வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு கட்டளை பிறப்பிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கோரியுள்ளது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான கட்டளையையும் பிறப்புக்குமாறு ஜே.வி.பி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நேற்று திங்கட்கிழமை ஆணைக்கோர் மனுவொன்றை தாக்கல் செய்தது. கே.பி என்பவர் பல பெயர்களில் வெளிநாடுகளில் வாழ்ந்தவராவர். அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகிப்பதில் பிரதான பங்குவகித்தவர் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்க காலத்தில் மலேசியாவில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார். தற்போது அவர், முல்லைத்தீவில் சிறுவர் இல்லமொன்றையும் நடத்திவருகின்றார். அவரை, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரியுள்ள ஜே.வி.பி., தனது மேன்முறையீட்டு மனுவில் பொலிஸ் மா அதிபர்,இராணுவத்தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்; வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி உள்ளிட்ட எண்மர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளது. ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரசாரச் செயலாளருமான விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன் மனுவை எதிர்வரும் திங்கட் கிழமை 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு தீர்மானித்தது. சட்டவிரோத நிதிபரிமாற்றம், போதைப்பொருள் கடத்தல், 17 போலிப் கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தியமை , இலங்கை அரசிற்கு எதிராக ஆயுங்களை சேகரித்தமை, ஆட்களை கடத்தியமை , கொன்றமை என 24 மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/137972#sthash.hB8CB2FN.dpuf