கிழக்கு மாகாணத்தில் பெரும் தியாகத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இன ஒற்றுமை இன்று சின்னாபின்னமாக்கப்பட்டு இனங்களுக்கிடையே விரிசலை தோற்றுவித்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சிக்கான நிதிக் கொள்கை அமுல்படுத்தப்படல் வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணத்தினால் கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன இணைந்து கூட்டாட்சி அமைத்து 3 மாத காலம் சென்ற நிலையில் ஆளும் தரப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கூட்டாட்சி தொடர்பாகவும் சந்தேகம் தெரிவித்து நல்லாட்சிக்கான கொள்கையை சரியாக வழி நடத்துமாறு கிழக்கு மாகாண சபையை கோரும் தனி நபர் பிரேரணையை சமர்ப்பிக்கும் நிலை இன்று உருவாகியிருப்பது துரதிஷ்டமானதொன்றாகும். கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக இனங்களுக்கிடையே சந்தேகங்களும் பகை உணர்வுகளும் விதைக்கப்பட்ட சூழ்நிலையில்தான் கிழக்கு மாகாணத்தின் முதலாவது மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி கடந்த 2008 இல் உருவாகியது.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் உருவாக்கப்பட்ட மாகாண ஆட்சியில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தியதுடன் கிழக்கில் அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டிருந்தோம். கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் ஊடாக மூவின மக்களின் இன ஒற்றுமைக்கும் வித்திட்டோம். கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்வதனால் மாகாண சபையின் செயற்பாடுகளின் மூலம் மூவின மக்களும் நம்பிக்கை வைக்கும் நிலை உருவாகியது.
இவ்வாறு பெரும் தியாகத்தின் மத்தியில் உருவாக்கப்பட்ட இன ஒற்றுமையை தற்போதைய கூட்டாட்சியின் கீழ் நடைபெறும் சில தவறான செயற்பாடுகள், சமூகங்கள் மத்தியில் சந்தேக நிலைமையை உருவாக்கியுள்ளது. எனவே கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் தொடர்ந்தும் இனங்களுக்கிடையில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வடமாகாண சபை ஒரு வருடத்திற்கு 6 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக வழங்கி வருகிறது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக இந்த வருடம் 5 மில்லியன் ரூபா வழங்குமாறு வரவு செலவு திட்டத்தில் கோரிக்கை விடுத்தோம். அதற்கு 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கித்தருவதாக சபையில் முதலமைச்சரினால் தெரிவிக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களும் உறுப்பினர்களிடம் கேட்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதை நினைத்து நாம் எல்லோரும் கவலைப்பட வேண்டியுள்ளது.
மஹிந்த அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்த கட்டிடங்களை அண்மையில் திறந்து வைக்க அட்டாளைச்சேனைக்கு வருகை தந்த முதலமைச்சர் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரான தன்னை இல்லாமல் செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து சதி செய்ததாக முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாத உணர்வை தூண்டும் முகமாக முதலமைச்சர் பேசியுள்ளார். முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்து அவரின் நயவஞ்சக செயற்பாட்டால்தான் நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்தோம்.
கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். அன்று ஆளுங்கட்சியின் அமைச்சராகவும் அமைச்சரவை பேச்சாளராகவும் கடமை புரிந்த நான் அன்றைய கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் வெளிப்படையாக தெரிவித்தேன்.
முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து கூட்டாட்சி உருவாக்கப்பட்டு 3 மாதங்கள் சென்ற பின்னும் இதுவரை கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் வெளிவரவில்லை. அமைச்சரவை தீர்மானங்களும் வெளியே வரவில்லை. வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக ஆளுங்கட்சியினர்களுக்கே விபரங்கள் தெரியாது என்ற நிலைமை உருவாகியுள்ளது. கிழக்கு மாகாண ஆட்சியின் பங்காளர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய தார்மீகக் கடமையை மறந்து விடக் கூடாது. கிழக்கு மாகாண கூட்டாட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான பாதையில் செயற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு உள்ளது என்றார்.