தற்போதைய அரசாங்கத்தினால் வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை என்றும், முன்னைய அரசாங்கத்தினாலேயே 59 இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, வலிகாமம் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய அவர்,
“ வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுகின்ற முடிவையும் தற்போதைய அரசாங்கம் எடுக்கவில்லை.
எங்கெங்கு இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும், எங்குள்ள முகாம்களை அகற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை சிறிலங்கா படையினருக்கே தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த விடயங்களில் அரசாங்கம் தலையிடாத கொள்கையை கடைப்பிடிக்கிறது.
சம்பூரில் உள்ள கடற்படைத் தளத்தை அகற்றும் முடிவை முன்னைய அரசாங்கமே எடுத்தது. தற்போதைய அரசாங்கம் அந்த கடற்படைத் தளத்தை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளது.
அதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.