எதிர்த்தரப்பிலுள்ள முனாப்பிக்குகள் கூறுவதை (நயவஞ்சகர்கள்) நம்பாதீர்கள். உம உரிமையுடன் முன்னோக்கிச் செல்ல எனக்கு ஒத்துழையுங்கள். அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்தில் நேற்று முன்தினம் (20) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லாவின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மழையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்திற்கு முன்னதாக ஜனாதிபதி அங்குள்ள மூவின மதஸ்தலங்களுக்கும் சென்று ஆசி பெற்றார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், அமைச்சர் அதாவுல்லாவை எனது சகோதரர் போல கருதுகிறேன். 2005 ல் கிழக்கிற்கு என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்டேன். புலிகளை ஒழித்து வடக்குடன் சேர்க்காது கிழக்கை தனி மாகாணமாக வைத்திருக்க கோரினார். நாம் அதை அப்படியே செய்து முடித்தோம்.
30 வருட யுத்தத்தினால் பள்ளியில் பாங்கு சொல்ல முடியாதிருந்தது. விவசாயம் செய்ய முடியாது மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. 2 மணி நேரத்தில் மத்திய கிழக்கிற்கு செல்ல மத்தள விமான நிலையமுள்ளது. உங்களது பகுதிக்கு ரயில் சேவை கொண்டு வருவது என யோசித்து வருகிறேன். மத்தளவுக்கு ரயிலில் செல்லலாம்.
பொய் பிரசாரங்கள் பரப்பப்படுகிறது. உங்களது பிரச்சினைகளை அமைச்சர் அதாவுல்லா எமக்கு முன்வைக்கிறார். இக்காலத்தில் நிறைய முனாபிக்குகள் இருக்கிறார்கள். முனாபிக்குகளுக்கு ஏமாறாதீர்கள் இரவு 11.30 மணிக்கு என்னுடன் அப்பம் சாப்பிட்டுவிட்டு மறுபக்கம் பாயும் முனாபிக்குகள் இருக்கிறார்கள்.
எதிர்தரப்பு கொள்கை பிரகடனத்தில் பசளை நிவாரணம் கிடையாது. நான் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய விடயங்கள் குறித்தே அதிலுள்ளது. 180 நாள் நிரந்தர நியமனம் வழங்கி உள்ளேன். அரச சேவையை குறைக்க தயாராகின்றனர். ஐ. தே. க. அன்று இதனை செய்ய முயன்றது. நான் அரச வளங்களை சேர்க்கையில் அவர்கள் அவற்றை தனியார்மயப்படுத்த முயல்கின்றனர். முனாபிக்குகள் கூறுபவை அனைத்தும் பொய்யானவை.
உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். 30 வருட இருண்ட யுகம் இப்போது கிடையாது. உங்கள் பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு முன்னேற்றப்படும். இனவாத அரசியல் வேண்டாம் தவறாக செயற்படாது புத்தியுடன் செயற்படுவோம். வசதியற்ற மக்கள் ஹஜ் செய்ய உதவுவேன் ஏனைய மதத்தினருக்கும் இதேபோன்று செய்வோம்.
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். கிழக்கு உதயம் உங்களது உதயமாகும். உங்கள் பிள்ளைகள் தான் உங்கள் செல்வம் அவர்கள் வழிதவறாமல் வாழ வேண்டும் என்னுடன் ஒன்று சேருங்கள்.
சம உரிமையுடன் முன்னோக்கு செல்வோம் என்னை நம்பலாம். நான் சொன்னதை செய்வேன் செய்வதை சொல்வேன். நாளை நமதே இந்த நாடும் நமதே. உங்களின் வாழ்வை ஒளிமயமானதாக்குவோம் என்றார்.