3/22/2015

| |

ஒடுக்கப்பட்டவர்கள் தரும் கொடிச்சீலை வேண்டாம்: மானிப்பாயில் சாதிமான்கள் அட்டகாசம்!

பெரும் சர்ச்சைக்குரிய ஆலயமாக உருவெடுத்துள்ள மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் புதிதாக உருவெடுத்துள்ள சர்ச்சை நீதிமன்றம்வரை சென்றுள்ளது. கலாசார காவலர்கள் நிறைந்த அந்த ஆலயத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் உள்ள மரபை நிறுத்துவதென ஆலய அறங்காவலர்சபையின் ஒரு பகுதியினர் எடுத்த முடிவே சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்த ஆலயத்தில் கொடியேற்றத் திருவிழாவிலன்று குறிப்பிட்டதொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் கொடிச்சீலை வழங்குவதுடன் அன்றையதினம் தெற்பை அணிந்து அர்ச்சகர்களிற்கு தட்சணை கொடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இது நீண்டகால மரபாக இருந்து வருகிறது.

அண்மையில் இந்த அலயத்தை இடித்து பலகோடி ரூபா செலவில் புனரமைத்தார்கள். இந்தியாவிலிருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு ஆலயம் பகட்டாக அலங்கரிக்கப்பட்டது. இதன்பின்னர் கலாசார காவலர்களின் தொல்லை அங்கு அதிகரித்தது. அண்மையில் பெண்களின் ஆடைகள் தொடர்பாக கறாரான கட்டுப்பாடுகள் விதித்து, சேலை மட்டுமே அணியலாம், தலைவாரி பின்னலிட்டு, பூச்சூடி வர வேண்டுமென அறிவித்து, அதனை கண்ணிற்குள் எண்ணெய் விட்டுக் கொண்டு கண்காணித்து பெருமைப்பட்டு கொண்டார்கள். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் புதிய அறிவித்தலொன்று விட்டுள்ளார்கள்.

இதன்படி குறித்த சமூகத்தின் நிகழ்வுகள் புதிய ஆலயத்தில் தேவையில்லையென அறிவித்தனர். இது ஆலய உபயகாரர்களிற்குள் பிளவை உண்டாக்கி நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று மல்லாகம் நிதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில், தொன்று தொட்டு நிலவும் வழக்கத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாதென உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், நீதிமன்றத் தீர்ப்பிற்கு உடன்படாமல் இன்று மதியம்வரை அவர்கள் முறுகிக் கொண்டு திரிந்ததை அவதானிக்க முடிந்தது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் கொடியேற்றம் ஆரம்பகமாவுள்ள நிலையில், இதுவரை அங்கு சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கிறது.