2/23/2015

| |

'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்லிம் அமைப்பு

இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என்று சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்ற பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது.
இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களின் வெளியேற்றம் ஓர் இனச்சுத்திகரிப்பு என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பைச் சேர்ந்த எம்.எம். அமீன் தெரிவித்தார்.
வடக்கு முஸ்லிம்கள் தங்களின் அசையும் அசையா சொத்துக்களை அந்தந்த இடத்திலேயே விட்டுவிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் ஓர் இனச்சுத்திகரிப்பு என்று அமீன் சுட்டிக்காட்டினார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம் தங்களின் கோரிக்கையை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பைச் சேர்ந்த எம்.எம். அமீன் தமிழோசையிடம் கூறினார்.
கடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் எம்.எம். அமீன் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.