1/16/2015

| |

பெரியாரும் உழுது களை பிடுங்கிய மண்ணிலா இது நடந்தது!!!

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி: -பிரான்ஸ் (16-01-2015)



பெருமாள் முருகன் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘சாதியும் நானும்’ எனும் கட்டுரைத் தொகுப்பை மையமாக வைத்து எமது 21 வது ‘வடு’ வில் ஒரு கட்டுரையும் எழுதப்பட்டது. பெருமாள் முருகன் சாதியம் குறித்த பல்வேறு கட்டுரைகளையும் எழுதியவர். இந்து பாசிச சக்திகளின் மிரட்டல்களாலும், அச்சுறுத்தல் காரணமாகவும் தான் எழுதுவதை நிறுத்திக்கொள்வதாகவும், தன்னால் எழுதப்பட்ட அனைத்தையும் மீளப் பெற்றுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். இவ்வறிவித்தலானது இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியாகிய எமக்கு மிகவும் வேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்து பரிவாரங்களின் வேள்வித் தீயால் அரண் அமைத்து ஆட்சி புரியும் பிரதமர் மோடி மீதா இதற்கான குற்றத்தை சுமத்துவது!
மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியினால் ஆன புத்திகெட்ட செயல் இதுவென்றா நாம் குற்றம் சுமத்திட முடியும் !!
தந்தை பெரியாரும் உழுது களை பிடுங்கிய மண்ணில் அல்லவா இது வேர்கொண்டுள்ளது !!
பெரியாரின் பாசறையில் வளர்ந்தவர்கள் நாம் என சொல்பவர்கள் மௌனம் சாதிப்பதையே எம்மால் மன்னிக்க முடியாதுள்ளது.
தமிழையே சுவாசிப்பவன்! இலக்கியத்தின் காவலன்! என போற்றப்படும் கருணாநிதியின் முன்னால் இச்சம்பவம் நடந்திருப்பதை எவரால்தான் நம்பமுடியும்!
பெருமாள் முருகன் அவர்களுக்கு நிகழ்ந்த எழுத்துச் சுதந்திர அச்சுறுத்தலுக்கு எதிரான எமது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ் நாட்டில் உள்ள மனித உரிமைவாதிகள் இலக்கியவாதிகள் அனைவரும் இதற்கெதிரான சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பெருமாள் முருகன் அவர்களின் எழுத்துப் பணி தொடர்வதற்கான உளவியல் பலத்தையும் நாம் வழங்க வேண்டும்.
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி: -பிரான்ஸ் (16-01-2015)