2/24/2015

| |

முஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகாண மக்களுக்கான நிர்வாக பணிகள் ஸ்தம்பிதம்

DSC_0005கிழக்கு மாகாண சபை தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீறியுள்ளதாகவும், ஸ்தம்பிதம் அடைந்த கிழக்கு மாகாண சபையானது மக்களுக்கான பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்காக முதலமைச்சரை மாத்திரம் நியமிப்பதற்கே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 14 பேரினதும் விருப்பத்துடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 06 பேரும் இணைந்து அனுமதி வழங்கினோம் என கிழக்கு மாகாண கல்வி, காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் நியமிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை தொடர்பாக அம்பாறையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் அங்கு கூறுகையில், கிழக்கு மாகாண சபை கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியே ஆட்சி செய்து வருகின்றது. அதுமட்டுமல்ல இங்கு வாழுகின்ற மூவின மக்களுக்கு சிறந்த அபிவிருத்திகளை செய்து வரும் நாங்கள் இன உறவுக்காகவும் பணியாற்றி வருகின்றோம்.
2015 ஆண்டுக்குரிய கிழக்கு மாகாண சபைக்கான வரவு-செலவு திட்டத்தினை முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சமூகளிக்கவில்லை. இதனால் இரண்டு முறை சபை நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது. 2014 டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட வேண்டிய வரவு – செலவு திட்டம் 2015 பெப்ரவரி 10ஆம் திகதியே நிறைவேற்றப்பட்டது. அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் வழங்கல் பிரச்சினை, ஏனைய நிர்வாக செயல்பாடுகளை கருத்தில் கொண்டே புதிய முதலமைச்சராக ஹாபீஸ் நஸீர் அவர்களை நியமித்து அன்று அமைச்சுக்குரிய வரவு – செலவு திட்டத்தினை சமர்ப்பிக்க அனுமதித்தோம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரமஜெயந்த ஆகியோர்களின் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியைச் சேர்ந்த 14 கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் விருப்பத்தின் பேரில் கிழக்கு மாகாணத்திற்குரிய முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஹாபீஸ் நஸீர் அவர்களை நியமிப்பது, வரவு – செலவு திட்டத்தினை நிறைவேற்றி விட்டு மீண்டும் கொழும்பில் ஒன்று கூடி கிழக்கு மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியவற்றிற்கு அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றுதான் தீரமாணிக்கப்பட்டது.
ஆனால் முதலமைச்சரை நியமித்து விட்டு நாங்களே கிழக்கில் எல்லாம் என்று அங்கும் இங்கும் பேச்சு வார்த்தை நடாத்தி வருகின்றனர் இது தொடர்பாக இது வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமைகளுடனோ, எங்களிடமோ கலந்துரையாடவும் இல்லை. ஆலோசனைகளை பெறவும் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை தொடர்பில் ஏழனம் செய்வது கவலைக்குரிய விடயமாகும்.
ஒப்பந்தம் செய்யும் விடயங்களில் விசுவாசத்தன்மை இருக்க வேண்டும். கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்தால் அதனை மீறக்கூடாது. இன்று கிழக்கு மாகாண சபை நிர்வாக செயல்பாடுகள் குழப்ப நிலையில் காணப்படுகிறது. கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினை தனிப்பட்டவர்கள் ஆளுவதற்கு எத்தனிக்கின்றனர். இதற்கு ஒரு போதும் நாங்கள் அணுமதிக்கமாட்டோம்.
முஸ்லிம் காங்கிரஸின் இந்த செயல்பாடுகளினால் கிழக்கு மாகாண மக்களுக்கான நிர்வாக பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன், அபிவிருத்தி வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மூவினங்களினது இன உறவுக்கு தியாகம் செய்து வரும் நாங்கள் கிழக்கு மாகாண சபை தொடர்பாக மிக விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமைகளுடன் பேசி முடிவெடுக்கவுள்ளோம் எனவும் அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் , அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்;.