4/14/2015

| |

புலிகள் குறித்தான இன்றைய இலக்கியங்களும், அதன் நோக்கங்களும்

  Résultat de recherche d'images pour "நிலாந்தன்" அண்மைக் காலமாக புலிகளின் காலத்தைய ஒட்டிய இலக்கிய படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புலிகளின் அதிகாரம் நிலவிய காலத்தையும், இறுதி யுத்தம் நடந்த காலத்தையும், யுத்தத்துக்கு பிந்தைய காலத்தையும் மையப்படுத்திய இந்த இலக்கியங்களின் அரசியல் தான் என்ன? இவை ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களில் இருந்து வெளிவருகின்றனவா? என்பது சமூக அக்கறையுள்ளவர்கள் முன்னுள்ள கேள்வியாகும். 
"இலக்கியம் இலக்கியத்துக்கே" என்று கூறும் மக்களை பற்றிய அக்கறையற்றவர்கள், மக்கள் விரோத இலக்கியப் போக்கை நியாயப்படுத்துகின்ற இலக்கிய - அரசியல் வெளியில், வெளிவரும் இலக்கியங்களின் அரசியல் போக்குகள் குறித்து ஆராய்வோம்.
இன்று வெளிவரும் புலிகளின் கால இலக்கியங்கள், அக்கால அரசியல் மீதான விமர்சனத்தில் இருந்து வெளிவரவில்லை. புலிகளின் கால அரசியல் போக்கில் தமது அரசியல் இருப்பை நியாயப்படுத்தும் அடிப்படையில், படைப்புகளை தகவமைத்துக் கொள்கின்றனர்.
இந்த வகையான இலக்கிய போக்கு புலிகள் மீதான விமர்சனத்தை புலிகள் கொண்டிருந்த அரசியல் இருந்து அணுகுகின்றது என்பதில் இருந்து, படைப்புகளின் நோக்கத்தை இனம் கண்டு கொள்ள முடியும். இந்த நூல்கள் தொடர்பான விமர்சனங்கள் - பகுப்பாய்வுகளுக்கு இது தான் அளவுகோள்.
புலிகள் மீதான விமர்சனமானது புலிகள் கொண்டிருந்த அரசியல் ரீதியானதே ஒழிய; சம்பவங்கள் ரீதியானதோ, புலிகளின் நடத்தைகள் தொடர்பானவையோ அல்ல. அரசியலுக்கு வெளியில் புலிகளின் காலத்தை அணுகும் பார்வையானது, யாழ் மேலாதிக்க வெள்ளாள சாதிய சிந்தனை வகைக்கு உட்பட்டதே. எந்த அரசியல் புலியை உருவாக்கியதோ, அதற்குள் குண்டுச்சட்டியை ஓட்டுவதாகும். அரசியல் ரீதியான விமர்சன இலக்கியத்திற்கு பதில், அதை நியாயப்படுத்தும் வண்ணம் சம்பவங்கள், நடத்தைகள் தொடர்பான தனிமனித நலன் சார்ந்த இலக்கியங்களாகவே அண்மைய இலக்கியங்கள் வெளிவருகின்றன.
இத்தகைய நூல்களை எழுதுகின்றவரின் நோக்கம் மக்கள் நலன்கள் சார்ந்த தெரிவோ அல்லது சமூகம் சார்ந்த நடத்தையோ கிடையாது. புலிகளின் காலம் பற்றிய நூல்களை எழுதுவதன் மூலம் பணம் சம்பாதிக்க இருக்கும் இன்றைய வாய்ப்புகளையும், புலி அல்லாத புதிய சூழலில் தங்களை இலக்கிய பிரமுகராக நிலைநாட்டும்... தனிநபர் நலன் சார்ந்த நோக்கிலுமே, இத்தகைய படைப்புகள் வெளிவருகின்றதை பொதுவில் காண முடிகின்றது.
புலிப் பாசிசம் நிலவிய போது அதற்கு ஒத்தூதி பிழைத்த இலக்கிய சந்தர்ப்பவாதிகள், புலிப் போராட்டத்தின் காலத்தில் மட்டுமல்ல இன்றும் புலியை சொல்லி பிழைக்கும் இலக்கிய போக்கிரிகளாக மாறி இருப்பதையே காண முடிகின்றது. எந்த சமூக நோக்கற்றதும், கடந்த காலத்தை உழைக்கும் மக்களை சார்ந்து அரசியல் மூலம் நோக்காத, இத்தகைய இலக்கிய படைப்புகளின் மக்கள் விரோத தன்மையை இனம் கண்டு அணுக வேண்டும்.
புலிகள் இருந்த வரை வலதுசாரிய வர்க்க உள்ளடக்கத்தையும், அதன் மக்கள் விரோத பாசிசப் போக்கையும் இலக்கிய படைப்பாக்கியவர்கள், மறுபடியும் வலதுசாரிய மக்கள் விரோத இலக்கியத்தையே இன்று முன்தள்ளுகின்றனர் என்பதே உண்மை.
மக்கள் குறித்து அக்கறையுள்ளவாகளும், நடைமுறையில் சமூக மாற்றத்தை நோக்கிய பயணிக்கின்றவர்களும் மக்கள் விரோதமான இந்த இலக்கிய போக்கின் அரசியலை இனம் கண்டு கொள்வது இன்று அவசியமானதாகும். இத்தகைய இலக்கியமானது மூடிமறைக்கும் அரசியல் சூக்குமத்தலானது. குறிப்பாக கடந்த கால அரசியலை பாதுகாக்கும் எல்லைக்குள்ளேயே, அதன் அரசியல் வரம்புக்குள்ளேயே, இவர்களின் இலக்கியங்கள் வெளிவருகின்றன. இதை வரலாற்று ரீதியான கடந்த அரசியல் போக்கின் ஊடாக புரிந்து கொள்ள முனைவோம்.
1980 களில் தோன்றிய தேசியவாத இலக்கியம்
வடகிழக்கு மக்கள் மத்தியில் தேசியம் முதன்மை முரண்பாடாக மாறியதன் பின்னான இலக்கியம் குறித்தும், தேசியம் தமிழ் இனவாதமாக மாறியதன் பின்னான இலக்கியம் குறித்தும் பொதுப் புரிதல் அவசியமானது.
1970 களில் தொடங்கிய தேசியவாதம் 1980 களில் முதன்மை பெற்ற போது இலக்கியத்திலும் அதன் தாக்கத்தைக் காணமுடியும். முற்போகக்கான இடது தேசியவாதத்தை அடிப்படையாக கொண்ட கருநிலை இலக்கியப் படைப்புகள் தோன்றின. இயக்கச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், உதிரியான படைப்புகளில் இந்த இலக்கியப் போக்கைக் காண முடியும்.
1960 களில் தோன்றிய இடதுசாரி இலக்கியத்தின் வீச்சான அதன் மரபு வழியில், இந்த இடது தேசிய இலக்கியம் கருக் கொண்டது. அரசியலில் இந்த இடதுசாரிய தேசியம் ஏற்படுத்திய தாக்கம், இலக்கியத்திலும் பிரதிபலித்தது. கருத்தளவில் மக்களை சார்ந்தாக தோன்றிய இந்த இடதுசாரிய தேசிவாத இலக்கியப் போக்குகளுக்கு மக்கள் சார்ந்த நடைமுறை இருக்கவில்லை. மறுபக்கத்தில் மக்களை ஒடுக்கும் வலதுசாரிய தேசியவாத போக்கு நடைமுறை கொண்டதாக காணப்பட்டது. இடது தேசியவாத கருத்துக்கும், வலது தேசியவாத நடைமுறைக்குமான முரண்பாட்டை வன்முறை மூலம் தீர்த்த வலதுசாரிய போக்கானது, இடது தேசியவாத இலக்கியப் போக்கின் வளர்ச்சியைத் தடுத்தது நிறுத்தியது.
இதனால் இடது தேசிவாதமாக கருக் கொண்ட இலக்கியம், வலதுசாரிய வன்முறைக்கு எதிரான இலக்கியமாக மாறியது. மக்கள் விரோத வலதுசாரிய தேசியவாத போக்கைச் சாடி, எள்ளி நகையாடும் இலக்கியமாக வெளிவந்தது.
1990 களில் வலதுசாரிய தேசியம் தன் அதிகாரத்தை முற்றாக நிறுவிக் கொண்டதன் மூலம், வலதுசாரிய தேசியவாதத்துக்கு எதிரான இலக்கியப் போக்கு முடிவுக்கு வந்தது. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் அது வெளிபடத் தொடங்கியது. இந்த வகையில் பல சிறு சஞ்சிகைகள் வெளி வந்தன. புலம்பெயர் இலக்கிய மரபில் தொடங்கிய இடது தேசியவாத இலக்கிய போக்கு; கருத்துக்கும் நடைமுறை வாழ்கைக்குமான முரண்பாட்டால் மெது மெதுவாக மறையத் தொடங்கியது.
இதற்கு வலு சேர்க்கும் வண்ணம் வலதுசாரிய தேசியம் புலித் தேசியமாக குறுகி, தன் தேசியக் கூறுகளை இழந்தது. தேசியதுக்கு பதில் இனவாதத்தை தேசியமாக வெளிபடுத்தத் தொடங்கிய சமகாலத்தில், கருத்து நிலையில் இருந்த புலம்பெயர் இடதுசாரிய தேசியவாதமும் காணமல் போனது.
மாறாக இலக்கியமும் - அரசியலும்; படிப்படியாக புலி எதிர்ப்பு - புலி ஆதாரவாக மாறிய சூழலில், இலக்கியமும் அதற்குள் முடங்கிப் போனது.
அதே நேரம் புலியல்லாத புலம்பெயர் இலக்கிய நோக்கம் என்பது, தன்னை முதன்மைப்படுத்தும் பிரமுகர்த்தன இலக்கியமாக குறுகியது. புலிக்கு வெளியிலான இந்த இலக்கியம், ஒன்றில் புலியெதிர்ப்பு இலக்கியமாக அல்லது தன்னை முதன்மைப்படுத்தும் இலக்கியமாக வெளிப்பட்டது. புலிகளின் அரசியலுக்கு மாறான உழைக்கும் மக்களை முன்னிறுத்திய இலக்கியத்தை படைக்கவில்லை. அரசியல் விமர்சனத்திலும் இது தான் நடந்தேறியது.
புலியெதிர்ப்பு – பிரமுகர்த்தனம் என்ற வட்டத்துக்குள் குறுகிபபோன புலம்பெயர் இலக்கியம் மற்றும் அரசியல், மக்களுக்கு எதிரான கருத்து நிலையை முன்தள்ளியது.
மறுபக்கம் புலியை வைத்து பிழைக்கும் புலி ஆதரவு இலக்கியம் தோன்றியது. அது புலிகளின் வலதுசாரிய பாசிசத்தை பலப்படுத்தி பாதுகாக்கும் இலக்கியமாக மாறியது. இடதுசாரிய சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகளின் தலைமையில், இந்த மக்கள் விரோத புரட்டு இலக்கியம் புலிக்குள் தோன்றியது. மக்களை ஒடுக்கியபடி பாசிசத்தை நடைமுறையாக்கிய புலித்தேசிய இனவாதத்தை நியாயப்படுத்தியது இந்த இலக்கிய போக்கு.
புலி இருந்த வரை புலி ஆதரவு – புலியெதிர்ப்பு என்ற இவ்விரண்டுக்குள்ளும் பிரமுகர்த்தன இலக்கியப் போக்கு காணப்பட்டது. இதை மூடிமறைக்க "இலக்கியம் இலக்கியத்துக்காக" என்ற மூகமுடி அணித்து கொண்டு இலக்கியத்தின் அரசியலை மறுதளித்தனர். அதே நேரம் மக்கள் சார்ந்த வாழ்வியல் இலக்கியத்தை நிராகரித்தபடி, அதை வெறும் பிரச்சார இலக்கியமாகவும் வரட்டுத்தன… இலக்கியமாகவும் காட்டி, மக்கள் இலக்கியத்தை நிராகரித்தனர்.
புலிகள் அழிந்த பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தில் மக்கள் அரசியலை முன்வைத்து அரசியல் செய்யாத ஒரு உண்மையை எப்படி எதார்த்தமானதோ, அது போல் மக்கள் நலன் சார்ந்த இலக்கியம் என்பது இலக்கியத்தில் இருந்ததில்லை. மக்கள் விரோத இலக்கியம், அதாவது இலக்கியம் இலக்கியத்துக்கே என்றதனை தாண்டி எதுவும் இருக்கவில்லை.
தங்களை பிரமுகராக முதன்மைப்படுத்தும் நோக்கில் இலக்கியஙகள் படைக்கப்பட்டன. படைப்பாளிக்கு சமூக நோக்கம் இருந்ததில்லை. மக்களின் அவலங்கள், துயரங்கள், விடிவில் அக்கறையற்றவர்களின் படைப்புகளே படைப்புகளாக இருந்தன.
புலிக்கு பிந்தைய சூழல்
புலிகளின் அழிவிற்கு பின்பு புலி ஆதரவு இலக்கிய போக்கு முடிவுக்கு வந்தது. புலிக்குள் இருந்த வலதுசாரிய இலக்கிய பிரமுகர்கள், தங்களை முன்னிறுத்தி நிலைநிறுத்தும் வண்ணம் புதியதொரு இலக்கிய போக்கை வெளிபடுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இது இன்று புலி, புலியெதிர்ப்பு மற்றும் பிரமுகர்களை இலக்கியம் இலக்கியத்திற்கே என்னும் புள்ளியில் சந்திக்க வைத்துள்ளது. மக்களைந் சாரதா இந்த இலக்கிய நடத்தைகள் அனைத்தும், முரண்ணற்ற வகையில் பரஸ்பரம் அங்கீகாரத்துடன் ஒன்றாக பயணிக்கத் தொடங்கி இருக்கின்றன.
கடந்த காலத்தில் புலிகளுக்குள் இருந்து முன்வைத்த, உழைக்கும் மக்கள் விரோத இலக்கியத்தின் தொடாச்சியாக இன்றைய படைப்புகள் வெளி வருகின்றன. அரசியல் ரீதியாக புலிகளின் அரசியலை ஆதரித்து, அதில் தங்கள் அரசியல் நடத்தையும் மறுதளிக்காத, அதே அரசியல் தொடர்ச்சியாகவும் இந்த இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன.
எந்த நிகழ்வையும் அதன் கால அரசியல் ஊடாக அணுகாத படைப்புகள், அந்த அரசியலை பாதுகாக்கின்றதையே தொடர்ந்து செய்கின்றது.
வெளிவரும் படைப்புகள் கொண்டு இருக்கக் கூடிய விமர்சனப் போக்குகள்
புலிக்கு பின்னான முன்னாள் புலி இலக்கிய பிரமுகர்களின் படைப்புகள், புலிகள் பற்றிய விமர்சனங்களைக் கொண்டது தான். ஆனால் அவை அரசியல் விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல. மாறாக சம்பவங்கள், நடத்தைகள் மீதானது. தங்கள் மத்தியர வர்க்க வலதுசாரிய அதிருப்தியையும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் அடிப்படையாகக் கொண்ட விமர்சனம். இவை யாழ் மேலாதிக்க சாதிய சிந்தனையின் புளுக்கங்கள்.
புலிகள் இருந்த வரை புலிகளை அண்டி நக்கிப் பிழைத்தவர்கள், இனறு புலிகள் இல்லாத நிலையில் புலியை திட்டிப் பிழைப்பதுமாக இலக்கிய சூழல் மாறி இருக்கின்றது. புலிகளுடன் இறுதி வரை அதன் மக்கள் விரோத பாசிச அரசியலை நியாயப்படுத்திவர்கள் இன்று நேரெதிராக புலிகளை திட்டுகின்ற இலக்கியம் படைக்கின்றனர். இந்த நடத்தை ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து படைக்கும் இலக்கியமல்ல.
வர்க்க ரீதியான தங்களின் வலதுசாரிய மேட்டுகுடி பிரமுகர்த்தன புலி வாழ்வின் போது, சொந்த நலன்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையே இன்று புலிக்கு எதிரான விமர்சனமாக முன்வைக்கின்றனர். தங்கள் பிரமுகர்த்தன சுயநல நடத்தையையும், அதற்கு ஏற்பட்ட பாதிப்பையும், ஒட்டுமொத்த சமூகத்தின் மனிதாபிமான பிரச்சனையாக காட்டுகின்ற வக்கிரமே அண்மையில் வெளிவந்த இலக்கிய படைப்புகளின் கருவாக கொட்டிக் கிடக்கின்றது. சுயநலம் சார்ந்த தங்கள் குறுகிய பிரச்சனையை, சமூகத்தின் பிரச்சனையாக காட்டியே இந்த மக்கள் விரோத இலக்கியத்தைக் கடை விரிக்கின்றனர். இத்தகைய படைப்புகள் மூலம் புலிக்கு பிந்தைய புதிய அவதாரத்தைப் பெற முனைகின்றனர்.
இந்த இலக்கியமும் அது கொண்டுள்ள விமர்சனங்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களில் இருந்தோ, சமூக நோக்கில் இருந்தோ முன் வைக்கப்பபடுவதில்லை என்பதே உண்மை. மக்களை சொல்லி பிழைக்கும் பிரமுகர் பிழைப்புவாதமாகும்.
பிரமுகர்கள் கடந்த சூழலில் கைதிகளா?
"நடந்தவை எதற்கும் நாங்கள் பொறுபாளிகளல்ல. நாங்களும் சூழலின் கைதிகளானோம்". இதை இலக்கிய பிரமுகர்கள் மட்டுமல்ல, எல்லா இயக்க அரசியல் பிரமுகர்களும் கூறுகின்றனர். இதன் மறுபக்கம் தான், நடந்த தவறுகள் அனைத்துக்கும் பிரபாகரனுக்கோ அல்லது தலைமைக்கோ சம்பந்தம் இல்லை என்று கூற முனைகின்ற தர்க்கங்கள் கூட.
யாழ் மேலாதிக்க சாதிய சிந்தனை முறை நடந்ததை தவறாக காட்டுகின்றது. அதனை அரசியலாக பார்ப்பதை மறுக்கின்றது. இந்த தவறுக்கு இயக்கத்தில் இருந்த தாழ்ந்த சாதிகளின் நடத்தையாக கூட விளக்கமளிக்கின்றது. இப்படி இந்த இலக்கிய உள்ளடக்கத்துக்கும் யாழ் சிந்தனை முறைக்கும் இடையில் ஓற்றுமை இருக்கின்றது.
நடந்த தவறுகளுக்கு தங்களின் வலதுசரிய அரசியல் காரணம் அல்ல என்று கூறி, அதை மற்றவர்கள் மேல் சுமத்தி விடுகின்றதும், இயக்கத்தில் இருந்த தாழ்ந்த சாதிகளில் நடத்தையாக்கி விடுகின்றதும் யாழ் மேலாதிக்க வெள்ளாத்தனமாகும். இயக்கங்களை அண்டிப் பிழைத்த இலக்கியவாதிகள்; சம்பவங்கள் ஊடாக புலியை தவறாக காட்டி, அரசியல் ரீதியாக புலியை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் தங்களின் அன்றைய மற்றும் இன்றைய அரசியல் நிலைப்பாடுகளை சரியானதாக காட்டும் பித்தலாட்டத்தை இலக்கியமாக படைக்கின்றனர்.
கடந்த காலத்தில் அரசியல், கலை-இலக்கியம், ராணுவத்திற்கு தலைமை தாங்கிய அல்லது அதை வழிநடத்தியவர்கள் கடந்தகால சம்பவங்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்பது அடிப்படையில் தங்கள் கடந்த அரசியலை நியாயப்படுத்துவதாகும். இவர்கள் மறுத்தால் யார் இதற்கு பொறுப்பு? நாங்களும் அந்த சூழலின் கைதிகள் என்று கூறிக் கொண்டு தப்பித்துக் கொள்ளும் போக்கு, அன்று போல் இன்றும் தங்களின் அறிவுத் திறமை மூலம் தங்களை முன்தள்ளி பிழைத்துக் கொள்ளும் போக்காக இருப்பதை இன்று காணமுடிகின்றது.
அரசியல், கலை-இலக்கிய, இராணுவ தலைமைகளினால் வழி நடத்தப்பட்ட சாதாரண உறுப்பினர்களும், கூலிப் படையாக பயன்படுத்தப்பட்டவர்களும் மட்டுமே அன்றைய சூழலின் கைதிகள். அவர்கள் கடந்த கால மனித அவலங்களுக்கு பொறுப்பாக முடியாது. மாறாக மற்றவர்களை முன்னின்று வழி நடத்திய இராணுவம், அரசியல், கலை-இலக்கிய துறையினர் அனைவருமே அந்த அரசியலுக்கும், அதன் விளைவுக்கும் பொறுப்பாளிகளாவர். நடந்தது சம்பவங்கல்ல, மாறாக அரசியலாகும்.
இந்த வகையில் கடந்த காலத்தில் அரசியல் - இலக்கியம் மூலம் மற்றவர்களை வழி நடத்தியவர்கள், இன்று அதற்கு பொறுப்பு ஏற்க மறுத்து மக்களை சாராத இலக்கியங்களை தொடர்ந்து படைப்பதையே தங்கள் பிழைப்பாக்குகின்றனர். தங்களை சூழலின் கைதியாக காட்டிக் கொள்ளும் சந்தர்ப்பவாதத்தையே இங்கு காண முடிகின்றது. கடந்த காலத்தில் எல்லா இயக்கத்திலும் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்கள், இதையே இன்று பொதுவான போக்காக கையாள்வதனைக் காணலாம்.
நடந்தவை தனிபட்ட மனிதர்களின் தெரிவல்ல, மாறாக ஒரு அரசியல் வழிமுறை. அந்த அரசியலை முன்னெடுத்த, அதை வழி நடத்தியவர்களே அந்த அரசியலுக்கு பொறுப்பாளிகள். இன்று வரை கடந்த கால வலதுசாரிய வர்க்க அரசியலை நிராகரித்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம் சார்ந்து சிந்திக்கவும் வாழவும் மறுக்கின்ற போக்கில், நேர்மையான மக்களைச் சார்ந்து இயங்கும் சுயவிமர்சனத்துக்கு இடமில்லை. இந்த சுயவிமர்சனமற்ற அரசியல் தன்மையே, இன்றைய இலக்கிய போக்காகும்.
நன்றி .புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இணையத்தளம்