விளைவுகளை பற்றி சிந்திக்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் தலையிடாமல் தமிழ் மக்களை சுயவிருப்பத்துக்கமைய வாக்களிக்க அனுமதிக்குமாறு நான் விடுத்த வேண்டுகோளுக்கு முரணாக, ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளமை துரதிஸ்டமானதாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆனந்தசங்கரியால் புதன்கிழமை (31) அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'ஜனாதிபதித் தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்த தினத்திலிருந்து மூன்று வாரங்கள் கழித்தே தமிழத்; தேசியக் கூட்டமைப்பு எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது. வைத்திய பரிசோதனைக்காக இந்தியாவுக்கு சென்றிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடு திரும்பும்வரை காத்திருப்பதாக காரணம் கூறினார்கள். வைத்திய பரிசோதனைக்காக மூன்று வாரங்கள் தேவையில்லை என்பதோடு, அவருடன் தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து அல்லது அவரது கருத்தை தொலைபேசி மூலம் கேட்டு செயற்பட்டிருக்கலாம். பல சபைகளின் உறுப்பினர்களுடனும், முக்கிய பிரமுகர்களுடனும் கலந்தாலோசித்ததாக கூறியது ஒரு பொருத்தமான காரணம் அல்ல.
நியமனத்தாக்கல் தினம் தொடக்கம் இன்றுவரை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய அறிக்கைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேட்பாளர் யார் என்பதை அடையாளப்படுத்தியதோடு, 5 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களித்தும்விட்டார்கள். மக்களை ஏமாற்றுவது ஓரளவோடு இருக்க வேண்டும். மைத்திரியை ஆதரிப்பதாக அறிவித்தமையானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்ததற்கு மாறான விளைவையே ஏற்படுத்தும். ஏனெனில் பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், தமிழர்கள், சிங்களவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்ததோடு பல உறவுகளையும் இழந்துள்ளனர். சில குடும்பததினர் கண்ணீருடனும் போதிய உணவின்றியும் வாழ்கின்றனர். எனது குடும்ப வட்டத்தில் தன் இரு குழந்தைகள், கணவர் ஆகியோரை எண்ணி தினமும் கண்ணீரும் கம்பலையுமாக போதிய உணவின்றி வாழ்கின்றனர். விடுதலைப்புலிகளை தமிழ் தேசியத்தின் தலைமையாகவும், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகவும் ஏற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அநேகர், எதுவித இழப்புக்களை கொண்டிராதவர்களும் நிதியுதவி உட்பட விசேட சலுகைகளை பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆனால் ஏனைய பாதிப்புக்குள்ளானவர்கள் பல்வேறு துன்பங்களுடன் வாழ்கின்றனர். இக்குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் இவ்வாறான நிகழ்வில் மனநிறைவோடு கலந்துகொள்ளமாட்டார்கள்.
ஆகவேதான் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரத்துடனேயே கவனமாகவும் இவர்களை விழிப்படைய செய்யாமலும் அவர்களையே தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாய்ப்பை அவர்களிடமே விட்டுவிடும்படி முன்னெச்சரிக்கையாக கோரியிருந்தேன். சிலருக்கு எனது கோரிக்கை வேடிக்கையாக இருந்தாலும் பலர் அதிலுள்ள நியாயங்களை புரிந்துகொள்வர். இதை விழிப்படைய செய்தால் விளைவுகள் பாராதூரமாக அமையும். பாதிப்படைந்தவர்களை சாந்தப்படுத்துவதற்கு கூட்டமைப்புக்குள்ள ஒரேவழி தமக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தற்போது ஒரு தொடர்பும் இல்லையென்றும், விடுதலைப் புலிகள் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டார்கள் என்றும் பிரகடனப்படுத்துவதே.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண்பது என்பது புதிதாக எவராலும் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல. ஈழக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலிருந்தே பொருத்தமான ஓர் தீர்வை முன்வைத்தால் அதை பரிசீலிக்க தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களால் என்றோ தெரியப்படுத்தப்பட்ட விடயமாகும். எனது உறுதியான கருத்து என்னவெனில், சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன் ஆகியோரால் மட்டும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதென்பதையும் கூட்டமைப்பில் இணைந்துள்ள ஏனைய கட்சி தலைவர்களும் கலந்து முடிவுகளை மேற்கொள்வதே சிறந்ததாகும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.