மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் புதன்கிழமை (22) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தின்போது, ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த மூன்று பேர் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் கிரான்குளத்திலுள்ள கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆரையம்பதி தொடக்கம் கிரான்குளம் வரையான பகுதிகளிலுள்ள கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரிப்பது தொடர்பில் மூன்று ஆசிரியர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்று, அது இறுதியில் கைகலப்பாக மாறியது. இதிலேயே மேற்படி மூன்று பேரும் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.