54.73 வீத வாக்குகளால் ஜனாதிபதி வெற்றியீட்டுவது உறுதி
சத்லங்கா அமைப்பினால் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மக்கள் கருத்துக்கணிப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 54.73 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 41ஆயிரத்து 629பேரிடம் நடத்தப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல் மூலம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 54.73 சதவீத வாக்குகளையும் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 40.02வீத வாக்குகளையும் பெறுவார் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 5.25சதவீதத்தினர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
இந்த கருத்துக்கணிப்பானது நவம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை காலை 8.30 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலே இந்த புள்ளிவிபரம் வெளியிடப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பூகோள விஞ்ஞான ஆய்வுப்பிரிவு பேராசிரியர் ஆர்.எம்.கே. ரத்நாயக்க தெரிவித்தார்.
சத் லங்கா திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையின் உத்தியோகபூர்வ வெளியீடு நேற்று கொழும்பு, கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த ஆய்வானது ஒரு இலட்சம் வாக்களர்களில் 277 பேரிடம் மேற்கொண்ட தகவலின் அடிப்படையில் கணிப்பிடப் பட்டுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 273 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள வாக்காளர் களிடம் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி கணிப்பிடப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்புகள் வீட்டுத் தலைவர் அல்லது அவரது மனைவி மற்றும் வாக்களிக்கத் தகுதி பெற்றோர்களிடம் மாத்திரமே பெறப்பட்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தொடர்பாக உங்களின் கருத்து, பொருளாதார மற்றும் சமூகம் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதனை தீர்ப்பதற்கு தற்போதைய அரசியலமைப்பை மாற்றியமைக்க வேண்டுமா?, அதனை தீர்ப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?, அடுத்த ஜனாதிபதியாக யார் வரவேண்டும் போன்ற கேள்விகள் அழைப்பாளியிடம் தொடுக்கப்பட்டன.
இந்த கேள்விகளை ஏற்றுக் கொண்ட வர்களிடம் மாத்திரமே கருத்துக்கணிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்படி கேள்விகளை புறக்கணிப்போர் அல்லது இது தொடர்பாக எவ்வித பதிலும் அளிக்காதவர்கள் கருத்துக்கணிப்பில் உள்Zர்க்கப்படவில்லை.
இலங்கையில் நிலையான தொலைபேசி பாவனையாளர்கள் 16இலட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கின்றனர். இவர்களில் 11இலட்சத்துக்கும் மேற்பட்டோர் நிலையான தொலைபேசியை கொண்டுள் ளதுடன் 5இலட்சத்துக்கும் மேற்பட்டோர் சி.டி.எம்.ஏ. தொலைபேசியை வைத்துள் ளார்கள். இந்த ஆய்வில் 2014ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்ப டையாக வைத்து கணிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே சிறிலங்கா டெலிகொம் விபரப்பட்டியலில் உள்ள நிலையான தொலைபேசி வாடிக்கையாளர்களிடம் மாத்திரமே தொலைபேசி கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பில் 4580 பேரிடமும், கம்பஹா 4,077, களுத்துறை 2,393, கண்டி 2786, குருநாகல் 3460 உட்பட நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் தொலைபேசியின் ஊடாக கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப் பட்டது. இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 2,398 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாக கருத்து தெரிவித்ததுடன் 1952 பேர் மாத்திரமே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வரவேண்டுமென்று கூறியுள்ளனர்.
அவ்வாறே, கம்பஹா 2,327, களுத்துறை 1,422, காலி 1,307, ஹம்பாந்தோட்டை 1,017, மாத்தறை 1,009, குருநாகல் 1,910, இரத்தினபுரி 1,452 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டுமென்று கூறியுள்ளனர்.
இவ்விதம் மொத்தமாக 41ஆயிரத்து 629 பேர்களில் 22ஆயிரத்து 782பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரவேண்டுமென்று தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது மொத்த சனத்தொகையில் 54.73 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்பது இந்த ஆய்வின் முடிவாகும்.
2015ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சத் லங்கா திட்டம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் பூகோள விஞ்ஞான ஆய்வுப்பிரிவு பேராசிரியர் ஆர்.எம்.கே. ரத்நாயக்க, சமூகப் புள்ளிவிபரவியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் சீ.எல்.கே. நவரத்ன, சிங்கள மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் சேனாதி ஹரிச்சந்திர, மற்றும் பொருளாதார விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் காமினி வீரசிங்க ஆகியோரின் மேற்பார்வையில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.