தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்- மிருதுலா தம்பையா
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன், யுத்தக் களங்களில் குற்றங்கள் மற்றும் மரணங்கள் என்பன வழமையானவைகளே என்று தெரிவித்தார். எனவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) அறிக்கையின்படி ஒரு உள்ளக விசாரணையை அமைப்பது மிகவும் முக்கியமானது. உள்ளக விசாரணை நாட்டின் எதிர்கால நல்லிணக்கத்துக்கு ஆதரவளிக்கும். அதேவேளை அவர் மேலும் தெரிவித்தது,”எனக்கு எதிராக அவர்களால் எந்தவித சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. போர் முடியும் வரை நான் எல்.ரீ.ரீ.ஈ யில் இருக்கவில்லை. நீண்ட காலத்துக்கு முன்னரே நாங்கள் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டோம், மற்றும் கிழக்கு மாகாண தேர்தல்களில் நாங்கள் மக்களின் ஆணையையும் பெற்றுவிட்டோம். தற்பொழுது நாங்கள் மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் மற்றும் எங்கள் அரசியற் கட்சி ஜனநாயக விதிப்படி செயலாற்றி வருகிறது. அவர்கள் தனிப்பட்ட ரீதியில் என்னைக் கைது செய்யவோ அல்லது எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ முடியாது”.
அவரது நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:
- கேள்வி: முன்னைய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது என்கிற நிலைப்பாட்டில்தான் தற்போதைய தேசிய அரசாங்கமும் உள்ளது. முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் கேபி 24 மணி நேர கண்காணிப்பின் கீழ் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரனும் தான் எந்தக் குற்றத்துக்கும் குற்றவாளி இல்லை, அதனால் தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை தேவையற்றது என்று சொல்லியுள்ளார். உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: எனக்கு எதிராக அவர்களால் எந்தவித சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. போர் முடியும் வரை நான் எல்.ரீ.ரீ.ஈ யில் இருக்கவில்லை. நீண்ட காலத்துக்கு முன்னரே நாங்கள் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டோம், மற்றும் கிழக்கு மாகாண தேர்தல்களில் நாங்கள் மக்களின் ஆணையையும் பெற்றுவிட்டோம். தற்பொழுது நாங்கள் மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் மற்றும் எங்கள் அரசியற் கட்சி ஜனநாயக விதிப்படி செயலாற்றி வருகிறது. அவர்கள் தனிப்பட்ட ரீதியில் என்னைக் கைது செய்யவோ அல்லது எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ முடியாது.
எனக்கு எதிராக எதுவித சிவில் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப் படவில்லை அதனால் நான் கைது செய்யப்பட மாட்டேன். வடக்கு மற்றும் கிழக்கில் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களைக் கைது செய்ய அரசாங்கம் எண்ணுமானால், அவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதிப்படுத்தும் அனைத்து தலைவர்களையும் கைது செய்ய வேண்டும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள்தான் ஆயுதக் கலாச்சாரம் ஆரம்பிப்பதற்காக தமிழ் இளைஞர்களை மூளைச் சலவை செய்தவர்கள். ஆகவே அத்தகைய நடவடிக்கைகளை 1976ல் ஆரம்பித்து அதன் பின்னரும் செய்து வருபவர்களான ரி.என்.ஏ கூட்டணியில் உள்ள நான்கு கட்சித் தலைவர்களையும் கட்டாயம் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். நானும் கூட இந்தப் பட்டியலில் இடம்பெறக் கூடும். ஆனால் தனிப்பட்ட நபர் என்கிற வகையில் அவர்களால் என்னைக் கைது செய்யவோ எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ முடியாது.
- கேள்வி: காணாமற் போனவர்களைப் பற்றி விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பெரும்பாலானவை எல்.ரீ.ரீ.ஈக்கு அப்பால் உங்களையும் மற்றும் கருணாவையும் பற்றியுமே குற்றம் சுமத்தியுள்ளாதாகச் சொல்லப்படுகிறது. இதை நீங்கள் எப்படி நியாயப் படுத்துகிறீர்கள்?
பதில்: எனது அரசியல் கட்சியையும் மற்றும் என்னையும் சில முறைப்பாடுகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதை நான் அறிவேன். சந்தேகத்தின் பேரில் எவர்மீதும் முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு மக்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் ஆணைக் குழுவானது சுதந்திரமானதும் மற்றும் நீதியானதுமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். எப்படியாயினும் ரி.எம்.வி.பி க்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
- கேள்வி: ரி.என்.ஏ தலைவர் சம்பந்தனை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ஐதேக மற்றும் ஸ்ரீ.ல.சு.க என்பன இணைந்து அரசாங்கத்தை உருவாக்கியுள்ளன. அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்கு ரி.என்.ஏ க்கு வாய்ப்புகள் உள்ளன. எனினும் முன்னாள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம் நீண்ட காலத்துக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். ஆனால் தற்போதைய நிலை குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அநேகமான கட்சிகள் தேசிய அரசாங்கமாகச் செயற்படுவதற்காக அரசாங்கத்தில் இணைந்துள்ளன,அத்தகைய சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சி தேவையில்லை என்றே தோன்றுகிறது. மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
- கேள்வி: யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஒரு உள்நாட்டு விசாரணையை அமைப்பதை நீங்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்?
பதில்: யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் பற்றி தமிழ் சமூகம் வித்தியாசமான பல அபிப்ராயங்களைக் கொண்டுள்ளது. யுத்தக் களங்களில் போர்க் குற்றங்கள் மற்றும் மரணங்கள் என்பன வழமையானவைகளே. எனவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) அறிக்கையின்படி ஒரு உள்ளக விசாரணையை அமைப்பது மிகவும் முக்கியமானது. உள்ளக விசாரணை நாட்டின் எதிர்கால நல்லிணக்கத்துக்கு ஆதரவளிக்கும். சர்வதேச விசாரணைகளில் தங்கியிருப்பது அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதனை இங்கு குறிப்பிட வேண்டும். உள்ளக விசாரணைகள் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் மற்றம் பிரச்சினைகளுக்கு நாட்டுக்குள்ளேயே தீர்வு காணமுடியும்.
- கேள்வி: கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரனுடன் உங்களுக்குள்ள உறவு பற்றி வரையறுத்துக் கூறமுடியுமா?
பதில்: அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்துகிறார் மற்றும் நான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவன். அவருடன் எனக்கு நேரடியான உறவு எதுவும் கிடையாது.
- கேள்வி: மகாண மட்டத்தில் உள்ள தேசிய நிருவாகத்தில் நீங்கள் செயலாற்றி வந்தீhகள். இருந்தும், கடந்த வாரத்திலிருந்து நீங்கள் ஒரு எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறீர்கள். இதற்கு என்ன காரணம்?
பதில்: அதை நாங்கள் ஒரு தேசிய நிருவாகம் என அழைக்க முடியாது. கிழக்கு மாகாணசபையில்; ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடமே பெரும்பான்மை ஆசனங்கள் உள்ளன. ; ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த எங்களுடன் பேசியபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து மாகாண மட்டத்தில் ஒரு நிருவாகத்தை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே வழங்கும்படி எங்களை வற்புறுத்தினார். அதன்படி நாங்கள் ஒரு நிருவாகத்தை உருவாக்கி முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவரை நியமித்தோம்;.
முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவரை நியமிப்பது என்றும் அமைச்சர் சபை அமைச்சர்களை பின்னர் நியமிப்பது என்றும் அப்போது முடிவெடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் அமைச்சர் சபை அங்கத்திவர்களை நியமிப்பதை ஒத்திவைத்து காலத்தை விரயமாக்கினார்கள். முறையான காரணங்கள் இன்றி திடீரென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரி.என்.ஏ உடன் கலந்துபேசி ஒரு நிருவாகத்தை அமைப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் ஹபிஸ் நசீர் அகமது மற்றும்; ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரேம்ஜயந்த ஆகியோர் வெளிப்படையின்றி செயல்பட்டது எங்களுக்கு தெளிவாகத் தெரியும். எனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 10 அங்கத்தவர்களாகிய நாங்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழந்து விட்டதால் ஒரு நிருவாகத்தை அமைப்பதற்காக ரி.என்.ஏ தலைவர் சம்பந்தனைச் சந்தித்தோம். இருந்தும் எங்கள் முயற்சி தோல்வியடைந்தது.
ஆகவே கிழக்கு மாகாணசபையில் தேசிய நிருவாகம் என்கிற ஒன்று இல்லை என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அது சாதாரணமாக ரி.என்.ஏ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவற்றுக்கு இடையே உருவாக்கப்பட்ட ஒரு நிருவாகம் மட்டுமே. இதன் கருத்து ரி.என்.ஏ தனது அரசியல் இலக்கை வென்றுவிட்டது என்பதில்லை ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவர்களை ஏமாற்றிவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக பலவீனமடைந்துள்ளதால், இந்த பரிதாபகரமான நிலவரத்தின் பின்னணிக்கு காரணம் அதன் தலைமைத்துவமே.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஒரு தேசிய நிருவாகத்தை அமைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்கவில்லை அல்லது இதுபற்றி யாரும் எங்களுடன் கலந்தாலோசிக்கவும் இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களின் இஷ்டப்படி ஒரு நிருவாகத்தை அமைக்கும் மிகவும் சாமர்த்தியமான ஒரு முடிவை மேற்கொண்டது. அவர்கள் தேசிய அரசாங்கம் என்கிற ஒரு பதத்தை மட்டும் பயன்படுத்துகிறார்கள் ஆனால் நடைமுறையில் அதைப் பின்பற்றவில்லை.
- கேள்வி: ஏன் உங்களால் ரி.என்.ஏ உடன் சேர்ந்து ஒரு மாகாண நிருவாகத்தை அமைக்க முடியவில்லை? ஏன் அது தோல்வியடைந்தது?
பதில்: ரி.என்.ஏ இடம் 11 ஆசனங்களும் மற்றும் எங்களிடம் ஒன்பது அங்கத்தவர்களும் இருந்தனர். ஒரு நிருவாகத்தை அமைப்பதற்காக நாங்கள் ஒப்பமிட்ட உடன்படிக்கையின்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எங்களை ஏமாற்றுகிறது என நாங்கள் ரி.என்.ஏ தலைவர் சம்பந்தனிடம் சொன்னோம். இந்த விடயத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையின் நிலைப்பாட்டையிட்டு நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம் என்றும் நாங்கள் மேலும் அவரிடம் சொன்னோம்.
எனவே நாங்கள் முதலமைச்சர் பதவியையும் மற்றும் சில அமைச்சுப் பதவிகளையும் தியாகம் செய்ய தயாராக உள்ளதாக தலைவர் சம்பந்தனிடம் நாங்கள் தெரிவித்தோம். ஏனைய அமைச்சு பதவிகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய முஸ்லிம் மற்றும் சிங்கள அமைச்சர்களிடையே சமமாக பகிரலாம்; என்றும் அவரிடம் நாங்கள் தெரிவித்தோம். எங்களுடன் இணைந்து ஒரு நிருவாகத்தை அமைப்பதற்கு சம்பந்தன் இணங்கினார், ஆனால் கிழக்கு மகாணசபையில் தற்போதுள்ள கல்வி அமைச்சருக்கும் மற்றும் தற்போதைய முதலமைச்சருக்கும் இடையில் தற்போதைய நிருவாகத்தை உருவாக்குவதற்காக சில பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.
- கேள்வி: எனினும் ஒரு நிருவாகத்தை அமைப்பதற்காக ரி.என்.ஏக்கு ஆதரவளிப்பதற்கு நீங்கள் முதலில் சம்மதித்ததாகவும் ஆனால் கடைசி நேரத்தில் மறுத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?
பதில்: நல்லது, அரசியல் ரீதியாக ரி.என்.ஏ சரி என்று காட்டுவதற்காகச் சொல்லப்படும் பொய் இது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஒரு நிருவாகத்தை அமைப்பதற்காக நாங்கள் ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டோம் அனால் பின்னர் நாங்கள் அதிருப்தி அடைந்ததும் அந்த உடன்படிக்கையை ஆளுனரிடம் இருந்து திரும்ப பெற்றுவிட்டோம். அந்த பழைய உடன்படிக்கையை திரும்ப பெற்றதின் பின்னரே நாங்கள் ரி.என்.ஏ உடன் ஒரு உடன்படிக்கையை செய்வதாக ரி.என்.ஏ க்கு வாக்குறுதி வழங்கினோம். தலைவர் சம்பந்தன் எங்களிடம் நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வுடன் பேசினார், இருந்தும் பின்னர் அவர் தனது வாக்குறுதியை மாற்றிக் கொண்டார் இதனால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம்.
மிகவும் ஆரம்பக் கட்டத்தில் தலைவர் சம்பந்தன் மற்றக் கட்சிகளுடன் இணைந்து ஒரு நிருவாகத்தை உருவாக்குவதில் எந்தவித ஆர்வமும் காட்டவில்லை, பின்னர் ஊடகங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். ஆனால் அவர் அமைச்சுப் பதவிகளிலேயே அதிக அக்கறை காட்டினார் முதலமைச்சர் பதவியில் அல்ல.
- கேள்வி: கடந்த வாரம் கிழக்கு மாகாணசபையின் உப தவிசாளர் குற்றவியல் பிரேரணை மூலம் சபையினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: உப தவிசாளரை பதவி நீக்கம் செய்தது அரசியல் ரீதியாக சபையின் கீழ்த்தரமான ஒரு செயல். அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த உப தவிசாளர் எம்.எஸ். சுகைர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காகவும் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் கடுமையாக உழைத்தவர். எப்படியாயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி சிறிசேனவுடன் இணைந்தது தபால் வாக்களிப்பின் பின்னரே. உப தவிசாளரை அகற்றுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றை கைச்சாத்திட்டது. எனவே ஏனைய அரசியற் கட்சிகளில் இருந்து அரசியல் தலைவர்கள் எழுச்சி பெறுவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரும்புவதில்லை என்பதற்கு இது தெளிவான ஒரு சான்று. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய நிருவாகம் என்கிற பெயரில் தங்கள் நிகழ்ச்சித் திட்டத்தை சௌகரியமாக தொடர்கிறது. உப தவிசாளரின் குற்றவியல் பிரேரணையை நாங்கள் எதிர்த்தோம் அது மிகவும் அநீதியானது.
- கேள்வி: மத்திய அரசாங்க மட்டத்தில் தேசிய அரசாங்கம் என்கிற நடைமுறையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: புதிய ஜனாதிபதியின் கீழ் ஒரு முறையான நிருவாகத்தை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் நிலமை வித்தியாசமாக உள்ளது. குறைவான எண்ணிக்கையுள்ள ஆசனங்களுடன் ஐதேக நாட்டை ஆட்சி செய்கிறது. இதைத்தான் தேசிய அரசாங்கம் மற்றும் நல்லாட்சி என அழைக்கிறார்கள். எங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை!
- கேள்வி: வரப்போகும் பொதுத் தேர்தலில் நிங்கள் போட்டியிடுவீர்களா?
பதில்: நாங்கள் நிலமைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதுதான். எனவே தேர்தலில் போட்டியிட வேண்டியது கட்டாயமான ஒன்று, ஆகவே பாராளுமன்ற தேர்தல்களில் நாங்கள் போட்டியிடுவோம்.