பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படும் வகையில் முன்னாள் ஜனாதிபதி செயற்படமாட்டார் என நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 58 இலட்சம் பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இது அவருக்குக் கிடைத் தனிப்பட்ட வாக்குகள் அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யார் போட்டியிட்டிருந்தாலும் பாரிய வாக்கு வங்கி அவர்களுக்கு இருந்திருக்கும். இது தனிப்பட்ட வாக்குகள் அல்ல என்றும் அவர் கூறினார்.
எமது சகோதரப் பத்திரிகையான டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார். செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- பொதுமக்கள் பாதுகாப்பு, கிறிஸ்தவ விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்?
பதில் :- நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கு பரிமாணம் ஒன்று உள்ளது. எமது ஆதரவாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர்.
இதனைத் தடுப்பதற்கு பாராளுமன்றத்தில் செய்யக்கூடிய மிகவும் பொருத்தமான நடவடிக்கை இதுவாகும். இதன் காரணமாகவே பொதுமக்கள் பாதுகாப்பு, கிறிஸ்தவ விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாம் கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முடிவு சாதகமான அம்சங்களையும் கொண்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளைக் கைதுசெய்து நீதிமன்றத்துக்கு நிறுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பிரதமரும் ஜனாதிபதியும் விசேட குழுவொன்றை நியமித்துள்ளனர்.
எமது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் எதிர்பார்ப்பும் அதுவே.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்னமும் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவில்லை. அரசாங்கத்தின் ஏனைய நடவடிக்கைகளுக்கு அமைய ஒழுங்குப் பத்திரத்தில் இந்த விடயம் உள்ளடக்கப்படும். இது கட்சித் தலைவர்களுடன் தொடர்புபட்ட விடயம். இது குறித்து அவர்கள் ஆராய்ந்து விவாதத்துக்கான நாளை ஒதுக்கவேண்டும். எதிர்க்கட்சி என்ற ரீதியில் இந்த விடயத்தை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விட்டோம். இனி சபையின் கைகளிலேயே உள்ளது.
கேள்வி :- புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் நல்லாட்சி தொடர்பிலும் நீங்கள் என்ன கருதுகிaர்கள்?
பதில் :- இதுவரை நடந்த விடயங்களை வைத்துக்கொண்டு நல்லாட்சி விடயத்தில் நம்மால் திருப்தியடைய முடியாதுள்ளது. நல்லாட்சி என்ற கொள்கை மக்கள் மத்தியிலும், கிராமங்கள் மத்தியிலும் நாம் திருப்தியடைய முடியாதுள்ளது. தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளைப் பார்க்கும்போது எமது கட்சி ஆதரவா ளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி என்ற விடயம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாலும் சில அமைப்பா ளர்களாலும் மதிக்கப்படவில்லையென்றே நாம் கருதுகின்றோம்.
ஆனால் நல்லாட்சி என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதுடன், மக்களிடையே பரப்பப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும். இதனைத் தடுப்பதற்கோ அல்லது முறியடிப்பதற்கோ நாம் விரும்பவில்லை. ஏன் எனில் நாம் நல்லாட்சியை விரும்புகின்றோம். நல்லாட்சி முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாம் மகிழ்ச்சியடைவோம்.
கேள்வி :- புதிய அரசியல் கூட்டணியொன்று எதிர்வரும் 18ஆம் திகதி உருவாகவிருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதியைத் தலைமையாகக் கொண்டு இது அமைக்கப்படவிருப் பதாகவும் கூறப்படுகிறது. இது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்?
பதில் :- முதலில் ஒரு விடயத்தை நான் கூறவேண்டும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 58 இலட்சம் பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இது அவருக்குக் கிடைத்த தனிப்பட்ட வாக்குகள் அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யார் போட்டி யிட்டிருந்தாலும் பாரிய வாக்கு வங்கி அவர் களுக்கு இருந்தி ருக்கும்.
இது தனிப்பட்ட வாக்குகள் அல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆளுமையுடைய, துணிச்சலான தலைவர் என்பதற்கு அப்பால் மக்கள் பால் ஈர்ப்பைக் கொண்ட தலைவராகவும் இருந்தார் என்பது உண்மையான விடயம். அவர் எப்பொழுதும் மக்களின் மனங்களிலும், இதயங்களிலும் இருந்தார். ஆனால் இது ஒரு அம்சம் மாத்திரமே. அதற்காக சுதந்திரக் கட்சியோ அல்லது ஐ.ம.சு.முவோ வாக்கு வங்கியை இழந்ததாக அர்த்தம் கற்பிக்க முடியாது. இதனாலேயே சில கட்சிகள் அவரை பிரதமர் வேட்பாளராகக் கொண்டுவர முயற்சிக்கின்றன.
இருந்தபோதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து உருவானவர் என்ற ரீதியில் கட்சி பிரிவதற்கு தான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார். அவருடைய தந்தையாரும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் கட்சிதாவியே சுதந்திரக் கட்சியை உருவாக்கியிருந்தனர். எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படும் வகையில் முன்னாள் ஜனாதிபதி செயற்பமாட்டார் என நாம் நினைக்கின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சிசார்பில் போட்டியிட விரும்பினால் அது தொடர்பில் காலத்துக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கப்படும். இது தீர்மானிக்கப்படவேண்டும். வாக்காளர்களைத் தெரிவுசெய்யும் குழுவை நாம் இன்னமும் நியமி க்கவில்லை. அதேநேரம் அவர் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதும் தெளிவாகத் தெரியாதுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் போட்டியிடுவதா இல்லையா என்பதை கட்சி தீர்மானிக்கும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் போட்டியிடு வதாகக் கூறினால் அது பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். தேர்தல் நெருங்கும்போதே இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு முன்னர் அது பற்றி எதுவும் கூற முடியாது.
கேள்வி :- எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு அல்லது சு.க பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டால் தேசிய அரசாங்கம் என்ற கொள்கை என்னவாகும்?
பதில் :- முத லில் சில விட யங்களில் நாம் தெளிவாக இருக்கவேண்டும். அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான போட்டியாகும்.
எனவே முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றால் தேசிய அரசாங்கத்துக்கான தேவை இல்லை. அதேபோல ஐ.தே.க அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றாலும் தேசிய அரசாங்கத்துக்கான தேவை இல்லை. சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கோ ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத பட்சத்திலேயே தேசிய அரசாங்கம் அமைக்கவேண்டிய தேவை ஏற்படும்.
அவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே கட்சிகளுடன் கலந்துரையாடி தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். எனினும், தற்பொழுது இருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் செளகரியமான வெற்றியைப் பெறும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
கேள்வி :- அமெரிக்கா உட்பட 91 நாடுகளில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை எந்தவித பிரச்சினையுமின்றி முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் மாத்திரம் ஏன் இது பிரச்சினையான விடயமாகவுள்ளது?
பதில் :- இந்த அரசியலமைப்பை உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று ஜனாதிபதிக்கு அதி கூடுதலான அதிகாரங்களை வழங்கியுள்ளது. ஏனைய நாடுகளில் அரசியலமைப்பில் இல்லாத விடயங்கள் இங்கு காணப்படுகின்றமையே இதற்குப் பிரதான காரணம். அது மட்டுமன்றி விருப்புவாக்கு முறையும் கணிசமான பங்கைச் செலுத்துகிறது.
13வது திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் நிறைவேற்று ஜனாதிபதியின் பங்கு மிகவும் சிக்கலடைந்ததுடன், மிகவும் பொறுப்புவாய்ந்ததாக மாறியது. எனவே ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் எந்த அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் எந்த அதிகாரங்கள் தொடர்ந்தும் அவர் வசம் வைத்திருக்கப்பட வேண்டும் என்பது குறித்து தீர்மானிக்கவேண்டும்.
குறிப்பாக தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படவேண்டும். இது தொடர்நில் நாம் அவதானமாக இருக்கவேண்டும். நாம் வெறுமனே கண்களை மூடிக்கொண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் எனக் கூறமுடியாது.
கேள்வி :- தற்பொழுது அமுலில் உள்ள அரசியலமைப்பில் என்ன விடயங்கள் திருத்தப்படவேண்டும். ஏன் அவை திருத்தப்ட வேண்டும்? எப்பொழுது அவை திருத்தப்பட வேண்டும்?
பதில் :- பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது பற்றி ஆராய்ந்து வருகின்றோம். இது தொடர்பில் நாம் இன்னமும் இறுதி முடிவொன்றுக்கு வரவில்லை. எனினும், பல அதிகாரங்கள் மாற்றப்படவேண்டியு ள்ளது. உதாரணமாக ஜனாதிபதிக்கு அனைத்திலிருந்தும் விலக்களிப்பது.
இந்த விடயம் திருத்திய மைக்கப்பட வேண்டியது. இது தொடர்பில் சட்டத் துறை வல்லுனர்களுடனும், முன்னணி அரசியல்வாதிக ளுடனும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படுவது அவசியம். இது தொடர்பில் கடந்த கால அனுபவங்களை வைத்து தீர்மானிப்பது அவசியம். நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அதிகாரங்க ளால் பாதிப்பு ஏற்படாத வாறு இருக்க வேண்டும்.
இதனைவிட மற்றுமொரு முக்கியமானதொரு கேள்வி உள்ளது. அதுதான் எப்பொழுது இந்த அதிகாரங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது.
அப்படியாயின் இல்லாமல் செய்யப்படும் இந்த அதிகாரங்கள் யாருக்கு வழங்கப்படப் போகிறது? இந்த அதிகாரங்கள் ஒரு சபைக்கு வழங்கப்படப் போகின்றதா அல்லது ஒது தனி நபருக்கு வழங்கப்படப் போகின்றதா? நிறைவேற்று ஜனாதிபதியை இல்லாமல் செய்துவிட்டு மற்றுமொரு பிசாசை பாராளுமன்றத்தில் உருவாக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.
எனவே இந்த விடயங்கள் குறித்து நாம் அவதானமாக இருப்பதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியே முடிவுகளை எடுக்க வேண்டும்.
கேள்வி :- முன்னாள் ஜனாதிபதி உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லையென நீங்கள் அண்மையில் கூறியிருந்தீர்கள். இது பற்றி உங்கள் கருத்து
பதில் :- தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் ஏனைய உறுப்பினர்களைப் போல நானும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிகவும் சிரேஷ்ட உறுப்பினர். நான் ஒருபோதும் எனது கட்சியைக் காட்டிக்கொடுக்கவில்லை. நான் எப்பொழுதும் கட்சியுடனேயே இருந்து ள்ளேன்.
ஒருபோதும் கட்சியைவிட்டு விலகியதில்லை. இவ்வாறான நிலையில் எனது நேர்மை மற்றும் கட்சிக்கான நான் செய்த அர்ப்பணிப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையென நான் நினைக்கின்றேன்.
நான் இரண்டு தேர்தல் மனுக்களை கையாண்டுள்ளேன். ஒன்று ஹெக்டர் கொப்பேக்கடுவவுடையது மற்றையது மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடையது. விஜயகுமாரதுங்க, சமல் ராஜபக்ஷ, ஆரிய புலுகொட உள்ளிட்டவர்களின் மனுக்கள் உட்பட சுதந்திரக் கட்சியின் 15 மனுக்கள் சார்பில் நான் நீதிமன்றில் ஆஜராகி யுள்ளேன்.
இந்த மனுக்களுக்காக நான் இலவசமாக ஆஜராகியிருந்தேன். இந்த வழக்குகளுக்காக எனது முழு வளத்தையும் எனது நேரத்தையும் செலவிட்டிருந்தேன். அதன் பின்னர் கட்சியின் உறுப்பினரா னேன்.
கட்சியைவிட்டு ஒருபோதும் விலகிச்செல்லவில்லை.
எனக்கு உரிய அங்கீகாரம் கட்சிக்குள் கிடைக்காதபோதும் கட்சியிலிருந்து விலகிச்செல்லாமல், கட்சியைக் காட்டிக்கொடுக்காமல் கட்சியுடனேயே இருந்தேன்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட எனது நிலைப்பாடு ஒரேமாதிரியே இருந்தது. ஒவ்வொரு முறையும் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சி வேட்பாளரை நிறுத்தும்போது அதற்கு நான் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கியிருந்தேன்