திறைசேறி முறி விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒழுங்கீனம் குறித்த விசாரணையை சுயாதீனமாக முன்னெடுக்க மத்திய வங்கியின் ஆளுநர் தற்காலிகமாக பதவி விலகவேண்டும் என ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுப் பதாயின் மத்திய வங்கியின் ஆளுநர் தானாக பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்கம் அவரை தற்காலிகமாகப் பதவி விலக்க வேண்டும் என அந்தக் கட்சிகள் தனித்தனியாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
மத்திய வங்கி மீது மக்கள் கொண்டி ருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் திறைசேறி முறி விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒழுங்கீனம் குறித்த விசாரணை அமைய வேண்டும் என அந்தக் கட்சிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
நிதி மோசடிகளில் கடந்த அரசாங்கம் ஈடுபட்டிருந்தது. இதனையே இந்த அரசாங்கத்திடமிருந்து மக்களும், வர்த்தக சமூகத்தினரும், தாமும் எதிர்பார்க்க வில்லையென ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மத்திய வங்கியால் விநியோகிக்கப்பட்ட திறைசேரி முறிகளில் அதிகளவான முறிகளை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரனின் மருமகன் சம்பந்தப்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரெஷரி நிறுவனம் கூடிய வட்டி வீதத்தில் கொள்வனவு செய்துள்ளது. குறித்த ஒரு நிறுவனத்துக்கு மாத்திரம் எவ்வாறு அதிகளவான முறிகள் வழங்கப்பட்டன. அதுவும் கூடிய வட்டி வீதத்தில் எப்படி வழங்கப்பட்டன என்பது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இது தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கும் நிலையில், இந்த விசாரணைகள் சுயாதீனமாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் தானாக முன்வந்து தற்காலிகமாக பதவி விலக வேண்டும். அல்லது அரசாங்கம் அவரை தற்காலிகமாகப் பதவி விலக்க வேண்டும் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.
மத்திய வங்கி 1000 மில்லியன் ரூபாவுக்கே திறைசேரி முறியை விநியோகிப்பதாக அறிவித்தது. எனினும், இறுதியில் 10058 மில்லியன் ரூபாவுக் கான திறைசேரி முறிகள் விநி யோகிக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய வங்கியின் ஆளுநருடைய மருமகனுடன் தொடர்புபட்ட நிறுவனத்துக்கு மாத்திரம் 5000 மில்லியன் திறைசேரி முறிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறிகள் விநியோகிக்கப்படும் போது சந்தையில் வட்டி வீதம் 9.5 ஆக இருந்தபோதும், குறித்த நிறுவனத்துக்கு மாத்திரம் 12.3 வட்டி வீதப்படி முறிகள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டினார்.
1000 மில்லியன் ரூபாவுக்கு முறிகள் விநியோகிப்பதாக அறிவித்துவிட்டு மத்திய வங்கி எவ்வாறு 10058 மில்லியன் ரூபாவுக்கு திறைசேரி முறிகளை விநியோகித்தது? குறித்த நிறுவனத்துக்கு மாத்திரம் எவ்வாறு அதிகளவு முறிகளை வழங்க முடியும்? கூடுதல் வட்டி வீதம் கோர முடியும் என குறித்த நிறுவனத்துக்கு எவ்வாறு தகவல் சென்றது? போன்ற கேள்விகள் விசாரணைகள் மூலம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பாக குறித்த நிறுவனத்தால் எதிர்வுகூற முடியுமாயின் குறித்த நிறுவனமே மத்திய வங்கியாக இருக்க வேண்டும். அப்படியாயின் முன்னாள் ஜனாதிபதி சாத்திரக் காரர்களை நம்பாமல் இந்த நிறுவனத்தின் உதவியைப் பெற்றிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
குறித்த நிறுவனம் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஊழியர் சேமலாப நிதிய பணம் விடயத்திலும் தொடர் புபட்டிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறான நிலையில் திறைசேரி முறி விநியோகம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்கள் விசாரிக்கப்படவேண்டியுள்ளது.
குறித்த நிறுவனத்தின் தலைவருக்கும், மத்திய வங்கியின் ஆளுனருக்கும் இடையில் குடும்ப ரீதியான உறவுகள் இருப்பதாலேயே விசாரணைகளை சுயாதீனமாக நடத்த மத்திய வங்கியின் ஆளுநர் தற்காலிகமாக பதவியிலிருந்து விலக வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி முறி வழங்குகையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பதவி விலக்க வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது. இது தொடர்பான விசாரணை சி.ஐ.டிக்கு வழங்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி அரசியல் குழு உறுப்பினர் பியசிரி விஜேநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை மோசடி குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ள நிலையில் மத்திய வங்கி ஆளுநர் தொடர்ந்தும் பதவியில் இருப்பது உகந்ததல்ல என ஹெல உறுமயவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அர்ஜுன் மகேந்திர தொடர்பில் இதற்கு முன்னரும் சில குற்றச்சாட்டுகள் எழுந்ததாகவும் ஹெல உருமய பொதுச் செயலாளர் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க குறிப்பிட்டார்.
இதேவேளை நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்க தேசிய சுதந்திர முன்னணி அரசியல் குழு உறுப்பினர் பியசிரி விஜேநாயக்க, மத்திய வங்கி ஆளுநரை சேவையிலிருந்து நீக்கியே இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதனை விசாரிக்க ஜனாதிபதி குழு நியமித்துள்ளதாக கூறினாலும் சி.ஐ.டி.யூடாகவே விசாரணை இடம்பெற வேண்டும் என்றார்.
மூவரடங்கிய குழு
மத்திய வங்கி திறைசேரி முறி மோசடி தொடர்பாக விசாரிக்க ஜனாதிபதியினால் மூவரடங்கிய குழுவொன்று நிய மிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு மிடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதோடு இதன்படி இந்த குழுவின் தலைவராக காமினி பிடிபனவும் குழு உறுப்பினர்களான மகேஷ் களுகம்பிடிய மற்றும் சந்திமால் மெண்டிஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.