யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தி சகலரது மனங்களையும் வெல்வதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை எதிர்காலத்தில் நல்லிணக்கமும் ஸ்தீரத்தன்மையுமுள்ள நாடாக மாறும் என நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
இலங்கை எதிர்காலத்தில் நல்லிணக்கமும் ஸ்தீரத்தன்மையுமுள்ள நாடாக மாறும் என நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், சிங்கள தீவுக்கு பாலமமைப்போம் என சுப்ரமணிய பாரதியார் கவி பாடியது போன்று இலங்கையுடன் சமாதானப் பாலம் அமைப்பதற்காகவே தான் இலங்கை வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நேற்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்று கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார். இரு நாடுகளுக்கும் இடை யிலான உறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கருத்துத் தெரிவித்த அவர் கடலினால் பிரிந்துள்ள இரு நாடுகளும் இணைய வேண்டும் எனவும் தெரிவித்தார். இங்கு மேலும் உரை யாற்றிய இந்திய பிரதமர் இலங்கை வருகைதரக் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை பாராளும ன்றத்தில் உரை நிகழ்த்த கிடைத்ததை கெளரவமாக கருதுகிறேன். ஆசியாவில் பழைமை வாய்ந்த, ஜனநாயக ஆட்சி முறை இங்கு காணப்படுகிறது.
கடந்த வருடம் நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட போது தெற்காசிய தலைவர்கள் என்னை வரவேற்றார்கள். இவ்வாறு நான் தெற்காசிய வலய ஜனநாயகத்தையே கொண்டாடினோம். நாம் பொதுவான நோக்கத்துடன் செயற்படுகிறோம். எந்த நாட்டினது எதிர்காலமும் அதன் அயல் நாடுகளுடனே பிணைந்து காணப்படுகிறது. நான் கனவு காணும் இந்திய தேசம் அயல் நாடுகளுடனான உறவிலே பிணைந்து காணப்படுகிறது.
நாம் எமது இலக்கை நோக்கி படிப்படியாக முன்னேறி வருகிறோம். இங்குள்ள சில நகரங்கள் எமது நாட்டிலுள்ள நகரங்களை ஒத்ததாக இருக்கின்றன. இறைமை, சுதந்திரம் என்பவற்றில் சமமான நாடுகளாகவே நாம் எழுந்து நிற்கிறோம். இரு நாடுகளும் சிறிய கடற்பரப்பினாலே தூரமாக இருக்கின்றன.
இரு நாடுகளுக்குமிடையில் சமயம், கலாசாரம், உணவு, சம்பிரதாயம் இலக்கியம் என பல்வேறு விடயங்களில் நெருங்கிய உறவு இருந்து வருகிறது. சிலப்பதிகாரம், பத்தினிதேவி, இராமர் என இரு நாடுகளுக்கும் தொடர்புள்ள பல அம்சங்கள் காணப்படுகிறது. தர்காநகர், நாகூர்தர்கா, வேலாங்கன்னி ஆலயம் என தொடர்புள்ள இடங்கள் இருக்கின்றன. சுவாமி விவேகானந்தர், அநகாரிக தர்மபால போன்ற நாம் மதிக்கும் பெரியார்களும் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். மஹிந்த, சங்கமித்தவில் இருந்து எமது உறவு நீண்டு காணப்படுகிறது.
எமது நாடுகளுக்கிடையிலான உறவு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. சுதந்திரத்தின் பின் இலங்கை வேகமாக முன்னேறி வருகிறது. தென்னாசியாவின் ஒத்துழைப்பின் பிரதானியாக இலங்கை விளங்குகிறது. தென்னாசியாவில் இலங்கை அடைந்து வரும் முன்னேற்றம் இந்தியாவுக்கு பெரும் பலமாக இருக்கிறது.
எப்பொழுது எமது ஒத்துழைப்பு இலங்கையுடன் பிணைந்து காணப்படுகிறது. எமது மக்களின் நேசம் உங்கள் மீது இருக்கிறது. எமக்கிடையிலான புரிந்துணர்விலே வலயத்தில் எமது நாடுகளில் வெற்றி காணப்படுகிறது. எமது நாடுகளிடையே தனித்துவம் காணப்படுகிறது. சகலரும் சமத்துவமாக வாழ வேண்டுமென்பதே எமது பண்பாக இருக்கிறது.
ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபட்ட தேவை காணப்படுகிறது. இதனால் மோதல்களும் ஏற்படுகிறது.
சலருக்கும் அமைதியான தீர்வு வழங்கப்பட வேண்டும். எமது பிரச்சினைகளுக்கு எமக்கே உரிய பாணியில் தீர்வு வழங்க வேண்டும். பல்லினத்தன்மை நாட்டிற்கு கிடைத்த ஆசிர்வாதமாக பயன்படுத்த வேண்டும். சகல இனத்தவர்களினதும் தேவைகளுக்கு தீர்வு வழங்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
இந்தியாவை பலப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தையும் வளங்களையும் வழங்கி வருகிறோம். அவற்றுக்கு சமமான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. சமஜ்டி முறையை நாம் எமது நாட்டில் அமுல்படுத்தி வருகிறோம்.
இலங்கை யுத்தத்திற்கு வெற்றிகரமான தீர்வை வழங்கியது. யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தி சகலரதும் மனங்களை வெல்வதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
கடந்த தேர்தலில் பொதுமக்களின் பொதுவான குரலும் சகலரதும் பொது இணக்கப்பாடும் காணப்பட்டது. இது புதிய ஆரம்பமாகும். இலங்கை எதிர்காலத்தில் நல்லிணக்கம், ஸ்தீரத்தன்மை உள்ள நாடாக மாறும். இலங்கையின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் நாம் எப்பொழுதும் மதிக்கிறோம். அந்த அடித்தளத்திலிருந்தே நாம் செயற்படுகிறோம்.
எமது வலய நாடுகளுடன் கூட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இந்தியா உலகில் துரிதமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக காணப்படுகிறது. அயல் நாடுகளுடன் நெருங்கிய உறவை பேணி வருகிறோம். அயல் நாடுகளுக்கே நாம் முன்னுரிமை வழங்கி வருகிறோம்.
சகலருக்கும் இந்தியா திறந்த வர்த்தக வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இலங்கையுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து வருவதோடு முதலீட்டு வாய்ப்புகளும் அளித்து வருகிறோம். இரு நாடுகளுக்கும் இந்து சமுத்திரத்தினூடாக வளமடைய முடியும்.
கடலினால் பிரிந்துள்ள நம் இரு நாடுகளும் இணைய வேண்டும். இதனூடாக வலயத்தில் பிரதான என்ஜினாக மாற முடியும். உங்களது பொருளாதார பங்காளராக நாம் எதிர்காலத்தில் செயற்படுவோம். வெளிப்படு தன்மையுடனும் இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. எமது செய்மதி தொழில்நுட்பத்தை இலங்கை பயன்படுத்த அவகாசம் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரதானமாகும். கடலால் எமக்கு பிரிந்திருக்க முடியாது.
பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டினாலும் தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் எஞ்சியிருக்கும். புதிய வழியில் அச்சுறுத்தல்கள் எழலாம். பயங்கரவாதம் பூகோளமயமாகியுள்ளது. இந்து சமுத்திர வலயம் சமதான வலயமாக இருக்கிறது. நாம் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். நாம் இணைந்து செயற்படுவதன் மூலமே இதனை சாதிக்க முடியும். இரு நாடுகளினதும் தேவைகளை உணர்ந்து சமுத்திர பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
தமது மக்களின் கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பு இரு நாடுகளுக்கும் இருக்கிறது. இரு நாட்டு உறவும் நெருக்கமும் மேலும் பலமடைய வேண்டும்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். தலைமன்னாருக்கான ரயில் பாதை திறக்கப்பட இருக்கிறது.
சிங்கள தீவுக்கு பாலமமைப்போம் என சுப்ரமணிய பாரதியார் கவிதை பாடியிருந்தார். இலங்கையுடன் சமாதானப் பாலம் அமைப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். எமது இரு நாடுகளுக்குமிடையிலான அந்நியோன்னிய நற்புறவை பலப்படுத்துவதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்.