தூய்மையான அரசியல்பேசுகிற பெரியாரியவாதிகளும், தூய்மையான இலக்கியம் பேசுகிற இலக்கியவாதிகளும்
ஜெயகாந்தனைக் காய்வது குறித்துச் சொல்லிக் கொண்டுள்ளேன்.
ஜெயகாந்தனின் மரணத்தைஎன்னைப் போன்றவர்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிப் போக்கில் ஒரு அத்தியாயம் முடிவுக்குவந்தது என்கிறோம். போர்ஹே, ஃப்யூன்டஸ் என்கிற லெவலில் அவ்வப்போது பீலா விடுகிற எல்லோரும் இன்று ஒரு கள்ள மவுனத்தைச் சூடிக் கொண்டு உட்கார்ந்துள்ளனர். இவர்களையும், பிரச்சாரநெடி வீசும் எழுத்துக்கள் என வாழ்ந்த காலத்தில் அவரைப் பேசுவதற்கே தகுதியற்றவராக ஒதுக்கியசுந்தர ராமசாமி, க,நா.சு ஆகியோரையுந்தான் 'தூய' இலக்கியவாதிகள் என்கிறேன்.
இன்னொரு பக்கம் சமஸ்கிருதத்தை உயர்த்திப் பேசினார், திராவிட இயக்கத்தைக் கண்டித்தார், பிரபாகரனை எதிர்த்தார்,ஜய ஜய சங்கரா என்றார் எனச் சொல்லி ஜெயகாந்தனை முற்றாக நிராகரிக்கும் வறட்டுப் பெரியாரியவாதிகளும் ஜெயகாந்தனைக் காய்கின்றனர். இவர்களைத்தான் நான் "தூய" அரசியல் பேசுவோர் என்கிறேன்.தூய கம்யூனிசம், தூய பெரியாரியம் என்றெல்லாம் அரசியலிலும் பல "தூய"ங்கள்உண்டு.
ஜெயகாந்தனைத் தமிழ்வரலாற்றின் ஓர் அத்தியாயம் எனச் சொல்லும் எங்களுக்கு அவர் மீது விமர்சனங்களே இல்லைஎன்பதல்ல. ஒருபால் புணர்ச்சி குறித்தெல்லாம் அவரிடம் எத்தனை சநாதனக் கருத்துகள் இருந்தன என்பது குறித்து நான் அவரைக் கண்டித்துள்ளது சிலருக்கு நினைவிருக்கலாம் ('கலாச்சாரத்தின்வன்முறை'). அவரது எழுத்துகள் குறித்த எனது விரிவான மதிப்பீடு இம் மாத இதழ் ஒன்றில்வெளி வரும்.
இத்தனைக்கும் அப்பால்தான் அவரை தமிழ் வரலாற்றின் ஓர் அத்தியாயம் என்கிறோம்.
இந்திய மரபு எனச்சொல்லலாகாது, இந்திய மரபுகள் எனச் சொல்ல வேண்டும் என்பவர்கள் நாம். இந்திய மரபுகளில்இந்து மரபுகளுக்கு ஒரு மிகப் பெரிய பங்குண்டு என்பதையும் அவை பிற மரபுகளின் மீதும்கூட ஒரு செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதையும் அவற்றைப் பிடிக்காதவர்களுங் கூட மறுத்துவிடஇயலாது. இந்தப் பண்பாட்டிற்குள் இயங்கும் ஒரு எழுத்தாளன் அவற்றிலிருந்து விலகி நிற்க இயலாது. ஜெயகாந்தனைப் பொருத்தமட்டில் அவர் இப்படி இவற்றிலிருந்து விலக இயலாமற் போனவர் மட்டுமல்ல, இவற்றின் மீது மரியாதை உள்ளவராகவும் இருந்தார். அவற்றின் குறை நிறைகளை அவர் பிரச்சினைப் படுத்தினார். இந்துச் சமூகத்தின் மேல் தட்டு மக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்குப்பின் உருவான நவீனத்துவத்தை எதிர் கொண்டதைக் குறித்து அவர் தனக்கே உரிய முறையில், இந்த மரபுகளை நிராகரிக்காமல், அவற்றை ஏற்றுக் கொண்டு , அவை சந்திக்கும் பிரச்சினைப்பாடுகளை உசாவினார்.
எனினும் அவற்றோடுஅவர் நிறுத்திக் கொள்லவில்லை. ஆக அடித்தள மக்களின், தொழிலாளிகள், விபச்சாரிகள், நகர்ப்புறச் சேரி மக்கள், திருடர்கள் என இவர்களின் மத்தியிலும் உறையும் மானுட மேன்மைகளை வெளிச்சமிட்டார்,சில லட்சிய மனிதர்களை உருவாக்கி உலவவிட்டார், 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ரிஷிமூலம்', 'அந்தரங்கம் புனிதமானது', 'சமூகம் என்பது நாலு பேர்' ஆகிய படைப்புகளின் ஊடாகஎன்னைப் போன்ற அன்றைய இளைஞர்களின் மத்தியில் பிற மனிதர்களுக்கு இடையேயான உறவுகளை அணுகுவதில்மேன்மை மிக்க சில மதிப்பீடுகளைப் பதித்தார். அவை பசுமரத்தாணி போல எங்களிடம் ஒட்டிக்கொண்டன.
சொல்லிக் கொண்டேபோகலாம். ரவி சுப்பிரமணியம் இயக்கிய ஜெயகாந்தன் ஆவணப் படத்தை ஒரு முறைக் கூர்ந்து பாருங்கள். தமிழ் மரபு, தமிழ் இலக்கிய மரபு அவரிடம் எத்தனை ஆழமாகப் பதிந்துள்ளது, அது எப்படி அவ்வப்போதுவெடித்துக் கிளம்புகிறது என்பதைப் பாருங்கள். அவரே அவரின் அடையாளங்களில் ஒன்றான திமிருடன்கூறிக் கொள்வதைப் போல அவர் தமிழால் வளம் பெற்றது மட்டுமல்ல தமிழ் அவரால் வளம் பெற்றது.
பின் சமஸ்கிருதம் தமிழைக் காட்டிலும் உயர்ந்தது என அவர் சொன்னதன் பொருளென்ன? எந்தப் பொருளும் இல்லை. அதை அவர் வற்புறுத்தித் திரிந்தவரும் இல்லை. அவரைப் படித்தவர்களுக்குத் தெரியும், அட அவரோ தமிழை அப்படித் தாழ்த்திப் பேசி இருக்க இயலும்? ஒரு நீண்ட, இப்படியான ஒரு சாதனைகள் மிக்க அர்த்தமுள்ள வாழ்வில் இத்தகைய குண விகாரங்கள் தவிர்க்க முடியாதவை. அவை பெரிதில்லை.
ஜெயகாந்தனை இந்தக்காரணத்திற்காக ஏசும் நீங்கள்தான், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும்காணோம்..." என உலகறிய முழக்கிய பாரதியையும் கூட வேறேதோ காரணஞ் சொல்லி ஏசுகிறீர்கள்.ஒரு கலைஞனையும் ஒரு அரசியல்வாதியையும் வித்தியாசப் படுத்திப் பார்க்க இயலாத மூர்க்கம்என்பதைக் காட்டிலும் இதை வேறென்ன சொல்வது.
பாரதியின் வரிகளை அன்றோ தந்தை பெரியார் ஒரு குறிப்பிட்ட காலம் வரை 'குடியரசு' இதழில் முகப்புக் கொள்கைப் பாடலாக வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
தந்தை பெரியாரும்கூடத்தான், ஒரு முறை அல்ல, திரும்பத் திரும்ப "தமிழ் காட்டுமிராண்டி மொழி"எனச் சொன்னார். வெறுப்பாயோ அதற்காக அவரை.
முரண்பாடுகளின்மூட்டை. அட, இதுவும் அவரே தன்னைப் பற்றிச் சொன்னதுதானே. மனிதர்கள் முரண்பாடுகளின் மூட்டையாகத்தான்இருக்க இயலும். முரண்பாடுகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டுமானால் நாம் மாடாகத்தான் பிறந்திருக்கவேண்டும். பெரியாரும் கூடத்தான் இந்த நாட்டுக்குக் காந்தி தேசம் எனப் பெயர் வைக்க வேண்டும்என்றார். காந்தி கிணறு எனப் பெயர் வைக்கவும் செய்தார். பின் காந்தி "பொம்மை"களைஉடைத்தார். தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். பின் கள்வேண்டுவோருக்கு ஆதரவளித்தார்.
நான் இங்கு தந்தைபெரியாரை அதிகம் மேற்கோளிடுவதற்குக் காரணம் தம்மைப் பெரியாரிஸ்டுகளாக நினைத்துக் கொண்டுள்ளவர்கள் அதிகம் ஆடுவதால்தான்.
தி.மு.க வை விமர்சித்தார்,பிரபாகரனை விமர்சித்தார். ஆமாம் இவர்களெல்லாம் என்ன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களோ? இந்த அம்சங்களில் ஜெயகாந்தன் தவறுகள் செய்து இருந்தால் அவற்றைச் சுட்டிக் காட்டுவோம். அதற்காக அவரை நிராகரிப்போமோ?
காங்கிரசை ஆதரித்தார்.ஆமாம் ஆதரித்தார். காங்கிரஸை அவர் மட்டுந்தான் அதரித்தாரோ? கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கவில்லையா, உமது கலைஞர் ஆதரிக்கவில்லையா? தேர்தல் அரசியல் என்று வந்தால் இதெல்லாம் சகஜம்தான். கவுண்டமணியிடம் பாடங் கேளுங்கள். ஜெயகாந்தன் இவற்றால் அடையாளப் படுத்தப்படவில்லை. அவரின்அடையாளம் இதுவல்ல, இவற்றுக்காக நாம் அவரைத் தமிழ் வரலாற்றில் ஓர் அத்தியாயம் எனச் சொல்லவுமில்லை.
சமஸ்கிருதம் தமிழைவிட உயர்ந்தது, அது தமிழின் தாய் எனச் சொல்லும் அபத்தத்தையும் அதன் பின் உள்ள அரசியலையும் தான் நாம் கண்டிக்கிறோம். மற்றபடி சமஸ்கிருதம் உயர்ந்த மொழிதான். தமிழைப்போல ஒரு செவ்வியல்மொழிதான். மகா காவியங்கள், அறிவியல், மருத்துவம், இலக்கணம் என எண்ணற்ற பங்களிப்புகளச் சுமந்து நிற்கும் மொழிதான். வேத உபநிடதங்கள் அதில் வெறும் 5 சதந்தானப்பா.
நீங்கள் பாவம்.உங்களுக்கு என் அநுதாபங்கள். உங்களால் ஒரு கலைஞனை மதிப்பிட இயலாது. "மகா காளிபராசக்தி கடைக் கண்" வைத்ததால்தான் ருசியப் புரட்சி தோன்றியது எனப் பாடியவன்தான் எனப்பாரதியை ஒரு கணத்தில் புறந்தள்ளுவது எளிது. அதே நேரத்தில் நினைவு கொள்ளுங்கள். உலகில் வேறெங்கும்சம காலத்தில் ருஷியப் புரட்சியை இப்படி வாழ்த்தியவர் யாருமில்லை. ருஷ்யப் புரசிக்கு எதிராக முதலாளிய நாடுகள் அனைத்தும் ஏகப்பட்ட அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருந்த சூழலில் 'மான்செஸ்டர் கார்டியன்' இதழ் "ருஷ்யாவில் பெண்கள் எல்லாம் பொதுவுடைமை ஆக்கப்படப்போகின்றனர்" என அவதூறு பரப்பியது. இன்று போலல்ல. மவுசை நகர்த்தினால் தகவல்கள் கொட்டுவதற்கு. எங்கிருந்து தேடினாரோ தெரியவில்லை. "ருஷ்யாவில் விவாகச் சட்டங்கள்" என்றொருகட்டுரை. ஶ்ரீமான் லெனினின் ஆட்சியில் விவாகச் சட்டங்கள் எத்தனை முற்போக்காக உள்ளன என்பதை அலசி ஆராய்ந்திருப்பார் பாரதி.
டி.எம்.நாயரை, பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின்நாயகர்களில் ஒருவரை, பொதுத்தேர்தலில் வெற்றி அடையச் செய்யாமல் தடையாக நின்ற ஒரு பார்ப்பனரைப் பாரதி எத்தனை கடிந்து எழுதுகிறார் என்பதை ஒரு முறை வாசியுங்கள்.
முஸ்லிம்கள் குறித்துஒரு கதை எழுதி, அதில் உள்ள ஒரு தவறு சுட்டிக் காட்டப்பட்ட போது அதற்காக மனம் வருந்தி,பின் முஸ்லிம் சமூகம் குறித்து பாரதி எழுதிய ஒரு அற்புதமான கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.
"இன்ஷா அல்லாஹ்"- இது குமுதத்தில் ஜெயகாந்தன் எழுதிய ஒரு பக்கப் பத்திக் கட்டுரை. படித்துப் பாருங்கள்.
நான் மிகைப் படுத்திச்சொல்லவில்லை மனதாரச் சொல்கிறேன். ஆயிரம் முறை பெருங் குரலெடுத்துக் கூவி உரைக்கிறேன்.ஜெயகாந்தனும் பாரதியும் இந்து தர்மத்தை ஏற்றவர்கள்தான். ஆனால், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலேனும் ஏதேனும் ஒரு சமூகத்தினர் மீது, அடித்தள மக்கள் மீது, சிறுபான்மையினர் மீது வெறுப்பைஉமிழ்வதை அவர்கள் எழுத்தில், அவை இலக்கியமானாலும் சரி, அரசியல் ஆனாலும் சரி காட்ட இயலுமா?.
ஒப்பீட்டுக்காகச்சொல்கிறேன். ஜெயமோகனும் இந்து தர்மத்தை உயர்த்திப் பிடிக்கிற நபர்தான். அந்த நபரின்எழுத்துக்கள், அவை இலக்கியமாயினும், அரசியலாயினும் எத்தனை நுண்மையாக வெறுப்பை விதைக்கின்றன..த்தனை ஆழமாக மக்களைப் பிளவு படுத்துகின்றன, எத்தனை கொடூரமாக வன்முறைகளை நியாயப்படுத்துகின்றன என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.
அப்போது தெரியும்ஜெயகாந்தன் எத்தனை உயர்ந்து நிற்கிறார் என. ஏன் அவரது மறைவைத் தமிழ் மொழி வரலாற்றில்ஓர் அத்தியாயம் முடிந்தது எனச் சொல்கிறோம் என.
நன்றி முகனூல்