மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இன்று இலங்கை வருகிறார். இன்று காலை 8.30 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையும் பரிசுத்த பாப்பரசருக்கு விமான நிலையத்தில் அரச வரவேற்பளிக்கப்பட வுள்ளது.
இலங்கையின் புனிதர் அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராகத் திருநிலைப்படுத்தும் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றும் பரிசுத்த பாப்பரசர் வடக்கிற்கு விஜயம் செய்து மடுத்திருப்பதியில் விசேட வழிபாடொன்றை நடத்துவதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை சர்வ மதத் தலைவர்களைச் சந்திக்கும் பரிசுத்த பாப்பரசர் அங்கு விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
கொழும்பிலுள்ள வத்திக்கான் அப்போஸ்தலிக்கத் தூதரகத்தில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துகொள்ளும் பரிசுத்த பாப்பரசர் பேராயரில்லத்தில் கத்தோலிக்க ஆயர் பேரவையினரைச் சந்திக்கவுள்ளார். இச் சந்திப்பில் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மறை மாவட்டங்களையும் பிரதிநிதித்து வப்படுத்தும் ஆயர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனைத் தவிர, பரிசுத்த பாப்பரசர் இலங்கையில் பங்கேற்கும் முக்கிய நிழ்வுகளில் இந்தியா, பிலிப்பைன்ஸ் உட்பட சர்வதேச நாடுகளின் கர்தினால்கள், ஆயர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இன்று காலை 8.30 மணிக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவார்.விமான நிலையத்தில் பரிசுத்த பாப்பரசருக்கு மகத்தான அரச வரவேற்பளிக்கப்படுவதுடன் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஆயர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
பரிசுத்த பாப்பரசர் அவர்கள் கட்டுநாயக்காவிலிருந்து விசேட ஊர்தி மூலம் கொழும்பு வத்திக்கான் அப்போஸ்தலிக்கத் தூதரகம் வரை அழைத்து வரப்படவுள்ளார். கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையிலான பிரதான பாதையின் இரு மருங்கிலும் மக்கள் பரிசுத்த பாப்பரசரை வரவேற்பர். தேசியக் கொடிகள் பரிசுத்த பாப்பரசரின் கொடிகள், கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் கொடிகள் என மக்கள் கொடிகளை அசைத்து ஆரவாரத்துடன் பரிசுத்த பாப்பரசருக்குத் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவுள்ளனர்.
கொழும்பு 07ல் உள்ள வத்திக்கான் தூதரகத்துக்குச் செல்லும் பரிசுத்த பாப்பரசர் அங்கு பரிசுத்த பாப்பரசரின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வார். அதனையடுத்து கொழும்பு பேராயர் இல்லத்தில் கத்தோலிக்க ஆயர் பேரவையைச் சந்திக்கும் பரிசுத்த பாப்பரசர் இலங்கையின் அனைத்து மறை மாவட்டங்களையும் சேர்ந்த ஆயர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
இன்று பிற்பகல் 5.00 மணியளவில் இலங்கையிலுள்ள சர்வ மதத் தலைவர்களையும் பரிசுத்த பாப்பரசர் சந்திக்கவுள்ளார். இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன் மதத் தலைவர்கள் மத்தியில் பரிசுத்த பாப்பரசர் சிறப்புரையொன்றையும் ஆற்றவுள்ளார். இச்சந்திப்பினையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பரிசுத்த பாப்பரசருக்குமிடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதன் போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை வருகை தொடர்பான முத்திரையொன்றும் இலங்கையின் புனிதராக திருநிலைப்படுத்தப்படவுள்ள அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரின் நினைவு முத்திரையுமே இங்கு வெளியிடப்படவுள்ளன. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை நினைவு கூரும் விசேட நாணயக் குற்றிகளும் இதன் போது வெளியிடப்படவுள்ளன.
நாளை 14 ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு தினமாகும். இலங்கைத் திருநாட்டிற்கான முதலாவது புனிதரை உத்தியோக பூர்வமாக உலக திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் அறிவிக்கும் நிகழ்வு அது.கொழும்பு காலி முகத்திடலில் பிரமாண்டமான முறையில் அமைக்கப் பட்டுள்ள அரங்கில் இலட்சோப இலட்சம் மக்கள் மத்தியில் அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளார் புனிதராக திருநிலைப் படுத்தப்படுவார். இது இலங்கை வாழ் கத்தோலிக்க மக்கள் வாழ்நாளில் கண்டிராத அரிய நிகழ்வாகும்.
இலங்கை மற்றும் சர்வதேச ஆயர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் நிறைவேற்றும் மாபெரும் கூட்டுத் திருப்பலியின் போது இந்த புனிதத்துவ திருநிலை இடம்பெறும். திருப்பலியில் கலந்து கொள்வதற்கு இலங்கையின் அனைத்துப் பங்கு மட்டங்களிலும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதால் நாடளாவிய சகல பங்குகளிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டு இறையாசீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். அதனையடுத்து பரிசுத்த பாப்பரசர் நாளை மடுத்திருப்பதிக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு வடக்கு, கிழக்கு மறை மாவட்டங்களின் ஏற்பாட்டில் மாபெரும் மத வழிபாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் பத்து இலட்சம் மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக மன்னார் மறை மாவட்டம் அறிவித் துள்ளது.இந்த வழிபாட்டு நிகழ்வையடுத்து கொழும்பு திரும்பும் பரிசுத்த பாப்பரசர் கொழும்பிலுள்ள வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதரகத்தில் தங்கி மறுநாள் காலை தமது அடுத்த திருயாத்திரையான பிலிப்பைன்ஸ் விஜயத்தை மேற்கொள்வார். பரிசுத்த திருத்தந்தை கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் போவலலானையில் முன்னாள் பரிசுத்த பாப்பரசர் 16வது ஆசீர்வாதப்பரின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்விக் கல்லூரியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.
பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்காக 24,000 மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வத்திக்கானிலிருந்தும் பாதுகாப்பு அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். காலிமுகத்திடல் விசேட திருப்பலியை யொட்டி அச்சுற்றுச் சூழல்களில் விசேட கமராக்கள் பொருத்தப் பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள் ளமையும் குறிப்பிடத்தக்கது. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் இலங்கைத் திருநாட்டிற்குப் பெரும் ஆசீராக அமையும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.