4/11/2015

| |

20 தமிழர்கள் பலி: ஆந்திர போலீஸ் மீது கொலை வழக்கு பதிய ஹைதராபாத் ஐகோர்ட் உத்தரவு

ஆந்திர போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான தொழிலாளர்களின் உடல்கள். தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை பலிகொண்ட திருப்பதி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, ஆந்திர போலீஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சிவில் லிபர்டிஸ் கமிட்டி எனும் அமைப்பின் பொதுச் செயலர் சிலக சந்திர சந்திரசேகர் தொடர்ந்த மனு மீது, ஹைதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சேனகுப்தா மற்றும் நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
சித்தூர் என்கவுன்ட்டர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதேவேளையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மேஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.சீனிவாஸ் கூறினார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி 20 தமிழர்களை செவ்வாய்க்கிழமை அம்மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
கடத்தல்காரர்களை சுற்றி வளைத்தபோது, அவர்கள் தங்களை தாக்கியதாகவும் தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆந்திர போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால், இது போலி என்கவுன்ட்டர் என்றும், திட்டமிட்டே தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கூறிவருகின்றன.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட விதம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்றும், போலீஸ் உடனான மோதலில் அவர்கள் ஈடுபட்டதாக தெரியவில்லை என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கொல்லப்பட்டவர்கள் சிலரது உடலில் இருந்த தீக்காயங்களைச் சுட்டிக்காட்டியும் அவர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறல் என ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆந்திர மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம், 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆந்திர போலீஸ் மீது வழக்குப் பதிவு செய்ய சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸாரின் பெயர்களைக் குறிப்பிட்டு, இந்தக் கொலை வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரு மாநில பிரச்சினையின் உள்ளூர் போலீஸ் விசாரிக்க முடியாது என்றும் ஹைதராபாத் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.