மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் குர்பான், அகீகா கடமைகளுக்கு தடை
இதற்கான ஷரத்துக்கள் உள்ளடக்கம்
எதிரணி அபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் முஸ்லிம்களின் குர்பான் மற்றும் அகீகா கடமைகளை தடை செய்வதற்கான ஷரத்து உள்ளடக்கப்பட்டுள்ளதாக சிங்கள முஸ்லிம் இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் இணைத்தலைவரும், மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பான ஆலோசகருமான அப்துல் காதர் மசூர் மெளலானா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, எதிரணி அபேசட்கர் நூறு நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளார். அவ்வேலைத்திட்டத்தில் 87 வது நாளில் உயிரினங்களை வதை செய்வதைத் தடுக்கும் சட்டங்கள் அமுல் படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஷரத்தின்படி முஸ்லிம்கள் ஹஜ் காலத்தில் குர்பான் கொடுப்பதும் பிறக்கின்ற பிள்ளைகளுக்கு அகீகா கொடுப்பதும் தடை செய்யப்படும். இது முஸ்லிம்களின் சமய கடமைகளில் கைவைக்கும் செயலாகும்.
இந்த ஷரத்தில் வதை செய்வதை தடுத்தல் என்ற சொல்லை பயன்படுத்தி முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கு எதிரணியினர் முயற்சி செய்கின்றனர். மாட்டையோ, ஆட்டையோ அறுப்பதே வதை செய்வது தான். ஆகவே அறுக்காமல் இக்கடமைகளை முஸ்லிம்கள் நிறைவேற்ற முடியாது.
அந்த நூறு நாள் வேலைத்திட்டம் மூன்று மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. சிங்கள, ஆங்கில மொழிகளில் காணப்படும் இந்த 87 வது ஷரத்து தமிழ் மொழியில் கிடையாது. இதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேநேரம் முஸ்லிம்களின் சமய கடமையில் கைவைக்கும் ஷரத்து மைத்திரியின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தும் சில முஸ்லிம் கட்சிகள் எதிரணி அபேட்சகருக்கு ஆதரவு நல்குவது அதிர்ச்சி அளிக்கின்றது. இந்த ஷரத்துக்கு எதிரணிக்கு ஆதரவு நல்கும் சிலர் வேறு விதமாகத் திரித்து விளக்கம் கூறுகின்றனர்.
அப்படியென்றால் இந்த ஷரத்து முஸ்லிம்களின் குர்பான் மற்றும் அகீகா கடமைகளை நிறைவேற்ற தடையாக அமையாது என்று எதிரணி அபேட்சகர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.