துனிஷியாவின் தலைநகர் ட்யுனீஷ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 17 பேர் வெளிநாட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் வானொலி தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் மத்திய ட்யூனிஷில் நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்திருக்கும் பார்தோ அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது, நாடாளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த விவாதம் நடந்துகொண்டிருந்தது. தாக்குதலையடுத்து நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
"பார்தோ அருங்காட்சியகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்திருக்கிறது" என உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது அலி அரோவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ஏ.கே ரக துப்பாகிகளை வைத்து தாக்குதலை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
அருங்காட்சியகத்திலிருந்து பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டாலும், சிலர் இன்னும் உள்ளே சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் அருங்காட்சிகத்தினுள் நுழைந்துள்ளர் என முகமது அலி அரோவி தெரிவித்துள்ளார்.
பழங்காலக் கலைபொருட்கள் நிறைந்த அந்த அருங்காட்சியகம் ட்யூனிஷ் நகரில் சுற்றுலாப் பயணிகள் தேடிவரும் இடமாக இருந்துவந்தது.
அருகில் உள்ள லிபியாவில் நிலைமை ஸ்திரமின்றிக் காணப்படுவதால், துனீஷியாவிலும் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
பெரும் எண்ணிக்கையிலான துனீஷியர்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் நடக்கும் சண்டையில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் நாடு திரும்பினால், இங்கும் தாக்குதலை நடத்தலாம் என அஞ்சப்படுகிறது.
பெரிதும் சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் அந்த நாட்டுக்கு இந்த தாக்குதல் பெரும் பாதிப்பாக பார்க்கப்படுகின்றது.