3/09/2015

| |

“பெண்ணியம் தமிழ்த்தேசியத்தால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது”

Résultat de recherche d'images pour "நிர்மலா ராஜசிங்கம்."இலங்கைக்கு உள்ளும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த்தேசியக் கருத்தாக்கம் பெண்ணியத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறார் ஈழத்தின் பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம்.
இந்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்திய அரசால் தடுக்கப்பட்ட சர்ச்சை தொடரும் பின்னணியில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஈழத்தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார பிரச்சனைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் விரிவாக பேசிய பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம் இந்த கருத்தை முன்வைத்தார்.
தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்த மற்றும் எடுத்துவரும் அரசியல் கட்சிகளானாலும் சரி, ஆயுதக்குழுக்களானாலும் சரி, பெண்ணை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே கடந்தகாலத்தில் முயன்றார்கள், தற்போதும் முயல்கிறார்கள் என்று கூறிய நிர்மலா, பெண்ணை தமிழ்க்கலாச்சார பிரதிநிதியாக்கி, அந்த கலாச்சார பிரதிநிதியை கட்டுக்குள் வைத்திருப்பதே தமிழ்க்கலாச்சார பாதுகாப்புக்கான ஒரே வழி என்பதாகவே தமிழ்த்தேசிய அரசியல் கருத்தாடல் இருப்பதாக தெரிவித்தார்.
பெண்களின் உடைகள் மற்றும் நடமாட்டம் குறித்து முன்பு விடுதலைப்புலிகள் அமைப்பு கட்டுப்பாடுகள் விதித்ததாகவும், இன்றும் தமிழ்த்தேசிய அரசியல் சித்தாந்தம் அதே அணுகுமுறையையே பெண்கள் தொடர்பில் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார் நிர்மலா.
போர்க்காலத்தில் மட்டுமல்லாமல் போர் முடிந்த பிறகும் ஈழத்தில் வசிக்கும் பெண்கள் தொடந்தும் மோசமான பாலியல் பலாத்கார பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய சூழலே நிலவுவதாக தெரிவித்த நிர்மலா, இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் ஆழமான இராணுவமயமான சூழல் நிலவுவதால், பெண்களின் அன்றாட நடமாட்டம் கூட அச்சத்துடனான செயல்பாடாக பெண்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருப்பதாக கூறினார்.
இந்த சூழல் காரணமாக, இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு படைதரப்பினர் தவிர, தமிழ்ச்சமூக ஆண்களுக்குள்ளேயே இருக்கும் பெண் வெறுப்பு நிறைந்த தமிழ் ஆண்களின் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் தமிழ்ப்பெண்கள் பெருமளவு உள்ளாக நேர்வதாகவும் நிர்மலா அச்சம் வெளியிட்டார்.
அதேசமயம் பாதுகாப்புப்படையினர் சம்பந்தப்பட்ட பாலியல் வன்முறைகளைப் பற்றி மட்டுமே தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் அதிகம் பேசுவதாகவும், தமிழ்ச்சமூக ஆண்களால் செய்யப்படும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களை பேச மறுதலிக்கும் மனோநிலையே நிலவுவதாகவும் நிர்மலா விமர்சித்தார்.
புலம்பெயர்ந்துவாழும் தமிழ்ச்சமூகங்களிலும் கூட பெண்கள் மிக மோசமான குடும்ப வன்முறைகளை எதிர்கொள்ளும் போக்கு தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவித்த நிர்மலா ராஜசிங்கம், 50 வயது, 60 வயது பெண்கள் கூட அவர்களின் கணவர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில்கூட தம் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதாக கூறினார்.
தமிழ்ச்சமூகத்தின் அரசியல் மற்றும் சிவில் தலைமைகள் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட பலவிதமான தாக்குதல்கள், துஷ்பிரயோகங்கள் குறித்து பேச மறுதலிக்கும் போக்குதான் தமிழ்ப்பெண்களும், பெண்ணிய செயற்பாட்டாளர்களும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தடை என்றும் கூறினார் நிர்மலா ராஜசிங்கம்.