1/20/2015

| |

கி.மா.சபை ஊழியர்களுக்கு மீண்டுவரும் செலவீனத்தில் சம்பளம்

கிழக்கு மாகாண சபையைச்சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கு மாகாண சபையின் மீண்டுவரும் செலவீனத்தின் ஊடாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவுக்கே பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுதிட்டத்துக்கான அங்கிகாரம் கிழக்கு மாகாண சபையினால் இதுவரை வழங்கப்படாதால் கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்க முடியாத நிலை உருவாகியிருந்தது.

2015 ஆண்டின் வரவு- செலவுத்திட்டத்துக்கான அங்கிகாரம் வழங்கப்படாமையினால் சம்பளத்தையும், ஏனைய கொடுப்பனவுகளையும் நம்பி வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களும் ஏனைய வருமானம் பெற்றுவருவோரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.  

கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மாகாண சபையின் அங்கிகாரத்துக்காக முதலமைச்சரினால் கடந்த டிசெம்பர் மாதம் 01ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன.

இந்த வரவு- செலவு திட்டம் மீதான  வாக்கெடுப்பு நடைபெறவிருந்த இறுதி வேளையில் முஸ்லிம் காங்கிரஸின் குழுத் தலைவர் ஜெமீல், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் தவிசாளரையும், முதலமைச்சரையும் அழைத்து வாக்கெடுப்பு நடாத்துவதற்கு இரண்டு வாரகால அவகாசம் தேவை எனக் கோரினர்.

இந்தகோரிக்கையை எல்லா கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டதையடுத்து கிழக்கு மாகாண சபையமர்வு இன்று செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
- See more at: http://www.tamilmirror.lk/137985#sthash.WXE5H6dD.dpuf