ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய
அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அங்கம் வகித்த நான்கு அமைச்சர்கள் நேற்று தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததுடன் அரசாங்கத்திலிருந்தும் விலகினர்.
சமுர்த்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, பொதுநிர்வாகம்
மற்றும் ஜனநாயக ஆட்சி தொடர்பான இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோரே தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
நான்கு அமைச்சர்களும் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ளதுடன் தாங்கள் ஏன் அரசாங்கத்திலிருந்து விலகுகின்றோம் என்பதனை விளக்கி நீண்ட கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.
அரசாங்கத்திலிருந்து விலகினாலும் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும் நான்கு பேரும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நால்வரும் இணைந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் போட்டியிடுவதற்கு முன்னர் சுதந்திரக்கட்சியின் சில எம்.பி.க்களுடன் செய்தியாளர் மாநாட்டினை நடத்தியிருந்தமை உங்களுக்கு நினைவிருக்கும். அதேபோன்று மஹிந்தராஜபக்ஷவை சந்தித்தமை எமது கட்சியை பொறுத்தவரையில் மிக முக்கிய விடயமாகும்.
அதன் பின்னர் நீங்கள் சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ உங்களிடம் ஒப்படைத்தார். அவ்வாறான முக்கியமான முடிவுகளை எடுத்த உங்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம். அந்த தீர்மானம் எமது நாட்டின் அரசியல் பயணத்தையும், சுதந்திரக்கட்சியின் பயணத்தையும் தீர்க்கமான முறையில் மாற்றியமைத்தது. அந்த வகையில் இன்று நாங்கள் எடுக்கின்ற தீர்மானமானது சரியான தீர்மானம் என நாங்கள் நம்புகின்றோம்.
நீங்கள் சுதந்திரக்கட்சியின் தலைவராக வந்த பின்னர் ஐக்கிய தேசிய கட்சி வழமைபோன்று தேர்தல் வெற்றியின் பின்னர் செய்கின்ற அடக்கு முறைகள் குறைந்தன. இடமாற்றங்கள் கூட குறைந்தன. ஆனால் ஐக்கிய தேசியக்கட்சி கிராம மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்திகளையும் நிறுத்தியது. இது பாரிய விவகாரமாக அமைந்தது. அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சி கிராம மட்டத்தில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்தது. இதனால் சுதந்திரக்கட்சி வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எமது ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருக்கும் போது எமது அமைச்சர்கள் பதவியிலிருக்கும்போது இவ்வாறு நடக்கிறது என மக்கள் ஆதங்கப்பட்டனர். இதன்போது எம்மால் பதிலளிக்க முடியாது இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பன்முகப்படுத்தப்படும் நிதி எமக்கு வழங்கப்படவில்லை.
5 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியை 10 மில்லியன் ரூபாவாக உயர்த்துவதாக நிதியமைச்சர் கூறினார். ஆனால் எமக்கு முன்னர் வழங்கப்பட்ட 5 மில்லியன் ரூபா கூட கிடைக்கவில்லை. அதுமட்டுமன்றி எமது ஆதரவைப் பெற்றுக்கொண்டு ஆட்சி அமைத்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்திகொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி நாட்டை பொலிஸ் இராட்சியமாக உருவாக்கியுள்ளனர்.
பொலிஸ் மா அதிபருக்கு மேல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியை அடக்கி வருகின்றார். இந்த அரசாங்கத்தில் நாங்கள் 19 ஆவது திருத்த சட்டத்தையும் நிறைவேற்றினோம். அது பாரிய அரசியல் வெற்றியாகும். நாம் தேசிய அரசாங்கத்தில் இணைந்திருக்காவிடின் 19 ஆவது திருத்தச் சட்டம் தோல்வியடைந்திருக்கும். சுதந்திரக்கட்சியை காப்பாற்றுவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை, எதிர்வரும் தேர்தலில் உங்களதும் எங்களதும் எதிராளியாக ஐக்கிய தேசியக்கட்சியே இருக்கப்போகின்றது.
உங்களுக்கு வாக்களித்த 61 இலட்சம் பேரையும் உங்களுக்கு எதிராக வாக்களித்த 58 இலட்சம் பேரையும் ஒரே தடவையில் மகிழ்ச்சிப்படுத்த உங்களுக்கு நேர்ந்துள்ளது. இது ஒரு சிக்கலான விடயமாகும். இந்த இடத்தில் கிராம மட்டத்தில் கட்சி ஆதரவாளர்களை பேணிக்காப்பது கடினமாகும். நாட்டில் காணப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்களில் 250 சபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசம் இருந்தன. அவற்றின் பதவிக்காலத்தை ஒன்றரை மாதத்தினால் நீடித்தீர்கள். தற்போது அந்தப் பதவிக்காலமும் முடிவடைந்துள்ளதாகல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் அதனை செய்யாமல் அவற்றை விசேட ஆணையாளருக்கு கீழ் கொண்டுவந்துள்ளமை எமக்கு மகிகழ்ச்சியளிக்கவில்லை. இதற்கு பதிலாக பதவிக்காலத்தை நீடித்திருக்கலாம்.
தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் ஆணையாளரின் கீழ் உள்ளதால் சுதந்திரக்கட்சி வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது. இவ்வாறான பின்னணியில் எம்மால் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியை வகிக்க முடியாது. எனவே நாங்கள் எமது பதவிகளை கைவிடுகின்றோம். நாம் அமைச்சுப் பதவிகளை விட்டு சென்றாலும், உங்கள் தலைமையில் சுதந்திரக்கட்சியை வெற்றிபெறச் செய்வோம். உங்களுககு பக்கபலமாக இருப்போம். உங்கள் கரங்களை பலப்படுத்துவோம்.
நாம் 19 ஆவது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றினோம். அதேபோன்று 20 ஆவது திருத்த சட்டத்தினையும் நிறைவேற்றுவோம். எதிர்வரும் தேர்தலில் மைத்திரி- மஹிந்த தரப்புக்களை இணைத்து நாம் வெற்றிபெறுவோம். நாம் இன்று எடுக்கும் தீர்மானம் உங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமையும். எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்து எமது கட்சியின் வெற்றிக்காக உழைப்போம்.