புலம்பெயர் நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்கவும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சவூதி அரேபியாவில் தொழில் புரிந்துவந்த மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரகுபதி கனகசூரியம் என்பவர், விடுமுறையில் 22ஆம் திகதி நாடு திரும்பினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கைதுசெய்யப்பட்ட ரகுபதி கனகசூரியம், தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னர் விடுமுறையில் நாடு திரும்பி மீண்டும் எந்தவித இடையூறுமின்றி ரகுபதி கனகசூரியம், சவூதி அரேபியாவுக்கு திரும்பிச் சென்றிருந்ததாகவும் முதல் முறையாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
நல்லாட்சி என்றால் தமிழ் மக்கள் இவ்வாறு கைதுசெய்யப்படலாமா?. அரசியல் காரணங்களுக்காக புலம்பெயர்ந்துள்ளோர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் முன்னாள் போராளிகள் இந்த சந்தர்ப்பத்தில் நாடு திரும்புவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் முடிவில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 15 தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடு சென்று தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடு திரும்பியவர்களும் இதில் அடங்குகின்றனர்.
குவைத், ஓமான், சவூதி அரேபியா, இத்தாலி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து நாடு திரும்பிய பலர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எனவே இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில் புலம்பெயர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்கவும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.