7/16/2015

| |

 காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் விபத்தில் மரணம்

காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.சலீம் பயணித்துக்கொண்டிருந்த வான், சேருநுவர பிரதேசத்தில்  வியாழக்கிழமை காலை வீதியை விட்டு விலகிச்சென்று  குடைசாய்ந்ததினால் எம்.எஸ்.சலீம் உட்பட இருவர் மரணமடைந்ததுடன்,  ஒரு படுகாயமடைந்துள்ளார். காத்தான்குடியிலிருந்து கிண்ணியாவுக்கு வான் ஒன்றில் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானார்கள். இதில் படுகாயமடைந்த மூன்று பேரும் சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் எம்.கலீல் (வயது 48) மரணமடைந்தார்.   ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது, அங்கு எம்.எஸ்.சலீம் மரணமடைந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  இது இவ்வாறிருக்க,  கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி  வியாழக்கிழமை அதிகாலை பயணித்த ரயில் மோதி ஏறாவூரை சேர்ந்த இர்பான் (வயது 14), முஹம்மத் மௌசிக் (வயது 17) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏறாவூரில் ரயில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில்  தண்டவாளத்துக்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தபோதே, இவர்கள் விபத்துக்குள்ளானார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த  இளைஞர்கள் இருவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து வழமையாக ரயில்  தண்டவாளத்தில் அமர்ந்திருந்து இரவுப்பொழுதை கும்மாளமடித்து களிப்பதாக விபத்து நடந்த இடத்துக்கு அக்கம்பக்கத்திலுள்ளோர் தெரிவித்தனர். இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். -