2/08/2015

| |

படைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்பெறாது; யாழில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் -

வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலுமுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்பதுடன், இராணுவக் குறைப்பையும் மேற்கொள்ளப்போவதில்லை எ ன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். வடமாகாண பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக  ஆராய்வதற்காக அங்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர், நேற்று வெள்ளிக்கிழமை பலாலியில் உள்ள யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகத்தின் முப்படையினரையும் சந்தித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். பிற்பகல் 2 மணியளவில் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்துக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர், அங்கு அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த விசேட மேடையிலிருந்து படையினருக்கு மத்தியில் உரையாற்றினார். இதன்போது கூட்டுப்படைகளின் தளபதியும் முப்படைகளின் தளபதிகளும் கலந்துகொண்டிருந்தனர். இங்கு முப்படையினருக்கு மத்தியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; நீங்கள் வெற்றிபெற்ற தேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு எம்மிடம் உள்ளது. தமிழ், சிங்களம் ,முஸ்லிம் என நாட்டின் சகல இன மக்களின் சுதந்திரத்திற்காகவே இராணுவத்தினர் போராடினர். பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் உங்களுக்காக என்னால் முடிந்த உயரிய சேவைகளை வழங்குவேன். இதேவேளை, தேசிய பாதுகாப்பு என்பது முக்கியத்துவமான விடயமாகும். அதனைப் பலப்படுத்துவது தொடர்பாக இராணுவத்தினரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள நாம் தயார். கடந்த காலங்களில் பாதுகாப்பில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவோம். யுத்தகாலத்தில் இராணுவ வீரர்களை எம்மில் ஒருவராகவே கருதினோம். ஆனால் கடந்த ஆட்சியில் இராணுவத்தினர் மக்களிடையே இருந்து அந்நியப்படுத்தப்பட்டிருந்தனர். இராணுவ வீரர்களான நீங்களும் இதனை உணர்ந்திருப்பீர்கள். இந்நிலையில் உங்களுக்கும் எங்களுக்கும் இடையேயான உறவின் இடைவெளிகளை இனி குறைக்க முயற்சிப்போம். கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விதமான செய்திகள் வெளியாகின. தேசிய பாதுகாப்பு என்பது பரந்துபட்ட உணர்ச்சி பூர்வமான முக்கியத்துவம் மிக்க விடயமாகும். இதனை சுயநல அரசியலுடன் கலந்துவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். இதேவேளை வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. நிலத்தில்தான் முகாம்கள் அமையும். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படலாம். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் என்ற ரீதியில் ஆராய்ந்து தீர்வுகாணுவோம். ஆனால் அதற்காக இராணுவக் குறைப்பை மேற்கொள்ளத் தயாரில்லை என்றார்.  - See more at: http://www.thinakkural.lk/article.php?local/lypcqxxw8v9113098930a1f625953gdqgfc40597f933a2d617f798badgrjv#sthash.3lcGxU6b.dpuf