2/26/2015

| |

சிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல !

அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளி யேறியவர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கும் அரசாங்கம், தன்னை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதானது அரசாங்கத்தின் நேர்மையின்மையை காட்டுகிறது என முன்னிலை சோஷலிச முன்னணியின் தலைவர் குமார் குணரத்தினம் தெரிவித்துள்ளார் .
OLYMPUS DIGITAL CAMERAநேற்று வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தும் என்னை நாடு கடத்த இந்த அரசு முனைகிறது.
எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறியவர்களில் நானும் ஒருவன். நாட்டை விட்டு வெளியேறிய பலர் வெவ்வேறு பெயர்களையும் அடையாளத்தையும் பயன் படுத்தினர்.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நானும் வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தினேன் என்பதை மறைக்க விரும்பவில்லை. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07 ஆந் திகதி கடத்தப்பட்ட நான், சர்வதேச அமைப்புகளின், அரசாங்கங்களின் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டேன் .அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்க அவர்களும் எனது கடத்தலை கண்டித்து அறிக்கை ஒன்று விட்டிருந்தார்.
நான் இரட்டை பிரஜா உரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை. நான் எனது அவுஸ்திரேலிய பிரஜா உரிமையை இரத்து செய்து, நான் பிறந்து வளர்ந்த, படித்த, அரசியலில் ஈடுபட்ட எனது நாடான இலங்கையின் பிரஜா உரிமையை பெற விரும்புகிறேன்.
எனது இலங்கை பிரஜா உரிமை உறுதிப்படுத்தப்படும் வரை, அவுஸ்திரேலிய பிரஜா உரிமையை இரத்து செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் மறுக்கின்றது. சில கிழமைகளுக்கு முன்னர் இலங்கை பிரஜா உரிமையை பெறுவதற்காக நான் விண்ணப்பித்திருந்தும் எனக்கு எது வித பதிலும் கிடைக்கவில்லை.
அதே வேளை, சிங்கப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட, தற்போதைய அரசின் கூட்டாளியான அர்ஜுன் மகேந்திரனுக்கு இலங்கை பிரஜா உரிமையை வழங்கியுள்ளது தற்போதைய அரசு. முன்னைய இராணுவ அதிகாரி சரத் பொன்சேகாவிற்கு முன்னர் மறுக்கப்பட்டிருந்த அரசியல் உரிமை மீள கையளிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்க அவர்களுக்கு மீண்டும் அவரது பதவி கொடுக்கப்பட்டது. இவ்வாறான தெரிவு செய்யப்பட்ட நிர்வாகமானது ஜனநாயகத்திற்கு முரணானதாகும் .
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ரணில் -மைத்ரி அரசாங்கத்தை ஆதரிப்பவர்களுக்கு நீதியும் உரிமையும் வழங்குவதும், அரசை விமர்சிப்பவர்களை சிறையில் அடைப்பதும் நாடு கடத்துவதும் நல்லாட்சியல்ல.