முன்னைய அரசாங்கத்தின் மீதிருந்த அதிருப்தி காரணமாக புதிய அரசாங்கத்துக்கு வாக்களித்திருந்தோம். இருந்தும் புதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் 'ஜெனீவாத் தீர்மானமும் மெய்ந்நிலையும் அரசியலும் ஒரு நோக்கு' என்றும் நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை குறித்து முழுமையான ஐ.நா. விசாரணை வேண்டும். அரசாங்கம் கூறுவது போல உள்ளக விசாரணை எவ்வித பயன்களையும் எமக்குத் தராது. அதன் மேல் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை கவலைக்குரியது. தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும் என்று தெரிவித்தார்.