கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக நடைபெற்ற பல உண்மைச் சம்பவங்களை எமது மக்களுக்கு தெரிவிப்பதற்காக தற்போது நான் புதிய முயற்சி எடுத்துள்ளேன். நான் எழுதுவதை யாரும் படிப்பதில்லை. மாறாக, அதனை படிப்பவர்கள் யாரும் அது பற்றிக் குற்றம் சொன்னதும் இல்லை. குற்றம் சொல்பவர்கள் யாரும் படிப்பதுமில்லை’ இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர்கள் கூட்டம், மட்டக்களப்பு, தேற்றாத்தீவு கிராமத்தில் சனிக்கிழமை (18) இரவு நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை வழங்கி, அவர்களை குழப்பும் நடவடிக்கைகளை பலர் செய்துவருகின்றனர். இதனால், மக்கள் திக்கித்திணறுகின்றனர். இந்த நிலையில், மக்களை தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது. ஜி.ஜி.பொன்னம்பலத்தையும் தந்தை செல்வநாயகத்தையும் முதன்முதலில் சந்தித்த அரசியல்வாதி நான். பழைய தலைவர்கள் இவர்கள் இருவரும் கடந்த காலத்தில் ஒன்றாக இருந்து எமது மக்களுக்காக குரல் கொடுத்திருந்தும், பின்னர் பிரிந்து செயற்பட்டு, மீண்டும் ஒன்றுசேர்ந்து செயற்பட்ட வரலாறு உள்ளது.
1972ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் பொதுக்கூட்டத்தை திருகோணமலையில் நடத்தியது. அக்கூட்டத்தில் இரா.சம்மந்தன் பற்கேற்றிருந்தும் அவர் எந்தக் கட்சி சார்பாகவும் எதுவித பதவிகளையும் வகிக்கவில்லை. அன்றையதினம் நடைபெற்ற கூட்டத்திலேயே தந்தை செல்வா தலைமையில் உருவாக்கப்பட்டதே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியே தமிழருடைய கட்சி என்ற நோக்கத்துடன் செயற்பட்டவர் தந்தை செல்வா. 1972ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழரசுக் கட்சி இனிமேல் இயங்காது என்ற கோஷத்துடனும் தமிழரசுக் கட்சியை மேலோங்கச் செய்யவேண்டும் என்று கனவிலும் கூட நினைக்காமலும் தந்தை செல்வா செயற்பட்டுவந்தார்.
1977ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது தமிழர் விடுதலைக் கூட்டணியே தவிர, தமிழரசுக் கட்சி அல்ல. தந்தை செல்வா இறக்க முன்னர் ஜி.ஜி.பொன்னம்பலத்தையும் தொண்டமானையும் கொணர்ந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களாக்கிவிட்டு, இனிமேல் தமிழர்களின் தலைவர்கள் இவர்களே என அறிமுகமாக்கிவிட்டு இறந்தார். தந்தை செல்வாவின் பூதவுடல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் கொடி போர்த்தி எரிக்கப்பட்டது. இவை அனைத்தும் வரலாற்றுச் சான்றாகும். இதனை எமது மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். தந்தை செல்வா இறந்து 26 வருடங்களுக்கு பின்னர் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, மட்டக்களப்பு மக்களை முட்டாளாக்கிவிட்டு மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியை மீண்டும் உருவாக்கினார்.
இவை ஒரு புறமிருக்க மட்டக்களப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸவரன் ஆகியோர் 2003ஆம் ஆண்டுவரை எப்போதாவது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்துள்ளார்களா? இல்லவே இல்லை.
2003ஆம் ஆண்டுக்கு முன்னர் அவ்வாறு அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்திருந்தால், அதனை அவர்கள் நிரூபித்துக் காட்டட்டும். அதற்கு நான் சவால் விடுக்கின்றேன். இவர்கள் அனைவரும் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி மாநாட்டில்; அக்கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார்கள். இதுவே உண்மை.
மட்டக்களப்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசனம் எவ்வாறு கிடைத்தது என்பதை நன்கு உணரவேண்டும். அவர்கள் தங்களை பற்றி சிந்தித்த பின்னரே, மற்றையவர்களை பற்றி கதைக்கவேண்டும். தற்போது தமிழரசுக் கட்சி என்று கூறிக்கொண்டு செயற்படும் அனைத்து அரசியல்வாதிகளும் ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து செயற்பட்டவர்கள். இதனை யாரும் மறுக்கமுடியாது.
எமது மக்களுக்காக இதுவரையில் தமிழரசுக் கட்சியிலிருந்து யாரும் உயிர் நீக்கவில்லை. ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து நீலன்; திருச்செல்வம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சிவபாலன், போன்ற தலைவர்கள் இறந்துள்ளார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலத்திலேயே ஆயுதப்போராட்டம், சாத்வீகப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டன. மாறாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிக் காலத்தில் இவை எதுவும் நடக்கவில்லை. இதனை எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். கடந்த காலத்தில் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் உயிரிழந்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரே தவிர, இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இதற்கு யாரும் சவால் விட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளேன்’ என்றார்