இராணுவத்தின் எண்ணிக்கை எக்காரணத்தைக் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது என்றும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிகள் தொடர்ந்தும் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என்றும் இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் ஜயவீர மேலும் விளக்கமளிக்கையில் :-
இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என்று தொடர்ச்சியாக பலர் கேள்வி எழுப்புகின்றனர். இராணுவத்தின் எண்ணிக்கை எக்காரணத்தைக் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது நாட்டின் அபிவிருத்தி உட்பட பல்வேறு தேவைகளுக்காக கடந்த காலங்களில் சுமார் 20 ஆயிரம் பேர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் வழக்கம் போன்று முன்னெடுத்த பணிகள் தொடர்ந்து; அவ்வாறே முன்னெடுக்கப்பர்.
அதேபோன்று அளுத்கம மற்றும் பேருவலை பிரதேசங்களின் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சமபவத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் புணரமைப்பு பணிகள் நிறுத்தப்படும் என்று பரவலாக கூறப்பட்டுள்ளன அவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மைகளும் கிடையாது ஏனெனில் தொடர்ந்து; அந்த பணிகளும் முன்னெடுக்கப்படும்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 223 வீடுகளில் 213 வீடுகள் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன மேலும் 10 வீடுகளே புனரமைக்கப்படவுள்ளன. அதேபோன்று 83 கடைகளில் 75 கடைகள் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் 08 கடைகளே புனரமைக்கப்படவுள்ளன அவை வெகு விரைவில் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்டும் என்றார்.