இன்றைய கள நிலவரத்தை அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
உண்மை கசப்பாக இருந்தாலும் பேச வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
கல்குடாவில் நமது வாக்குகள் ஏறத்தாழ 34,000. இவற்றில் நாட்டை விட்டும் புலம்பெயர்ந்தோர் 7,500. தேர்தல் தினத்தன்று அளிக்கப்படாமல் போகும் வாக்குகள் 4,500 ஆகும்.
இன்ஷா அல்லாஹ் அளிக்கப்படக்கூடிய மொத்த வாக்குகள் 22,000 எனக் கொள்வோம்.
பிரதான கட்சிகள் தவிர பிற கட்சிகளுக்கு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவது ஆயிரம் வாக்குகள் மாத்திரமே.
இதில், 63 வீதமான வாக்குகளைப் பெறக்கூடிய வாய்ப்பு அமீர் அலிக்கே உள்ளது. அவர் தனது அனுபவம், காய் நகர்த்தல், பண பலம், தான் இழைத்த பிழைகளுக்கான கண்ணீர் வடித்தல், மன்னிப்புக்கோரல் இன்னோரன்ன ஆளுமைகளால் இதனைப் பெற முடியும். 63 வீத வாக்குகள் என்பது சுமார் 13,500 வாக்குகளாகும்.
அமைச்சர் அமீர் அலிக்கெதிராக SLMC தலைமையின் தனிப்பட்ட முடிவாக களம் இறக்கப்பட்ட அறிமுக வேட்பாளர் சகோ. றியால் அவர்கள், அரசியலில் முன்னனுபவமற்ற தன்மை, கல்குடா தொடர்பில் SLMCயின் அரசியல் புறக்கணிப்பு, களத்திற்கு அவசர அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்டமை மற்றும் களநிலவரங்களை சமாளிக்க முடியாமை போன்ற காரணங்களினால், 37 வீதமான வாக்குகளை மாத்திரமே பெறக்கூடிய சாத்தியமுண்டு. 37 வீதமான வாக்குகள் என்பது சுமார் 7,500 வாக்குகளாகும்.
கட்சிக்கென இருந்த வாக்குகளைத் தவிர, சொற்பளவேனும் அதிகரிக்க முடியாத திண்டாட்டம். கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டி பழைய போராளிகளையே மீண்டும் மாற்றத்திற்கான முன்னணி வேண்டி நிற்பது பரிதாபமானது.
எதிர்வரும் காலங்களில் அடுத்தடுத்த அரசியல் நிலைகளில் தலைமையும் மூத்த போராளிகளும் சேர்ந்து எடுக்கும் முடிவே எதிர்காலத்தில் இந்தக் கட்சியின் வளர்ச்சிக்கும் பிரதிநிதித்துவத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கல்குடாவில் SLMC தோல்வியைத் தழுவினாலும் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெறுவது உறுதியானது.
இந்தக் குறிப்பு எனது சிற்றறிவுக்கு உட்பட்டது. இறைவனின் நாட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை எம்மால் ஊகிக்க முடியாது.
அவர்களும் சதி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சதி செய்கிறான். அல்லாஹ், சதிகாரர்களிலெல்லாம் மிகச் சிறந்தவன்.