பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும், நடிகர் கமல்ஹாசனும் அரசியலுக்கு வர வேண்டும் என எழுத்தாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் விடுத்துள்ள அழைப்பு:
இது திரைப்பட நட்சத்திரங்கள் கட்சிகளில் சேர்கிற, சேரவேண்டும் என அழைக்கப்படுகிற காலம். திரைத்துறையைச் சேர்ந்த சிலரை அரசியலுக்கு வருமாறு உண்மையாகவே அழைக்கலாம் எனத் தோன்றியது. அரசியலுக்கு வரவேண்டும் என்றால் கட்சிகளில் சேரவேண்டும் என்று பொருளல்ல. கட்சி சாராத அரசியல் தளத்தில் அவர்கள் செயல்படவேண்டும்.
திரை இசை உலகில் தேச எல்லைகளைக் கடந்து சாதனை புரிந்துவருபவர் ஏ.ஆர். ரகுமான். சமய நல்லிணக்கத்துக்கு தனது இசையின்மூலம் மிகப்பெரும் பங்களிப்பை அவரால் செய்யமுடியும். திரைப்படங்களுக்குப் பின்னணி இசை அமைப்பதிலும், பாடல்களுக்கு மெட்டுப் போடுவதிலும் தன் ஆற்றலை அவர் முடக்கிவிடக்கூடாது. இந்தியாவில் தற்போது மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சமயச் சார்பின்மை என்ற வாழ்க்கை முறையை மீட்டெடுக்க தனது இசையைப் பயன்படுத்தினால் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
தனித்துவமான நடிப்பின்மூலம் இந்தியா முழுவதும் அறியப்படுபவர் கமல்ஹாசன். திரைத்துறையில் இவர் தொடாத பிரிவே இல்லையென்கிற அளவுக்குத் திறமைகொண்டவர். இலக்கியத்திலும் பொதுப் பணிகளிலும் ஆர்வம் கொண்டவர். முற்போக்கான கருத்துகளைச் சொல்லத் தயக்கம் காட்டாதவர். பிரதமரின் அழைப்பை ஏற்று தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்திருக்கிறார். தமிழகத்தில் அதிகரித்துவரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகப் பொது மனசாட்சியைத் திருப்புவதில் கமல்ஹாசன் உதவமுடியும். வாக்குகளை மட்டுமே குறிவைத்து செயல்படும் அரசியல் கட்சிகள் செய்ய முடியாததை தனி மனிதராக அவர் சாதிக்க முடியும். எனவே, இந்த இருவரும் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புவதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.