அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவரப்படவுள்ள தேர்தல் முறை மாற்ற சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது தேர்தல் முறை மாற்ற சட்டமூல வரைபை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த நிலையில் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
125 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மூலமும், 75 உறுப்பினர்கள் விகிதாசார ரீதியிலும், 25 உறுப்பினர்களை தேசி யப் பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யும் வகையிலும் 225 உறுப்பினர்களை கொண்டதாக புதிய தேர்தல் முறை அமைந்துள்ளது.
அதாவது, விருப்பு வாக்கு முறையற்ற தொகுதி மற்றும் கலப்பு என
இரண்டு முறைகளிலும் அமைந்த புதிய கலப்பு தேர்தல் முறை யோசனை அரசியலமைப்பின் 20 ஆவது சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் முறை மாற்ற யோசனயை அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னர் அதற்கு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி. திகாம்பரம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.
அதாவது நுவரெலியா மஸ்கெலியா தொகுதிகளில் நான்கு பல் தொகுதிகள் உருவாக்கப்படும் வகையில் தேர்தல் முறை மாற்ற யோசனை வரவேண்டும் என்று அமைச்சர் திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அதற்கு உடனடியாக எதிர்ப்பு வெளியிட்ட அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வகையில் தேர்தல் முறை மாற்றத்தை அங்கீகரிக்கவேணடும் என்று வலியறுத்தியுள்ளனர். குறிப்பாக அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் எஸ்.பி. திசாநாயக்க உள்ளிட்டோர் முன்வைக்கப்பட்ட தேர்தல் முறையில் மாற்றம் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.
இதனிடையே தேர்தல் முறை மாற்றம் தொடர்பான யோசனை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பை அவதானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “”அப்படியானால் தேர்தல் முறை மாற்றத்தை நிறைவேற்ற நீங்கள் விரும்பவில்லையா? என்று கேட்டுள்ளார்.
மேலும் எந்தவொரு தரப்புக்கும் அநீதி ஏற்படாதவாறு தேர்தல் முறை மாற்றத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேர்தல் முறை மாற்றத்தை நிறைவேற்றுவதற்கு யாரும் தடையாக இருக்கவேண்டாம் என்றும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றும் ஜனாதிபதி இதன்போது கோரிக்கையும் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தேர்தல் முறை மாற்றத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது.
அதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் திகாம்பரத்தை சந்தித்த ஜனாதிபதி சிறிசேன சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தேர்தல் முறை மாற்றம் வரும் என்று உறுதியளித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் முறை மாற்றத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டமை தொடர்பில் வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பெரெரா கூறியுள்ளதாவது
“” புதிய தேர்தல் முறையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் மாற்றம் ஏற்படாது. அதில் 125 உறுப்பினர்கள் கலப்பு முறைமை அடிப்படையிலும், 75 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட உள்ளனர். மேலும் 25 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். பிரதமரின் இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இதனை முழுமையாக தயாரித்து சில தினங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்””
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்திலிருந்து தேர்தல் முறை மாற்றத்தை உருவாக்குவது குறித்து பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்து அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்று தேர்தல் முறையை தயாரிக்க அமைச்சரவை உப குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இந்த அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, எஸ்.பி. திசாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, கபிர் ஹஷீம், சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக்க, பழனி திகாம்பரம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். இந்த உறுப்பினர்கள் பல தடவைகள் கூடி தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து சில வாரங்களுக்கு முன்னர் தமது வரைபை முன்வைத்திருந்தனர். ஆனால் அதற்கும் உடனடியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் பின்னர் ஜனாதிபதியும பிரதமரும் களத்தில் இறங்கி தேர்தல் முறை மாற்ற யோசனையை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆரம்பத்தில் 255 உறுப்பினர்களை கொண்டு தேர்தல் முறை மாற்றத்தை தயாரிக்கவே யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதாவது 196 உறுப்பினர்களை மாவட்ட ரீதியிலும் 59 உறுப்பினர்களை தேசிய பட்டியல் ரீதியிலும் தெரிவு செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் பாராளுமன்ற ஆசனங்கள் 255 ஆகன உயர்வதை பல கட்சிகள் எதிர்த்தன. இந்நிலையில் வாரக்கணக்கில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இறுதியில் தற்போதைய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.