ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் இன்று (16) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார். இன்று நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தின் போது இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்று இருவருக்குமிடையில் நடைபெற்றதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சமிந்த சிரிமல் வத்த தெரிவித்தார்.
இதனூடாக சுதந்திரக் கட்சித் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினைக்கு முடிவு காணப்படுவதாக சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி மத்திய குழு உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்சித் தலைவராக கடந்த 11 ஆம் திகதி அறிவித்திருந்தனர். ஆனால் சுதந்திரக் கட்சி மத்திய குழுவின் மற்றொரு தரப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சி தலைவராக்கும் பிரேரணையை நிறைவேற்றி அவரை தலைவராக அறிவித்திருந்தனர்.
இந்த இழுபறி நிலைக்கிடையில் மேலும் பல சுதந்திரக் கட்சி முன்னாள் அமைச்சர்கள் எம்.பிக்கள் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை தெரிவித்து அரசுடன் இணைந்து கொண்டனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுதந்திரக் கட்சி மத்திய குழு உறுப்பினரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ்.பி. நாவின்ன கூறியதாவது, சுதந்திரக் கட்சி தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது. தலைமை பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி மத்திய குழு உறுப்பினர்கள் 53 பேரில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைவராக நியமிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதேவேளை கட்சி போசகர்களாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும், சந்திரிகா குமாரதுங்கவும் செயற்பட இருப்பதாக அறிய வருகிறது.