2/11/2015

| |

நல்லாட்சிக்குக் குந்தகம்

எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லாட்சிக்கு குந்தகம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நிறுத்த ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால.டி.சில்வா நேற்று பாராளுமன்றத்தில் கோரினார்.
அரசியல் பழிவாங்கல்கள் மூலம் சுதந்திரக் கட்சி பலவீனமடையாது மேலும் எழுச்சியுறும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் தொடர்பில் எதிர்த்தரப்பு முன்வைத்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
2005 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அதிகளவில் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. சுதந்திரக் கட்சி அடங்கலான எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதோடு சொத்து சேதங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
தொழிலுக்குச் செல்ல இடையூறு செய்யப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுதந்திரக் கட்சி அலுவலகங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மட்டங்களில் அரசியல் பழிவாங்கல் நாடு பூராவும் இடம்பெற்று வருகிறது.
வத்தளை பிரதேசசபை தலைவர் தாக்கப்பட்டபோதும் பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படாமல் வேறு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சி பேதமின்றி தவறு செய்வோர் கைது செய்யப்பட வேண்டும். சொத்து, உயிர் சேதங்களுக்காக நஷ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிஹிந்தலை பகுதியில் சுதந்திரக் கட்சி ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். சுதந்திரக் கட்சி தொழிற்சங்க நடவடிக் கைகளுக்கு இடையூறு செய்யப்படுகிறது. இதனால் சுதந்திரக் கட்சி பலவீன மடையாது. மேலும் பலமடையும். அடுத்த தேர்தலில் எமது ஆதரவாளர்கள் தலைதூக்குவதை தடுக்க முயற்சி நடைபெறுகிறது. வன்முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
போலி குற்றச்சாட்டுக்களின் அடிப் படையில் எதிர்க்கட்சி அரசியல்வா திகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வழக்குகள் வாபஸ்பெறப்பட வேண்டும். இந்த வன்முறைகளுக்கு ஜனாதிபதியோ பிரதமரோ தொடர்பு என நாம் குற் றஞ்சாட்டவில்லை. கிராம, வேலைத்தள மட்டத்திலுள்ள ஐ.தே.க ஆதரவாளர்களே இவற்றின் பின்னணியில் இருக் கின்றார்கள். பொலிஸாரின் நடவடிக்கை குறித்து கவலையடைகிறோம். மோசமான சம்பவங்களின் போது குற்றவாளிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நல் லாட்சி குறித்து பேசும் அரசாங்கம் இவை குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
எமது ஆதரவாளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை தடுக்க அரசாங்கம் பொறி முறையொன்றை கொண்டு வந்திருப்பதை வரவேற்கிறோம். நல்லாட்சிக்கு உதவுவதற்காகவே இந்த விவாதம் நடத்தப்படுகிறது. நல்லாட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.
அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த வாறு அடியும் வாங்கிக்கொள்ள வேண்டுமா என எமது ஆதவாளர்கள் வினவுகின்றனர். இனியாவது இந்த வன்முறைகளை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.