நாட்டின் எந்தவொரு இடத்திலும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க தற்போதுள்ள அரசாங்கம், ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அவசரகாலச் சட்டத்தை மீண்டும் பலப்படுத்தி நபர்களைக் கைது செய்வதற்கோ அல்லது தடுத்து வைப்பதற்கோ இந்த அரசாங்கத்துக்கு எந்தவொரு தேவையும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்”.
நேற்றைய பத்திரிகைச் செய்திகளில் மேலுள்ள செய்தியும் ஒன்று. அவசரகாலச் சட்டத்தைப் பலப்படுத்தி யாரையும் கைது செய்வதற்கோ தடுத்து வைப்பதற்கோ இப்போது எந்தத் தேவையுமில்லை என்று அலங்காரமாகக் கூறியிருக்கும் பிரதமர், அவசர காலச் சட்டத்தை நீக்குவதாக ஏன் கூறவில்லை?
நடைபெறுவது நல்லாட்சி என்றால், “மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை” என்ற வீர வசனமும் இப்போது எதற்காக?
பிரதமர் ரணிலின் மேற்கண்ட வீரவசனங்களுக்கு பிரதிபலிப்புக் காட்டாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களிடம் வந்து நின்று, “வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை முற்றாகத் திரும்ப அழைக்க வேண்டும்” என்று மக்களை உணர்ச்சிவசப்படுத்த சும்மா முழங்குவது ஏன்?
நீங்கள் கொண்டுவந்த அரசாங்கத்தினது பாராளுமன்றத்தை யும் அதற்கும் மேலுள்ள - நீங்களும் அங்கம் வகிக்கும் - தேசிய நிறைவேற்றுச் சபையையும் பயன்படுத்தி, அவசரகாலச் சட் டத்தை நீக்குவதற்கு முயற்சிப்பதை விட்டுவிட்டு, மக்களிடம் வந்து கூக்குரலிட்டால் இராணுவத்தை அகற்றிவிடலாம் என்று யாரை நம்பச்சொல்கிறீர்கள்?
பயங்கரவாதம் தலைதூக்கும் ஆபத்து இருக்கிறது என்றும், அவசரகாலச் சட்டத்தை நீக்க முடியாது என்றும் சொல்லிக்கொண்டிருக்கும்.... நீங்கள் கொண்டுவந்த அரசுத் தலைவரிடம் விளக் கம் கேட்பதை விட்டுவிட்டு, இராணுவத்தை அகற்றப் போராட்டம் நடத்தப்போவதாகச் சொல்லி யாரை ஏமாற்றுகிறீர்கள்?�
பாராளுமன்றத்திலோ தேசிய நிறைவேற்றுச் சபையிலோ பேசிச் செய்யக்கூடிய அலுவல்களைச் செய்வதை விட்டுவிட்டு, உங்களது ராஜதந்திர அணுகுமுறைகளால் சாதிக்க முடிந்த ஏதொரு விஷயத்தைத்தன்னும் காட்டி மக்களை ஆறுதலடைய வைக்காமல், உங்களால் ஆற்றவே மாட்டாத விஷயங்களுக்கு வெறுமனே முழங்கிக் கொண்டிருப்பது ஏன்?
முகாம்களை மூடிவிட்டு இராணுவம் திரும்பிச் செல்லாவிட் டால் போராட்டம் வெடிக்கும் என்று கடந்த ஐந்து வருடங்களாக அறைகூவி வந்திருக்கிறீர்கள். 2015-ல் தீர்வே வந்துவிடும் நல் லாட்சியைக் கொண்டுவருகிறோம் என்று நம்பிக்கையுடன் தமிழ் மக்களை வாக்களிக்கச் சொல்லி, நீங்கள் விரும்பிய ஆட்சியையும் கொண்டுவந்திருக்கிறீர்கள்.
நாட்டில் மாற்றம் வந்தபிறகும், உங்களால் மக்களுக்கு வாக்களித்தபடி எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை என்றால், வாய் ஓயாமல் முழங்கிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, இத்தறுதிக்கு அந்த அகிம்சைப் போராட்டத்தையாவது வெடிக்க வைத்திருக்க வேண்டுமல்லவா?
தெற்கில் உள்ளோரிடம் பயங்கரவாத அச்சம் நீங்காமல், அவசரகாலச் சட்டம் நீக்கப்படாமல், இராணுவப் பிரசன்னமும் முற்றாக நீக்கப்படாது என்பதைத் தெரிந்துவைத்திருக்கும் நீங்கள் ஒன்றில் உங்கள் அரச சபைகளில் பேசவேண்டும்.
இல்லை, நீங்கள் கொண்டுவந்த அரசிடமும் பேசி உங்களால் எந்தக் காரியத்தையும் ஆற்றமுடியவில்லை என்றால், ஐந்து வருடங்களாகச் சொல்லிவரும், அந்தத் தீர்வு காணும்வரையான அகிம்சைப் போராட்டத்தையாவது முன்னெடுத்திருக்க வேண்டும்....
அதுவுமில்லை, தொடர் உண்ணாவிரதங்களை நடத்த வேண்டிய அளவுக்கு அப்படியொன்றும் உடனே தீர்வு எடுக்கவேண்டிய அவசரத்தேவை இப்ப இல்லையென்றால், “போராட்டம் வெடிக்கும்” என்ற முழக்கங்களை ஏன் விடாமல் தொடர்கிறீர்கள்?
NANRI* THINA MURASU
NANRI* THINA MURASU