6/16/2015

| |

ஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது

ஆறிலிருந்து  எழுபதையும்  கடந்து  தொடரும் கலைப்பயணத்தில்   மகாபாரதம்  சார்வாகனனை எமக்கு  படைப்பிலக்கியத்தில்  வழங்கிய  பன்முக ஆளுமை
                                              - முருகபூபதி
ProfMounakuruஇலக்கியப்பிரவேசம்   செய்த  காலப்பகுதியில்  சென்னை   வாசகர் வட்டம்   வெளியிட்ட அறுசுவை  என்ற  ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற   நூலைப்படித்தேன்.   அதில்  சார்வாகன்  என்ற  பெயரில் ஒருவர்  அமரபண்டிதர்  என்ற  குறுநாவலை   எழுதியிருந்தார்.
அவர்   ஒரு  மருத்துவநிபுணர்  என்ற  தகவல்,   நான் அவுஸ்திரேலியாவுக்கு  வந்த பின்னர்தான்  தெரியும்.   அவர் தொழு நோயாளர்களுக்கு  சிறந்த  சிகிச்சையளித்தமைக்காக  இந்திய அரசினால்   பத்மஸ்ரீ  விருதும்  வழங்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டவர். எங்கள்    மூத்த  தமிழ்  அறிஞர்  கி. இலக்ஷ்மண  அய்யரின் துணைவியார்   பாலம்  அவர்களின்  ஒன்றுவிட்ட  சகோதரர். மெல்பனுக்கு   அவர்  வந்தபொழுது   எனக்கு  அறிமுகப்படுத்தினார் திருமதி  பாலம்  லக்ஷ்மணன்.
 சார்வாகன்  அவரது  இயற்பெயரல்ல.  அந்தப்  புனைபெயரின் பின்னாலிருந்த   கதையை    தமிழக  சார்வாகனே   சொன்னார்.
மகாபாரதத்தில்    குருஷேத்திர  களத்தில்  கௌரவர்களை   அழித்து வெற்றிவாகைசூடிய   பாண்டவர்கள்,   தருமருக்கு  பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில்    அந்தச் சபையிலிருந்து  எழுந்து  அந்த  வெற்றியின் பின்னாலிருக்கும்    பேரழிவை   சுட்டிக்காண்பித்து  கடுமையாக விமர்சித்தவர்   சார்வாகன்  என்ற  முனிவர்.   அவரது  கூற்றால் வெகுண்டெழுந்த  மக்கள்  அவரை    அடித்தே  கொன்றுவிட்டார்களாம். சார்வாக  மதம்  என்ற  புதிய  கோட்பாடு  உருவானது  என்றும் பாஞ்சாலியும்   அந்த   மார்க்கத்தை  பின்பற்றியதாக  கதை இருப்பதாகவும்   சார்வகன்  என்ற  புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர்    ஸ்ரீனிவாசன்  சொன்னபொழுது  மகாபாரதத்தின் மற்றுமொரு  பக்கத்தை   தெரிந்துகொண்டேன்.
துணிவுடன்  தனக்கு  சரியெனப்பட்டதைச் சொன்ன,  சார்வாகன் பற்றிய    முழுமையான  கதையை    பல  வருடங்களின்  பின்னரே இலக்கியப்பிரதியாக  படித்தேன்.
கடந்த   9-06-2015  ஆம்  திகதி  தமது   72   வயது   பிறந்த  தினத்தை கொண்டாடிய    பேராசிரியர்  சின்னையா   மௌனகுரு அவர்களைப்பற்றித் தெரிந்தவர்கள்,  அவர் சார்ந்த   நாடகம்,   கூத்து, விமர்சனம்,    கல்வி   முதலான  துறைகளின்  ஊடாகத்தான்   அவர் பற்றிய    பதிவுகளை    எழுதுவார்கள்.   பேசுவார்கள்.  ஆய்வுசெய்வார்கள்.
ஆனால் ,  அவருக்கும்  படைப்பிலக்கிய  பக்கம்  ஒன்று  இருக்கிறது என்பதை   கலை - இலக்கிய  உலகிற்கு  தெரியப்படுத்தியது பேராசிரியரின்   மணிவிழாக் காலத்தில்  வெளியான  மௌனம் என்னும்   சிறப்பு மலர்.
2003   ஆம்   ஆண்டு  வெளியான  அந்த  மலர்  எனது  கைக்கு கிடைப்பதற்கு ProfMounakuru.01jpg   முன்னர்  மௌனகுரு  எழுதிய  சார்வாகன்  குறுநாவல் பற்றி    சிலர்  விதந்து  சிறப்பித்து  என்னிடம்  தொலைபேசி ஊடாகச்சொன்னபொழுது  -  2004  ஆம்    ஆண்டில்  அவுஸ்திரேலியா கன்பரா  மாநிலத்தில்   நடந்த  எமது  நான்காவது  எழுத்தாளர் விழாவுக்கு    வருகைதந்த  சகோதரி -  சிரேஷ்ட  ஊடகவியலாளர் தேவகௌரியிடம்   சொல்லி    எனக்கு  ஒரு  பிரதியை   தருவித்தேன்.
இம்மலருக்கு   பதிப்புரையும்  அறிமுகவுரையும்  எழுதியிருக்கும் பிரதேச   செயலாளர்  வெ.தவராஜா,   ஐந்து  பகுதிகளைக்கொண்டது எனக்குறிப்பிட்டு -  மலரின்    ஐந்தாவது  பகுதி  பேராசிரியரின் படைப்புகளை    உள்ளடக்கியது  என்றும்  அது    அவருடை இன்னுமொரு    பக்கத்தைக்காட்டும்  எனவும் குறிப்புணர்த்துவதிலிருந்து,    மௌனகுரு   ஈழத்து  இலக்கிய வளர்ச்சியிலும்    காத்திரமான  பங்களிப்பை    வழங்கியவர்  என்ற பெரும்பாலானவர்களுக்குத்   தெரியாத  மற்றும்  ஒரு  விடயத்தையும் புரிந்துகொள்கின்றோம்.
சார்வாகன்   என்ற   அவருடைய  குறுநாவல்  படைப்பிலக்கியத்தில் மிக    முக்கியமானதொரு  கதை.   எழுத்தாளர்கள்,   வாசகர்கள் அவசியம்   படிக்கவேண்டியது.
அண்மைக்காலங்களில்   என்னுடன்  இலங்கையிலிருந்து தொடர்ச்சியான    மின்னஞ்சல்  தொடர்பில்  இருப்பவர்களில் பேராசிரியர்   மௌனகுரு  முக்கியமானவர்.    அவருக்கும்  எனக்குமான நட்புறவுக்கு   நான்கு  தசாப்தகாலம்  கடந்துவிட்டது.   இத்தனைக்கும் நான்    அவரது  மாணவனும்  இல்லை.  அவரது அரங்காற்றுகைகளுடன்   தொடர்புகொண்டவனுமில்லை. இலக்கியம்தான்   எமது  பாலம்.
அவர்   சித்திரலேகாவை   திருமணம்  செய்துகொண்ட  1973 காலப்பகுதியில்  அவர்களை  தம்பதி  சமேதராக  நான்   சந்தித்த இல்லம்    கொழும்பில்  கலை,   இலக்கியவாதிகள்  அடிக்கடி  சந்திக்கும்   ஒரு  கலாபவனம்  ஆகும்.
பாமன்கடையில்  அப்பல்லோ   சுந்தா  சுந்தரலிங்கம்  தம்பதியர்  தமது மகளுடனும்    கவிஞர்கள்  முருகையன்,   சிவானந்தன்  ஆகியோரும் தங்கியிருந்த   அந்த  மாடி  வீட்டில்தான்  மௌனகுருவும் சித்திரலேகாவும்  இருந்தனர்.   அங்கு  அடிக்கடி  சந்திப்புகள்  நடக்கும். யாழ்ப்பாணத்தில்    பல்கலைக்கழக  வளாகம்  அமைக்கப்பட்டதும் கொழும்பிலிருந்த  பலரை   தம்முடன்  அழைத்துக்கொண்டு  சென்றார் பேராசிரியர்  கைலாசபதி.   அவ்வாறு   மௌனகுருவும்  சித்திரலேகாவும்  அங்கு  இடம்பெயர்ந்து  சென்றபின்னரும் எமக்கிடையிலான   நட்புறவு  தொடர்ந்தது.
1975  இல்  வெளியான  எனது  முதலாவது  சிறுகதைத்தொகுதி சுமையின்  பங்காளிProfMounakuru.03jpgகள் -  மல்லிகைப்பந்தல்  சார்பாக  யாழ். வீரசிங்கம்   மண்டபத்தில்  வெளியிடப்பட்ட  வேளையில்  வருகைதந்து    உரையாற்றி  ஷோசலிஸ  யதார்த்தப்பார்வை   குறித்து தனது   பார்வையை   சொன்னவர்.  அவருடனான  நட்புறவு  நான் புலம்பெயர்ந்துவந்த    பின்னரும்  இன்றுவரையில்  நீடிக்கிறது.
எனக்கு   மௌனகுருவைப்பற்றி  நினைக்கும்தோறும்  சிறுவயதில் நான்  விரும்பி  ஓடிய  அஞ்சலோட்டம்தான்  நினைவுக்கு  வருகிறது. மைதானத்தில்  ஒருவரால்  தொடங்கப்படும்  அஞ்சல்  ஓட்டம் அந்தக்கோலுக்காக  துடிப்போடு  காத்து  நிற்கும்  மற்றவர்களின் தொடர்  ஓட்டத்தால்  முடித்துவைக்கப்படும்.   அதே  சமயம்  மீண்டும் ஓடலாம்   என்ற  எண்ணத்தையும்  தோற்றுவிக்கும்.
1964   ஆம்  ஆண்டு  காலப்பகுதியில்   பேராசிரியர்  சு. வித்தியானந்தன்   உருவாக்கிய   இராவணேசன்  கூத்தில்  தமது பல்கலைக்கழக    மாணவப் பருவத்தில்  இராவணேசனாக  தோன்றிய  மௌனகுரு   அவர்கள்  தொடர்ந்தும்  அதனை   முன்னெடுத்து வந்ததுடன்    தமது  மாணாக்கர்களையும்  பயிற்றுவித்து அரங்காற்றுகை      நிகழ்த்திவருகிறார்.   தமது  70  வயதிலும்  அந்த வேடத்தில்    உற்சாகமாக  திகழ்ந்தார்.   இந்த  அஞ்சலோட்டம்  அரங்காற்றுகையாக   தொடர்கிறது.    தலைமுறைகள்  கடந்தும் பேசப்படுகிறது.
அவரிடம்   கல்வித்துறை   சார்ந்து  பயின்ற  எனது  மனைவி  மாலதிக்கு   அவர்  மீதுள்ள  உயர்ந்த   மரியாதையை   அவர்பற்றி வீட்டில்  நாம்  நினைக்கும் வேளைகளில்  சொல்வதிலிருந்தும் மெல்பனில்   வதியும்  சகோதரி  திருமதி  ரேணுகா  தனஸ்கந்தா தானும்    அவருடைய  மாணவிதான் எனப்பெருமிதமாகச்  சொல்வதிலிருந்தும்    -  சமீபத்தில்  அவருடைய  மாணக்கர் மோகனதாசன்   தினக்குரலில்  எழுதியிருந்த  கட்டுரையிலிருந்தும் மணிவிழா  மலரில்  அவர்  பற்றி  பலரும்  எழுதியிருக்கும் ஆக்கங்களிலிருந்தும்   அவர்  எம்மத்தியில்  வாழும்  பெறுமதியான மனிதர்    என்பதற்கு  நிரூபணம்  என்றே    கருதுகின்றேன்.
இறுதியாக   கடந்த  (2015)  பெப்ரவரியில்   அவரை   மட்டக்களப்பில் சந்தித்தேன்.    அச்சமயம்  அங்கு  வெளியாகும்  மகுடம்  இதழை அதன்   ஆசிரியர்  மைக்கல்  கொலினிடம்  பெற்றுக்கொண்டேன். அதில்    வெளியாகியிருந்தது  நீண்டதொரு  நேர்காணல்.
சங்க  காலம்  முதல்  சமகாலம்  வரையில்  என்ற  தலைப்பில் இடம்பெற்ற    அந்த  நேர்காணலில்  பேராசிரியர்  செ. யோகராசா கேட்டிருந்த   கேள்விகளும்,  அதற்கு  மௌனகுரு  வழங்கிய பதில்களும்   கலை   இலக்கிய  வாசகர்களுக்கு  மிகுந்த பயனைத்தரவல்லவை.    மெல்பன்  திரும்பியதும்  அதனை முழுமையாக    படித்துவிட்டு  மௌனகுருவுக்கு  22-03-2015  ஆம்   திகதி   ஒரு   மடல்  வரைந்தேன்.   அதில்    இவ்வாறு  குறிப்பிட்டேன்.Ravanesan
  தங்களின்   நேர்காணல்    மகுடம்  இதழில்   வெகு  சிறப்பாக  வந்துள்ளது.  முதலில்    தங்களுக்கும்  மகுடம்  இதழுக்கும்  நண்பர்  யோகராசாவுக்கும்  வாழ்த்துக்கள்.    நேர்காணலை   எவ்வாறு  பதிவுசெய்யவேண்டும்  என்பதற்கு  சிறந்த   உதாரணமாக  தங்களுடனான   நேர்காணல்  அமைந்திருந்தது.   ஆனால் - மகுடம்  போன்ற   சிற்றிதழ்களுக்கும் -  குறைந்த  வாசிப்பு பரப்புக்கும்  மாத்திரமே   ஏற்றதாக  இருக்கும்.  வெகுஜனபத்திரிகைகளுக்கு இதன்   பெறுமதி  தெரியாது.   சிலவேளை   கைலாஸ்   இருந்திருப்பின் - அதுவும்  ஏதும்  பத்திரிகையில்  இருந்திருப்பின்  இதுபோன்ற  நேர்காணல்   சாத்தியம்.    இல்லையேல்    தொடக்கத்திலும்     இடையிலும்     முடிவிலும்  வெட்டிக்கொத்தி    அரைகுறையாக   பிரசுரித்திருப்பார்கள்.   பக்கப்பிரச்சினை   என்று  சமாதானம்     கூறுவார்கள்.     நீங்கள்   பல   விடயங்களை   மனம்  திறந்து    சொல்லியிருக்கிறீர்கள்.   அத்துடன்  எவரையும்  காயப்படுத்தாமல்    கண்ணியமாக    சொல்லியிருக்கிறீர்கள்.   இந்த  நேர்காணல்     பரவலான  வாசிப்புக்கு    அனுப்பப்படல்   வேண்டும்.   ஏதும்     இணைய    இதழ்களில்   மறுபிரசுரம்    செய்வதற்கு  ஆவன செய்யுங்கள்.
புலம்பெயர்ந்தவர்களின்    பிள்ளைகளின்  எதிர்காலத்தமிழ்  பற்றியும்    சொல்லியிருந்தீர்கள்.    மெத்தச்சரியான  கூற்று.   மொழிபெயர்ப்பு    பற்றியும்     சொல்லியிருந்தீர்கள்.  அது  பற்றி  இன்னும்   மேலும்    நீங்கள்   சொல்லியிருக்கலாம்  போலத்தோன்றியது.    மொத்தத்தில்  அந்த    நேர்காணல்    எனது  மனதுக்கு     நிறைவானது.  
-----
கடந்த  12  ஆம்   திகதி  குறிப்பிட்ட  நீண்ட  நேர்காணல்  தனிநூலாக மட்டக்களப்பில்   பேராசிரியரின்  பிறந்த  நாளை   முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.    இதனை   மகுடம்  நடத்தி  பேராசிரியருக்கு மகுடம்    சூட்டியிருக்கிறது.
அவரது   ஆற்றுகையிலிருந்தும்  ஒரு  பெயரை  அவுஸ்திரேலியா இரவல்   வாங்கியிருக்கிறது  என்பதையும்  இங்கு  சொல்லத்தான் வேண்டும்.
அவர்  இலங்கையில்  மட்டக்களப்பு  புனித  மைக்கேல்  கல்லூரி மாணாக்கர்களுக்ProfMounakuruBookCoverjpgகாக   எழுதி  இயக்கியது  வேடனை   உச்சிய வெள்ளைப்புறாக்கள்.   எமக்கு    நன்கு  தெரிந்த  ஒற்றுமையை வலியுறுத்தும்    கதைதான்.   மௌனகுரு    அதனை   எவ்வாறு அரங்காற்றினார்   என்பது  தெரியாமலேயே   அந்தப்பெயரை தலைப்பாகக்கொண்டு   சிட்னி  கலைஞர்  சந்திரஹாசன்,  ஒரு கவிதை    நாடகம்  எழுதினார்.   அதில்  ( மெல்பனில்)  எனது பிள்ளைகளும்   நண்பர்களின்    பிள்ளைகளும்  நடித்தனர்.  ஆனால்,  இந்தத்தகவல்    மௌனகுரு  அறிவாரா...? என்பது எனக்குத்தெரியவில்லை.
வழக்கமாக   நாம்   நாட்டுக்கூத்து  என்றே  அழைக்கின்றோம்.   ஆனால் அப்படியல்ல  கூத்து  என்றே    எழுதுங்கள்,  பேசுங்கள்  என்று எம்மைத் திருத்தியவர்  அவர்.
எப்படி  சார்வாகன்  ஊடாக   சமூகத்துக்கு  ஒரு  செய்தியை சொன்னாரோ  அதுபோன்று   இராவணேசன்  மனைவி   மண்டோதரி ஊடாகவும்   சமூகத்துக்கு  முக்கியமான  செய்தியை   வெளியிட்டார்.
சார்வாகன்  போரின்  அழிவைச்  சாடினார்.   மண்டோதரி  போரினால் வரக்கூடிய  இழப்புகளைச் சொன்னாள்.  இரண்டு  செய்திகளும் மௌனகுருவின்  எழுத்திலும்  ஆற்றுகையிலும்  அழுத்தமாக பதிந்துள்ளன.
கொழும்பில்   அமரர்  நீலன்  திருச்செல்வம்  நினைவு அமைப்பினருக்காக  அவர்  இராவணேசனை   மீண்டும்  2010  இல் நவீனப்படுத்தி   அரங்கேற்றினார்.   அதன்  பின்னால்  பலருடைய உழைப்பு    இருந்ததையும்  அவர்  சுட்டிக்காட்டி  மேடையில் அவர்களை    அறிமுகப்படுத்தினார்.   சுமார்  இரண்டு  மணிநேரங்கள் இடம்பெறும்   இராவணேசன்  சிறந்த  ஒளிப்பதிவுடன்  எமக்கு இறுவட்டாக    கிடைத்துள்ளது.    அத்துடன்  மௌனகுரு  தமது  70 வயதில்    பங்கேற்ற  இராவணேசனும்  மண்டோதரியும்  சந்திக்கும் இறுதிக்காட்சி   சுமார்  20   நிமிடங்கள்.    இரண்டையும்  பார்க்கும் சந்தர்ப்பம்  அவுஸ்திரேலியாவில்  பலருக்கும்  கிடைத்தது.
1964   ஆம்  ஆண்டு  முதல்  2015  வரையில்   அஞ்சலோட்டமாகவே தொடர்த்து   வருகிறான்  இராவணேசன்.   அந்த  தொடர்  ஓட்டத்தில் பேராசிரியர்  மௌனகுருவின்  அயராத  உழைப்பினைக் காண்கின்றோம்.
அகவையில்  73  ஆம்   வயதில்  காலடி   எடுத்துவைத்துள்ள அவர் நல்லாரோக்கியத்துடன்   மேலும்   பல்லாண்டு  வாழ்ந்து அரங்காற்றுககைளில்   மேலும்   பல  மாணாக்கர்களை  உருவாக்குவார் என்ற   நம்பிக்கையுடன்  வாழ்த்துகின்றோம்.
-----0---
letchumananm@gmail.com
நன்றி *தேனீ