3/04/2015

| |

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினாலேயே கல்வி அமைச்சு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்தது.

கல்வியமைச்சை தரமறுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கல்வி அமைச்சை கொடுத்தது என்றால் அதற்கு காரணம் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பத்து உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கொடுத்த ஆதரவினை மீளப்பெற்றதும் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முதலமைச்சு தருகிறோம் வாருங்கள் என அழைத்ததுமே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்வி அமைச்சு வழங்க காரணமாக அமைந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் 2012ம் வருடம் தொடக்கம் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வர முயற்சித்த போதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஏமாற்றியே வந்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பான நாடகம் அரங்கேறத் தொடங்கியது 2012இல் முதலமைச்சை தருகிறோம் என்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015இல் முதலமைச்சு எங்களுக்கு வேண்டும் என்றது. ஆனால் வாய்ப்பை தமக்கு சாதகமாக்க வேண்டும் என்று நினைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து (06.02.2015) முதலமைச்சை தனதாக்கிக் கொண்டது.
ஏமாற்றம் அடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்வி அமைச்சையேனும் தாருங்கள் என கோரத் தொடங்கியது. அதனையும் மறுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரியவதி கலபதிக்கு (27.02.2015இல்)கொடுத்தது. இதனால் ஆத்திரமுற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் பத்துப் பேர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கொடுத்த ஆதரவினை (02.03.2015)மீளப் பெற்றுக் கொண்டதோடு, தமிழ் தேசிய கூட்;டமைப்பிற்கு முதலமைச்சு தருகிறோம் என அழைப்பு விடுத்தனர். இதனால் பயமுற்ற முஸ்லிம் காங்கிரஸ், கல்வியமைச்சை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு (03.03.2015) கொடுக்க முன் வந்தது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் உள்ளடங்களாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் பத்துப் பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முதலமைச்சு தருகிறோம் என அழைப்பு விட்டிருக்காவிடின் நிலைமை மாறி இருக்காது.
இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வளவு காலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைப்பது நிலைக்கும் என்ற கேள்விகள் பலமாகவே உள்ளன.