சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த போதிலும் எமது ஆலோசனைகளை நிராகரித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருப்பதன் மூலம் அவர் எமக்கு அநீதியிழைத்துவிட்டார் என்று அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் குற்றம் சுமத்தினார்.
அமைச்சரவையில் எமது குரல்கள் அடக்கப்படுகின்றன. புதிய தேர்தல் முறை விடயத்தில் சர்வாதிகாரமும் தான் தோன்றித்தனமான போக்குமே கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியோ பிரதமரோ தங்களது கட்சிகளை பற்றி சிந்திக்கின்றனரே தவிர சிறிய, சிறுபான்மை கட்சிகளைப் பற்றி சிந்திக்கவில்லை. இதேநேரம் புதிய தேர்தல் முறையை நியாயப்படுத்துவதற்கும் சிறுபான்மையினரின் கருத்துக்களையும் குறிப்பாக என்னையும் விமர்சிப்பதற்கு சில இலத்திரனியல் ஊடகங்கள் குத்தகைக்கு அமர்த்தப்பட்டது போன்று செயற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.