2/26/2015

| |

பங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவு

பங்களாதேஷின் எதிர்க்கட்சித் தலைவி காலிதா ஸியாவை  கைதுசெய்வதற்கான பிடியாணையை பங்களாதேஷிலுள்ள நீதிமன்றம் ஒன்று இன்று புதன்கிழமை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஊழல் சம்பந்தமான வழக்கில் இவர் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமையை தொடர்ந்து, இந்த உத்தரவை டாக்காவிலுள்ள நீதிமன்றம் பிறப்பித்துளளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.   தர்மப்பணிக்கான நிதியில் பல ஆயிரக்கணக்கான டொலர்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டை  பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவர் மறுத்துள்ளார். பிரதமர் ஷேக் ஹஸினா அரசாங்கத்துடன் இவரது கட்சி பாரிய மோதலில் ஈடுபட்டுள்ளது. புதிய தேர்தலுக்கு  பிரதமர் ஷேக் ஹஸினாவை  அறிவிக்க வைக்கும் முகமாக பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து தடைகளை  ஏற்படுத்துமாறு கடந்த மாதம் தனது ஆதரவாளர்களிடம் காலிதா ஸியா  கோரியிருந்தார். இந்த நிலையில், நாடு பூராகவும் இடம்பெற்ற மோதலில் குறைந்தபட்சம் 100 பேர் மரணமடைந்திருந்தனர். பங்களாதேஷ் தேசியவாத கட்சி, மோசடி நடக்கும் என்று கூறி ஜனவரி -2014 இல் தேர்தலை பகிஷ்கரித்திருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.