5/06/2015

| |

மக்களுக்காக இரத்தமல்ல வியர்வை கூட சிந்தாதவர்கள் எங்களின் மக்கள் பணிக்கு உரிமை கோருகின்ற கேவலமான அரசியலை செய்கின்றனர்

மக்களுக்காக இரத்தமல்ல வியர்வை கூட சிந்தாதவர்கள் எங்களின் மக்கள் பணிக்கு உரிமை கோருகின்ற கேவலமான அரசியலை செய்கின்றனர் - வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன்*
Résultat de recherche d'images pour "மாகாண சபை உறுப்பினர் தவநாதன்"
இந்த மாவட்டத்தில் மக்களுக்காக, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு துளி வியர்வை கூட சிந்தாதவர்கள் நாங்கள் செய்கின்ற மக்கள் பணிக்கும் ,எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினரின் உழைப்புக்கும் உரிமை கோருகின்ற மிகக் கேவலமான அரசியலை செய்து வருகின்றனர் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் அவர்கள் தெரிவித்துள்ளாhர்.
நேற்று 05-05-2015 கிளிநொச்சி ஊற்றுப்புலம் பழைய குடியிருப்பு மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்
கடந்த ஜந்து வருடங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் எங்களால், எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை மாவட்ட மக்கள் நன்கறிவார்கள் ஆனால் இந்த ஜந்து வருடங்களில் மக்களுக்காக, மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு செங்கல்லையேனும் வைக்காதவர்கள் இன்று எமது மக்கள் பணிகளுக்கு உரிமை கோரி அரசியல் செய்கின்றவர்களாக உள்ளனர்.
போலிக் கோசங்களும், வெற்றுப்பேச்சுகளையும் பேசிக்கொண்டு போலித் தேசியவாதிகளாக சுற்றித்திரியும் இவர்கள் மற்றவர்களின் உழைப்புக்கு உரிமை கோருகின்ற அநாகரீகமான அரசியலை விட்டுவிட்டு மக்களுக்காக உழைக்க முன்வர வேண்டும் ஆனால் இவர்கள் அவ்வாறு செய்வார்களா? எனக்கேள்வி எழுப்பிய மாகாண சபை உறுப்பினர் வினைத்திறனற்ற இவர்களால் போலித்தேசிய வாதிகளாக காட்சி தர முடியுமே தவிர மக்களுக்காக உழைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இங்கு உரையாற்றி பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் எல்லா கிராமங்களுக்கும் சென்று எல்லா மக்களையும் சந்தித்து அவர்களின் தேவைகளையும், பிரச்சினைகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றோம், அந்த வகையில் ஊற்றுப்புலம் கிராமத்தின் பழைய குடியிருப்பு மக்கள் தங்களின் ஒடுக்கு பாலம் தொடர்பிலும் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து எங்களின் முயற்சியும் தொடர்ச்சியான நடவடிக்கையும் இங்கு ஒரு நிரந்தர பாலத்திற்கு வழிவகுத்துள்ளது. தர்மபுரம் நெத்தலியாறு பாலத்தை இங்கு கொண்டு வருவதற்காக ஆட்சி மாற்றத்திற்கு முன்னரும் அதற்கு பின்னரும் முயற்சிகள் எடுக்கப்பட்டது வெறுமனே பத்திரிகைகளில் பாலம் தொடர்பில் அறிக்கை விட்டுவிட்டு இருந்தவர்கள் அல்ல நாங்கள். பாலத்தை கொண்டு வருவதற்காக உழைத்தவர்கள் நாம். எங்களின் உழைப்புக்கும், முயற்சிக்கும் ஊடாக பெறப்பட்ட இந்த விடயத்தை சிலர் உரிமை கோருகின்றனர். நெத்தலியாறு பாலத்தை ஊற்றுப்புலத்திற்கு கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் எந்த தரப்பிடம் தொடர்புகொள்ள வேண்டும் என்று எதுவும் தெரியாதவர்கள் இதற்காக உரிமை கோருகின்றனர் எனத்தெரிவித்த அவர்
மக்களுக்கு எதுவும் தெரியாதது போன்று மற்றவர்களின் உழைப்புக்கு இரகசியமாக உரிமை கோருகின்ற நாகரீகமற்ற அரசியல் இங்கு நடக்கிறது. கண்டாவளை நாதன் குடியிருப்பு மக்களின் காணிப் பிணக்குகளை தீர்த்து வைப்பதற்காக நாம் மிக கடின உழைப்பை மேற்கொண்டு விடயத்தை சாதித்துள்ள நிலையில் அந்த காணி விடயம் தன்னால் சாதிக்கப்பட்டதாக ஒருவர் உரிமை கோருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் நாதன்குடியிருப்பு மக்களின் காணிகளை அதன் ஆரம்ப உரிமையாளர்களிடம் இருந்து பெற்று குடியிருப்பவர்களுக்கு வழங்க முடியாது எனத்தெரிவித்த அவர் தற்போது எங்களின் முயற்சியால் அந்த மக்களின் காணி பிணக்கு தீர்க்கப்பட்ட நிலையில் அது தன்னால் நடந்த விடயம் என மக்களிடம் கூறி வருகின்றார். இவ்வாறான போலிகளுக்கு மத்தியில்தான் நாம் மக்களுக்காக உழைத்து வருகின்றோம். உண்மையிலேயே மக்களை நேசிக்கின்ற மக்கள் பிரதிநிதிகளால் மட்டுமே மக்களுக்காக உழைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
ஊற்றுப்புலம் வள்ளுவர் பண்ணை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் அன்பழகன், கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் பாலன், ஊற்றுப்புலம் கமக்கார அமைப்பின் தலைவரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளருமான பெ.ஆனந்தன் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.