நினைவு தினம் மார்ச் 30
2004 ஆம் ஆண்டு இதே மார்ச் - மாதம்தான் கிழக்கு மாகாணத்தின் தனித்துவக் குரல்கள் ஓங்கி ஒலித்த மாதமாகும். சுமார் 6 ஆயிரம் போராளிகள் ஆயுத வன்முறையைக் கைவிட்டு ஜனநாயகப் பாதையில் பயணிக்க வரலாறு அவர்களை நிர்ப்பந்தித்தது. இந்த தனித்துவக் குரல்களை பூண்டோடு அழித்துவிட்ட பாசிசப் புலிகள் தங்கள் கொலைவெறியை கட்டவிழ்த்து விட்டனர். தமிழ்த்தேசியமா? கிழக்கின் தனித்துவமா? என்ற கன்னை பிரிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் நின்ற போது எங்கள் ராஜன் சத்தியமூர்த்தி கிழக்கின் தனித்துவத்திற்காக நிமிர்ந்து நின்று தன்னுயிரை ஈந்தார்.
கிழக்கு மாகாண மக்களின் தனித்துவ அரசியலுக்காக உறுதுணையாக நின்ற சத்தியமூர்த்தி அவர்கள் சிந்திய உதிரத்தில் இருந்துதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கின்ற தனித்துவக் கட்சி உதயமானது. ஒருசில வருட காலத்தினுள் இலங்கை அரசியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த புதிய வரலாற்றை ரி.எம்.வி.பி. படைக்க சத்தியமூர்த்தி போன்றவர்களின் தொடர்ச்சியாக வந்த சிந்தனையே காரணமாகும். ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை புலிகள் கொலைசெய்ததின் ஊடாக எதை சாதிக்க நினைத்தார்களோ அது கிழக்கு மண்ணில் வேகவில்லை. அவரைக் கொன்றது மட்டுமன்றி புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து சன்னதமாடினர் புலிகள்.
பிணந்தின்னிப் பிரபாகரனின் அந்த வெறியாட்டம் இன்று முடித்துவைக்கப்பட்டமைக்கும் கிழக்கு பிளவை அணுகுவதில் யாழ்ப்பாண மேலாதிக்கம் காட்டிய சண்டித்தனமே அத்திவாரமிட்டது . ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை இழந்த அவரது குடும்பம் புலிகளின் கொலைக்கரத்தில் இருந்து தப்பிக்க மாதக்கணக்கில் வீடுவாசல்களை விட்டு காடுமேடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ நேரிட்டது. காடு மேடு மட்டும் அல்ல கடல்கடந்தும் கூட அவர்களது அலைச்சல்கள் தொடர்ந்தது.
வரலாறு விழித்துக்கொண்டபோது மட்டக்களப்பு மக்கள் அன்னாரது கனவை நனவாக்கியுள்ளனர். கிழக்கின் தனித்துவத்தின் அடையாளமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் களமிறங்கிய போது அன்னாரது மகளான சிவகீதா அவர்களை மட்டக்களப்பு மாநகர மேயராக்கி மகிழ்ந்தனர்; தொடர்ந்து வந்த கிழக்கு மாகாண சபைதேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சந்திரகாந்தனை கிழக்குமக்கள் முதலமைச்சராக்கி மகிழ்ந்தனர். மக்கள். தமிழ் முஸ்லிம் உறவின் நாயகனாகச் செயற்பட்ட ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை இன்று இனமத வேறுபாடுகளைக் கடந்து கிழக்கு மாகாண மக்கள் நினைவு கூருகின்றார்கள்.